எரிபொருள் என்ஜின் 2-வீலர்ஸின் விற்பனை படிப்படியாக குறைகிறதா? வேகமெடுக்கும் எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் விற்பனை!!
எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தொடர்பான விபரங்கள் கிடைத்துள்ளன.

தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன பாகங்களின் விலைகளினாலும், அதிகரித்துவரும் எரிபொருள் விலைகளினாலும் இந்திய சந்தையில் வாகன விற்பனை சற்று குறைவாக இருந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் பல முன்னணி 2-வீலர் பிராண்ட்கள் விற்பனை சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் விற்பனை செய்யப்பட்ட வாகன பதிவுகளின் எண்ணிக்கை ஃபடா (FADA) எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்படுகிறது. இந்த வகையில் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள கடந்த 2022 ஜனவரி மாதத்திற்கான விபரங்களில் கடந்த மாதத்தில் மொத்தம் 10,17,785 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 2021 ஜனவரி மாதத்தை காட்டிலும் கிட்டத்தட்ட 13.44% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 11,75,832 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த சரிவிற்கு முக்கிய காரணம், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, டிவிஎஸ் & பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களது விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மாதத்தில் மொத்தம் 3,12,999 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதுவே 2021 ஜனவரியில் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சங்களை நெருங்கி இருந்தது. இந்த வகையில் இந்த முன்னணி 2-வீலர் பிராண்டின் விற்பனை 21.55% குறைந்துள்ளது.

இருப்பினும் இந்தியாவில் தற்போதைக்கு விற்பனையாகும் மொத்த 2-வீலர்களில் கிட்டத்தட்ட 30.75 சதவீதம் ஹீரோ மோட்டோகார்பின் தயாரிப்புகள் ஆகும். ஹீரோவிற்கு அடுத்து 2வது இடத்தில் வழக்கம்போல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தொடர்கிறது. ஹோண்டா பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 2,57,984 இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கூறியதுபோல், இதன் விற்பனையும் 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 15.95% சரிந்துள்ளது. ஏனென்றால் அந்த மாதத்தில் 3,06,940 ஹோண்டா 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹீரோ மோட்டோகார்பிற்கு அடுத்து ஹோண்டா இருசக்கர வாகனங்கள் கடந்த மாதத்தில் மொத்த விற்பனையில் 25.35% விற்பனையாகியுள்ளன.

3வது இடத்தில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1,64,072 ஆகும். இதன் விற்பனையும் 2021 ஜனவரியில் 1,77,854 ஆக இருந்தது. ஆனால் ஹீரோ, ஹோண்டா உடன் ஒப்பிடுகையில் டிவிஎஸ் -இன் விற்பனை ஓரளவிற்கு பரவாயில்லை, ஏனெனில் 2021 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் 7.75% மட்டுமே குறைந்துள்ளது.

இதேபோல் 4வது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் விற்பனையும் இந்த வருடம்-வருடம் ஒப்பீடுகையில் 9.49 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. 2021 ஜனவரியில் 1,31,689 பஜாஜ் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,19,198 யூனிட்களேயே பஜாஜ் விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து பெரிய இடைவெளியுடன் ஐந்தாவது இடத்தில் ராயல் என்பீல்டு உள்ளது.

இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 45,882 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது மற்றும் 7வது இடங்களில் சுஸுகி மற்றும் யமஹா முறையே 44,506 யூனிட்கள் மற்றும் 39,884 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. ஆனால் இவை மூன்றின் விற்பனையும் 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.

இவ்வாறு எரிபொருள் என்ஜின் இருசக்கர வாகனங்களின் விற்பனை குறைந்திருந்தாலும், எலக்ட்ரிக் 2-வீலர்ஸை விற்பனை செய்யும் பிராண்ட்களின் விற்பனை வெகு சிறப்பானதாக இருந்துள்ளது. அதிக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக ஹீரோ எலக்ட்ரிக் இந்த லிஸ்ட்டில் 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெறும் 1,680 ஹீரோ எலக்ட்ரிக் வாகனங்கள் விற்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 7,763 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

இந்த வகையில் ஹீரோ எலக்ட்ரிக் விற்பனை சுமார் 362.08% அதிகரித்துள்ளது. இதேபோல் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள ஒகினாவா மற்றும் ஆம்பியர் நிறுவனங்களின் விற்பனையும் முறையே 674.21% மற்றும் 349.68% என ஒரேடியாக அதிகரித்துள்ளது. புதிய யெஸ்டி பைக்குகள் கடந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த நிலையில், ஜாவா & யெஸ்டி பைக்குகளின் கடந்த மாத விற்பனை 2,346 யூனிட்களாக பதிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








