ஜாய் இ-பைக் பிராண்டில் ஒரே மாதத்தில் இத்தனை எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் விற்பனையா!! அபரிதமான வளர்ச்சி!
வைல்ட்விசார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாய் இ-பைக் பிராண்டிற்கு கடந்த 2022 பிப்ரவரி சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருவதை உணர்ந்து சந்தையில் புதியதாக நுழைந்துள்ள இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஜாய் இ-பைக்கும் ஒன்றாகும். அதேபோல் எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் விற்பனையில் வேகமாக தனக்கான இடத்தை பிடித்துவரும் பிராண்ட்களுள் ஒன்றாகவும் ஜாய் இ-பைக் விளங்குகிறது.

இந்த பிராண்டில் இருந்து சந்தையில் விற்பனையாகும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில், கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் ஜாய் இ-பைக் நிறுவனத்தில் இருந்து மொத்தம் 4,450 எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் ஒரு மாதத்தில் ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து அதிகளவில் விற்கப்பட்ட எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் எண்ணிக்கை இதுவாகும்.

அதுவே கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் வெறும் 320 யூனிட் வாகனங்களே இந்த பிராண்ட்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஜாய் இ-பைக் ஸ்டார்ட்-அப் பிராண்டின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் சுமார் 1291% அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பீடுகையிலும் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 12.63% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தமாக 3,951 எலக்ட்ரிக் 2-வீலர்ஸே ஜாய் இ-பைக் நிறுவனத்தில் விற்கப்பட்டு இருந்தன.

இத்தனைக்கும் ஜனவரியில் பண்டிகை நாட்கள் அதிகம் உள்ளன மற்றும் நாட்களும் பிப்ரவரியை காட்டிலும் அதிகமாகும். இருப்பினும் கடந்த பிப்ரவரியில் இந்த 12.63% வளர்ச்சியை ஜாய் இ-பைக் பிராண்டில் வைல்ட்விசார்ட் நிறுவனம் கண்டுள்ளது. ஆக மொத்தத்தில் நடப்பு 2022ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் 8,400 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த தொடர் வளர்ச்சிக்கு ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் இளம் தலைமுறையினரை கவரும் 3 அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படும் இதே பிராண்டில் இருந்து கமர்ஷியல் பயன்பாட்டிற்கான வாகனமும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைக்கு 3,500- 4,500 என்பது குறைவான விற்பனை எண்ணிக்கை தான். இருந்தாலும் இந்த நிலை வரும் காலங்களில் மேலும் மேம்படும் என்பது உறுதி. ஏனெனில் வரும் காலம் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்ததுதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே கூறியதுதான், கடந்த சில வருடங்களில் பல இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்கள் புதியதாக இந்திய சந்தையில் களம் புகுந்துள்ளன.

ஆனால் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ், ஹோண்டா போன்ற முன்னணி பிராண்ட்கள் இவி தயாரிப்பில் இறங்கிய பிறகே ஆட்டம் இன்னும் சூடுப்பிடிக்கும். குறிப்பாக தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது எலக்ட்ரிக் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை தற்போதைக்கு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது.

நடப்பு 2021-22 நிதியாண்டில் (2021 ஏப்ரல்- 2022 மார்ச்) தற்போது வரையில் மட்டுமே ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் விற்பனை எண்ணிக்கை 25 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதனை இன்னும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கை உடன் நிறைவு செய்யும் நோக்கில் வார்ட்விசார்ட் நிறுவனம் எதிர்நோக்கி உள்ளது.

இதுகுறித்து வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த செயலதிகாரி ஷீத்தல் பலேராவ் கருத்து தெரிவிக்கையில், "இரு புதிய அதிவேக இ-ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு ஃப்ளீட் மேனேஜ்மெண்ட் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஜாய் இ-பைக், நாட்டின் மிகவும் விரும்பப்படும் இவி பிராண்ட்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் இது எங்களை மிகவும் பெருமையாகவும், பொறுப்பாகவும் ஆக்குகிறது.

நாடு முழுவதும் கிடைத்த அமோக வரவேற்பு பிப்ரவரி மாதத்தில் ஒரு புதிய விற்பனை சாதனையை அடைய எங்களுக்கு உதவியுள்ளது. வேகமாக வளர்ந்துவரும் இவி பிராண்டாக, மேம்பட்ட தயாரிப்புகளை கொண்டுவருவதிலும், எங்கள் சந்தை இருப்பை வலுப்படுத்த வாடிக்கையாளர்கள் தொடுமையங்களை விரிவுப்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications








