25கிமீ பயணிக்க ஒரு ரூபா மட்டுமே செலவாகும்.. இதுக்கப்புறமும் பெட்ரோல் வண்டிய வச்சுக்கிட்டு கஷ்டப்பட போறீங்களா!!
வோல்ட்ரைடர் பிரைவேட் லிமிடெட் (Voltrider private limited) எனும் நிறுவனம் அதன் புதுமுக இ-சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்தத ஒன்றே. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை அவ்வப்போது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

ஏற்கனவே அறியப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத புதுமுக நிறுவனங்கள் என அனைவரும் இந்திய மின் வாகன சந்தையில் தங்களின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், வோல்ட்ரைடர் பிரைவேட் லிமிடெட் (Voltrider private limited) எனும் புதுமுக நிறுவனம், அதன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

தனித்துவமான ஸ்டைலில் இந்த இ-சைக்கிள்களை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. மொபட் போன்ற தோற்றமே இ-சைக்கிள்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இ-சைக்கிள், சரக்குகளை ஏற்ற செல்ல உதவும் இ-சைக்கிள் என இருவிதமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையில் விரைவில் ரிக்ஷா டைப்பிலான மின்சார வாகனத்தையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. தற்போது நிறுவனம் பூட்டி எனும் எலெக்ட்ரக் சைக்கிளையே விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும்.

பூட்டி 30, பூட்டி 60 மற்றும் பூட்டி 120 ஆகியவையே அவை ஆகும். இதில், பூட்டி 120-யே அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதன் விலையும் அதிகம். அவைகுறித்த முழு விபரமும் பின் வருமாறு பார்க்கலாம்.

பூட்டி 30:
வோல்டான் நிறுவனம் பூட்டி 30 இ-சைக்கிளில் 12ஏஎச் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 கிமீ முதல் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். த்ரோட்டில் மோடில் கிடைக்கும் ரேஞ்ஜ் திறன் இதுவாகும். அதேவேலையில், பெடல் அசிஸ்ட் உதவியுடன் பயணிக்கையில் இதே வாகனத்தில் சுமார் 45 கிமீ முதல் 50 கிமீ வரையில் ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். இதன் விலை ரூ. 30 ஆயிரம் ஆகும்.

பூட்டி 60:
பூட்டி 30 வேரியண்டை அடுத்து அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக பூட்டி 60 இருக்கின்றது. இது த்ரோட்டில் மோடில் 55 கிமீ முதல் 60 கிமீ ரேஞ்ஜையும், பெடல் அசிஸ்ட் மோடில் 75 கிமீ முதல் 80 கிமீ வரையிலும் ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு ரூ. 37 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூட்டி 120:
இந்த இ-சைக்கிள் மாடலில் வோல்ட்ரான் நிறுவனம் 36ஏஎச் பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிமீ முதல் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். த்ரோட்டில் மோடிலேயே இந்த ரேஞ்ஜை பூட்டி 120 வழங்கும். அதுவே பெடல் அசிஸ்ட் மோடில் இந்த சைக்கிளை பயன்படுத்தினால் 130 கிமீ முதல் 150 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரும். இதற்கு ரூ. 45 ஆயிரம் விலையை வோல்டான் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

அனைத்து இருசக்கர வாகனங்களுமே 25 கிமீ பயணிக்கும் திறன் கொண்டவை ஆகும். ஆகையால், இவற்றை இயக்க லைசென்ஸ், பதிவு சான்று போன்ற எந்த ஆவணமும் தேவையில்லை. அதேநேரத்தில், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதனை வீடுகளில் இருக்கும் வழக்கமான சாக்கெட்டில் வைத்துக்குட சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பூட்டி 120-யை தவிர மற்ற அனைத்திலும் கழட்டி மாட்டும் பேட்டரி பேக் வழங்கப்பட்டிருக்கின்றது. வீடு அல்லது அலுவலகம் விரும்பிய இடத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளும் விதமாக இந்த வசதி வழங்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அனைத்து வாகனங்களும் சுமார் 140 கிலோ வரையில் எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை ஆகும்.

இந்த வாகனத்தில் நிறுவனம் 20X3 அங்குல அடர்த்தியான டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுதவிர, உலோக மட்குவார்டும் இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மின்சார சைக்கிள் விலையில் மட்டுமல்ல பயன்பாட்டிலும் அதிக சிக்கனத்தை வழங்கக் கூடியது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 25 கிமீ பயணிக்க வெறும் ரூ. 1 மட்டுமே செலவாகுமாம். பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த தகவல் அமைந்துள்ளது.
குறிப்பு: முதல் ஐந்து படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் வோல்டான் நிறுவனத்தின் தயாரிப்புகளின் படங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








