புதியதாக ஸ்கூட்டரை வாங்க போறீங்களா? இந்தியாவில் தற்போதைக்கு குறைந்த விலையில் கிடைக்கும் 5 ஸ்கூட்டர்கள்!! இதோ..
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பைக்குகளில் செல்வதை காட்டிலும் ஸ்கூட்டரில் பயணிப்பதே பெரும்பாலானோர்க்கு விருப்பமாக உள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்டைலிஷான தோற்றம் கொண்ட ஸ்கூட்டர்கள் பைக்குகளை காட்டிலும் குறைந்த விலையில் கிடைப்பதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லலாம்.

ஆனால் தொடர்ந்து அதிகரித்துவரும் பாகங்களின் விலைகளினாலும், போக்குவரத்து செலவுகளினாலும் ஸ்கூட்டர்களின் விலைகளும் கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இருப்பினும் தற்சமயம் இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் (ரூ.57,337- ரூ.61,977)
இந்தியாவில் தற்போதைக்கு மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்கூட்டராக டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் விளங்குகிறது. இருப்பினும் அசத்தலான தோற்றத்தை கொண்டிருக்கும் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஆனது ஸ்டாண்டர்ட், மேட் எடிசன் மற்றும் முதல் காதல் என்கிற 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இவை மூன்றிலும் அதிகப்பட்சமாக 5.4 பிஎஸ் மற்றும் 6.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 87.8சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இலகுவான எடை மற்றும் காம்பெக்ட் உடலமைப்பு உள்ளிட்டவை இந்த மலிவான டிவிஎஸ் ஸ்கூட்டரில் எளிமையான ஹேண்ட்லிங்கிற்கு வழிவகுக்கின்றன.

ஹீரோ பிளஷர் ப்ளஸ் (ரூ.64,900 - ரூ.74,810)
ஹீரோ மோட்டோகார்பின் இருசக்கர வாகனங்கள் சமீப வருடங்களில் ஏகப்பட்ட மாற்றங்களை பெற்றுள்ளன. இருப்பினும் தயாரிப்புகளின் விலைகளில் இந்த நிறுவனம் பெரியதாக அதிகரிப்பு கொண்டுவரவில்லை என்பதே உண்மை. இந்த வகையில் இன்னமும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஸ்கூட்டர்களுள் ஒன்றாக ஹீரோ பிளஷர் ப்ளஸ் விளங்குகிறது.

இந்த ஸ்கூட்டரில் ஹீரோ மோட்டோகார்ப் பொருத்தும் 110.9சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 8.2 பிஎஸ் மற்றும் 8.7 என்எம் டார்க் திறன் வரையில் வழங்கக்கூடியதாக உள்ளது. ஷீட் மெட்டல் சக்கரம், காஸ்ட் சக்கரம், பிளாட்டினம், எக்ஸ்டெக் எடிசன் மற்றும் எக்ஸ்டெக் எடிசன்-ஜூபிலியண்ட் மஞ்சள் என்கிற 5 விதமான வேரியண்ட்களில் பிளஷர் ப்ளஸ் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 (ரூ.65,700 & ரூ.66,351)
சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றொரு மலிவான டிவிஎஸ் ஸ்கூட்டர். ஆனால் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மாடலை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக விளங்குகிறது. அதேபோல் தோற்றத்திலும் இரண்டிற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுப்பாடுகள் உள்ளன. ஸ்டாண்டர்ட் & ஹிமாலயன் ஹை என்கிற 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஸ்கூட்டி ஜெஸ்ட் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 109.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 7.8 பிஎஸ் மற்றும் 8.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மாடலை போல் இதிலிலும் டிரான்ஸ்மிஷனுக்கு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 (ரூ.67,120 - ரூ.72,620)
மலிவான விலையில், அதேநேரம் தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்த ஸ்கூட்டராக ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 விளங்குகிறது. ட்ரம் ப்ரேக் அலாய் சக்கரம்-விஎக்ஸ், இசட்.எக்ஸ் ட்ரம், அலாய் சக்கரம்-இசட்.எக்ஸ், 100 மில்லியன் எடிசன் மற்றும் இசட்.எக்ஸ் டிஸ்க் என்கிற 5 விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.

பிளஷர் ப்ளஸ் ஸ்கூட்டரில் பொருத்தப்படுகின்ற அதே 110.9சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் மேஸ்ட்ரோ எட்ஜ்110 ஸ்கூட்டரிலும் வழங்கப்படுகிறது. கடந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் முந்தைய மாடலை காட்டிலும் செயல்திறன்மிக்கதாக மற்றும் அதிநவீன வசதிகள் கொண்டதாக உள்ளது.

ஹோண்டா டியோ (ரூ.70,166 - ரூ.75,110)
குறைந்த விலை மற்றும் கவர்ச்சிக்கரமான தோற்றம் இவை இரண்டையும் கொண்டிருப்பதால் இளம் தலைமுறையினர் மத்தியில் டியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாகவே ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் தடையில்லா இயக்கம் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவைகளாக பார்க்கப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணம், டியோ ஆகும்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சிவிடி கியர்பாக்ஸ் உடன் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8 பிஎச்பி மற்றும் 8.91 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டியோவின் டாப்-ஸ்பீடு மணிக்கு 83கிமீ என்கிறது ஹோண்டா.


Click it and Unblock the Notifications








