இத பார்த்து புல்லட் ரயிலுனு நினைச்சுடாதீங்க! ஆனா இதோட வேகம் புல்லட் ரயிலுக்கே டஃப் தரும்... இதோ முழு விபரம்!
மணிக்கு 400க்கும் அதிகமான கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் பைக்கை அமெரிக்காவைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்புகள் மற்றும் திறன்கள் பற்றிய முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் (Lightning Motorcycles). இந்நிறுவனம் உயர் பெர்ஃபார்மென்ஸ் திறனை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் பைக்குகளைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அந்நிறுவனம் ஓர் புதுமுக சூப்பர் பைக் ரக எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த வாகனம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக தெளிவாகக் கூற வேண்டும் தற்போதைய லேண்ட் ஸ்பீட் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இந்த புதிய சூப்பர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் உச்சபட்ச இயக்க திறனை 'போனேவில்லே சால்ட் ஃபிளாட்' எனும் பகுதியில் வைத்து சோதித்து பார்க்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டேச்யோன் என்பி (Tachyon Nb) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 400 -க்கும் அதிகமான கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. இந்த அதிகபட்ச வேக திறனே சோதித்து பார்க்கப்பட இருக்கின்றது.

வோக்ஸன் வாட்மேன் (Voxan Wattmann) மணிக்கு 455 கிமீ வேகத்தில் இயங்கி உலகின் மிக அதிக வேகத்தில் தரையில் செல்லக் கூடிய வாகனம் என்கிற மகுடத்தைச் சூடியது. இந்த ரெகார்டை முறியடிக்கும் வகையிலேயே டேச்யோன் என்பி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இவ்வாகனம் நிச்சயம் மணிக்கு 455 கி.மீட்டருக்கும்., அதிகமான வேகத்தில் இயங்கி சாதனைப் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லைட்னிங் மோட்டார்சைக்கிள் இந்த டேச்யோன் என்பி சூப்பர் பைக்கை மற்றுமொரு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியிருக்கின்றது. நியோபியம் தொழில்நுட்பத்தில் நிபுணராக விளங்கிக் கொண்டிருக்கும் Companhia Brasileira de Metalurgia e Mineração எனும் நிறுவனத்துடன் இணைந்தே அப்பைக்கை அமெரிக்க மின் வாகன உற்பத்தியாளர் உருவாக்கியிருக்கின்றார்.

இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு டேச்யோன் என்பி என்கிற பெயர் வைப்பதற்கு சுவாரஷ்யமான காரணம் ஒன்று இருக்கின்றது. 1960 ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வாயிலாக ஓர் விண்வெளி துகளுக்கு வைக்கப்பட்ட பெயரே இந்த டேச்யோன். இந்த துகள் ஒளியின் வேகத்தைத் தாண்டி ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சந்திரனை சென்றடையும் திறனைக் கொண்டிருந்தது.

இத்தகைய சூப்பரான வேகத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் அதிக வேகத்தில் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் பைக்கிற்கு டேச்யோன் என்பி எனும் பெயரை வைத்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் உச்சபட்ச வேகத்திற்கு அதன் உருவம் மற்றும் அலங்காரப்பொருட்கள் எந்தவகையிலும் தடையாக அமைந்துக் கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருந்திருக்கின்றது லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம்.

இதன் வெளிப்பாடாகவே மிக நேர்த்தியான முன் அலங்காரம் இருசக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. காற்றியக்கவியலுக்கு ஏற்பவாறு அதன் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆம், இதுவே காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல இருசக்கர வாகனத்திற்கு உதவ இருக்கின்றது. மேலும், பைக்கின் இலகுவான எடைக்காக எஃகு குழாய்களும், நியோபியத்தினாலான ஸ்விங்கர்மும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நியோபியம்கள் எடை குறைவானவை அதேநேரத்தில் அதிக வலிமையானவையும் கூட. இதனால்தான் நிறுவனம் டேச்யோன் என்பி பைக்கில் பயன்படுத்தியிருக்கும் பாகங்களை நியோபியம்களைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. இவை அதிக வெப்பநிலையைக்கூட சமாளிக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் பிரேக் ரோட்டார் உருவாக்கத்தில் நியோபியம்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பைக்கில் மிக முக்கியமான பிரேக்கிங் சிஸ்டமாக நியோபியம் பின் பக்க வீல் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக வேகம் மற்றும் உடனடியாக வேகத்தை குறைத்து வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்த உதவும். இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட வாகனத்தை லைட்னிங் மோட்டார்ஸ் வெகு விரைவில் சோதித்து பார்க்க இருக்கின்றது. இந்த வாகனம் நிச்சயம் இந்த உலகத்தின் மிக அதிக வேகத்தில் சாலையில் செல்லக் கூடிய வாகனம் என்ற புகழை வோக்ஸன் வாட்மேன் இடத்தில் இருந்து தட்டி பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு: கடைசி மூன்று படங்கள் வோக்ஸன் வாட்மேன் பைக்குடையதாகும். இவை உதாரணத்திற்காக வழங்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








