இத்தனை அம்சங்களுடன் வருகிறது புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411!! ஹிமாலயனுக்கு கொஞ்சம்கூட சளைச்சது இல்ல!
2022 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஸ்க்ராம் 411 மோட்டார்சைக்கிளை பற்றிய விபரங்கள் பைக்கின் அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ‘பக்கா' அட்வென்ச்சர் பைக்குகளுள் ராயல் என்பீல்டின் ஹிமாலயனும் ஒன்று. தற்சமயம் ஹிமாலயனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.14 லட்சமாக உள்ளது. அட்வென்ச்சர் பைக்கிற்கு உண்டான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருந்தாலும், தினசரி அலுவலக பயன்பாட்டிற்கு ஹிமாலயன் பைக்கை பயன்படுத்துபவர்கள் என்று பார்த்தால் குறைவுதான். ஹிமாலயனின் தோற்றம் அவ்வாறானது.

இந்த குறையை சரிப்படுத்தும் விதத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயனின் சாலை-சார்ந்த வெர்சனை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த புதிய பைக்கிற்கு ஸ்க்ராம் 411 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த பைக் ஹிமாலயனின் அட்வென்ச்சர் பண்புகள் சிலவற்றையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய சாலைகளில் பலமுறை சோதனை ஓட்டங்களின்போது ஸ்க்ராம் 411 பைக் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இதனை பற்றிய கூடுதல் விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அத்துடன் பைக்கின் தெளிவான தோற்றமும் நமக்கு தெரிய வந்துள்ளன. இதுதொடர்பாக புல்லட் குரு என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
இதில் பைக்கின் தோற்றத்தை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், ஹிமாலயனின் அடிப்படை தோற்றத்தை புதிய ஸ்க்ராம் 411 மோட்டார்சைக்கிள் அப்படியே கொண்டிருக்கும் என்று. அதேநேரம் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு உண்டான ரெட்ரோ தீம் -ஐயும் கொண்டுள்ளது என்பதற்கு முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள பழமை மாறாத வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் தான் சாட்சி.

இந்த வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மட்டுமின்றி, ஃபோர்க் மூடி, பெட்ரோல் டேங்கின் வடிவம், அகலமான ஹேண்டில்பார், சேசிஸ், பிளவுப்பட்ட வடிவிலான இருக்கைகள் மற்றும் மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவையும் ஹிமாலயனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாலை-சார்ந்த மோட்டார்சைக்கிளாக காட்டுவதற்காக ஹிமாலயனின் சில அம்சங்கள் இந்த புதிய பைக்கில் தவிர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஹிமாலயனில் என்ஜினை பாதுகாக்கும் வகையில் இருபுறமும் வழங்கப்படும் பாதுகாப்பான்கள் ஸ்க்ராம் 411 பைக்கில் கொடுக்கப்படவில்லை. இதற்கு பதிலாக சிறிய அளவிலான டேங்க் பாதுக்கான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பைக்கின் அகலம் குறைந்து, எளிதாக அணுகக்கூடிய காம்பெக்ட் மோட்டார்சைக்கிளாக ஸ்க்ராம் 411 விளங்குகிறது.

அதேபோல் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான கைப்பிடி எளிமையானதாக, ஒற்றை-துண்டாக வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான வித்தியாசமாக, அளவில் சிறிய 19-இன்ச்சில் முன் சக்கரம் கொடுக்கப்பட உள்ளது. தற்போதைய ஹிமாலயனில் 21-இன்ச்சில் முன் சக்கரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தது. இதன் காரணமாக ஸ்க்ராம் 411 பைக்கில் வித்தியாசமான ரைடிங் அனுபவம் கிடைக்கும்.

இருப்பினும் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக ஸ்போக் சக்கரங்களே ஹிமாலயனில் இருந்து தொடரப்பட்டுள்ளன. ஹிமாலயனின் அடிப்படை தோற்றத்திற்கு ஸ்போக் சக்கரங்களே எடுப்பானவைகளாக உள்ளன. இவற்றில் இரட்டை-பயன்பாட்டு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன ஹிமாலயன் பைக்கில் முன்பக்கத்தில் ஹேண்டில்பாருக்கு மேலே வழங்கப்படும் எதிர்காற்று தடுப்பு கண்ணாடியும், ஹெட்லேம்பிற்கு கீழே கொடுக்கப்படும் கூடுதல் மட்கார்டும் ஸ்க்ராம் 411 பைக்கில் தவிர்க்கப்பட்டுள்ளன.

இவை போதாதென்று புதிய நிறத்தேர்வுகளை ஸ்க்ராம் மாடலுக்கு வழங்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கை காட்டிலும் இதன் விலையை வெகு குறைவாகவே நிர்ணயிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதி அப்டேட் செய்யப்பட்டு ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி வழங்கப்பட உள்ளதாக தற்போது கசிந்துள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன.

மீட்டியோர் 350 பைக்கின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியானது மொபைல் போன் மூலமாக பயணத்திற்கான வழிக்காட்டுதல், பயண விபரங்களை சேகரித்தல் போன்ற செயல்பாடுகளை வழங்கக்கூடியதாக உள்ளது. ப்ளூடூத் சார்ந்த இந்த வசதி சமீபத்தில்தான் ஹிமாலயனில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் அதே 411சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், SOHC என்ஜின் தான் புதிய ஸ்க்ராம் 411 பைக்கிலும் வழங்கப்பட உள்ளது என்றாலும், சாலை-சார்ந்த வெர்சனுக்காக என்ஜின் சற்று திருத்தியமைக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








