இனி அட்வென்ச்சர் பைக்குகளின் இராஜ்ஜியம் தான்!! அடுத்ததாக இந்தியா வரவுள்ள மாடல்கள்!
இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கான மார்க்கெட் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதை பற்றி நான் கூற வேண்டி இருக்காது என்றே நினைக்கிறேன். இதனை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் இந்திய சந்தையில் அடுத்ததாக விற்பனைக்குவர உள்ள அட்வென்ச்சர் பைக்குகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450
இந்தியாவில் ராயல் என்பீல்டின் வெற்றிக்கரமாக மாடல் என்று ஹிமாலயனை சொல்லலாம். நாட்டின் மலிவான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் இதன் ஆற்றல்மிக்க வெர்சன் 450சிசி-இல் தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹிமாலயன் 450 பைக்கின் சோதனை மாதிரிகளின் சோதனை ஓட்ட படங்களை சமீப காலமாக அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

தற்போதைய ஹிமாலயனில் இருந்து வேறுப்படும் வகையில் சற்று புதுமையான தோற்றத்தில், கூடுதல் வசதிகளுடன் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஹிமாலயன் 450-இல் புதிய 450சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 40 பிஎஸ் & 40 என்எம் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என கூறப்படும் இதனுடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படலாம்.

ஹீரோ 450சிசி அட்வென்ச்சர்
ஹிமாலயனை காட்டிலும் மலிவான எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, எக்ஸ்பல்ஸ் 200-ஐ காட்டிலும் செயல்திறன்மிக்கதாக, ஹிமாலயன் 450-க்கு நேரடி போட்டி மாடலாக விளங்கும் வகையிலான புதிய பிரீமியம் தர அட்வென்ச்சர் பைக்கை ஹீரோ நிறுவனம் வடிவமைத்து வருகிறது.

ஹீரோவின் டக்கர் ராலி மோட்டார்சைக்கிள் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இந்த புதிய மோட்டார்சைக்கிளின் முன்மாதிரி கடைசியாக 2020இல் காட்சி தந்திருந்தது. ஆனால் கடந்த 2 வருடங்களில் பல வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதால், நிச்சயமாக முன்மாதிரியை காட்டிலும் வித்தியாசமான தோற்றத்தில் புதிய ஹீரோ 450சிசி அட்வென்ச்சர் பைக்கை எதிர்பார்க்கலாம்.

2022 கேடிஎம் 390 அட்வென்ச்சர்
கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அப்டேட் வெர்சன் கடந்த 2021 டிசம்பரில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் அப்டேட் செய்யப்பட்ட 390 அட்வென்ச்சர் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சரில் எதிர்பார்த்ததை போல் உடல் பேனல்களின் கிராஃபிக்ஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் & கார்னரிங் ஏபிஎஸ் போன்ற கூடுதல் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து பைக்கில் வேறெந்த மாற்றமும் இல்லை. இதனால் வழக்கமான 373சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அப்படியே தொடரப்பட்டுள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு சதுர வடிவ கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2022 கவாஸாகி வெர்சஸ் 650
ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி விரைவில் அதன் 2022 வெர்சஸ் 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 2021 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய வெர்ஸஸ் 650-இல் கூர்மையான ஹெட்லேம்ப்கள், ரீஸ்டைலில் பாடி பேனல்கள், புதிய கிராஃபிக்ஸ் உள்ளிட்டவையும், புதிய வசதிகளாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் & அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

மற்றப்படி 649சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதே என்ஜின் தான் தற்போதைய வெர்சஸ் 650 பைக்கில் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 66 பிஎஸ் & 61 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு சதுர வடிவ டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி2
டுகாட்டி நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் மல்டிஸ்ட்ராடா 650 பைக்கிற்கு மாற்றாக, மல்டிஸ்ட்ராடா வி2 மாடலை நடப்பு ஏப்ரல் அல்லது அடுத்த மே மாதத்தில் களமிறக்கவுள்ளது. மல்டிஸ்ட்ராடா 650 உடன் ஒப்பிடுகையில் மல்டிஸ்ட்ராடா வி2-இன் டிசைனில் பெரியதாக மாற்றமில்லை என்றாலும், காற்றியக்கவியல் பண்பில் மாற்றம் உள்ளது. குறிப்பாக பைக்கின் எடை குறைந்துள்ளது.

மல்டிஸ்ட்ராடா வி2-இல் பொருத்தப்பட்டுள்ள 937சிசி எல்-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 114 பிஎஸ் மற்றும் 94 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸும், டாப் எஸ் வேரியண்ட்டில் மட்டும் கூடுதல் அம்சமாக 2-வழி விரைவு கியர் மாற்றியும் வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








