உலகின் பவர்ஃபுல் பெட்ரோல் எஸ்யூவி காரின் உற்பத்தி பணியை தொடங்கியது பிரபல நிறுவனம்.. இவ்ளோ வேகத்துல அது போகுமா!
உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய காரை உருவாக்கும் பணிகளை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் அஸ்டன் மார்ட்டின் (Aston Martin)-ம் ஒன்று. ஆடம்பரம் மற்றும் அதி-திறனை வெளிப்படுத்தும் வாகனங்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே, தற்போது உலகின் அதி-வேகத்தில் செல்லக் கூடிய எஸ்யூவி ரக காரின் உற்பத்தி பணிகளை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிபிஎக்ஸ் 707 (DBX 707) எனும் மாடலை வெளியீடு செய்தது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே உலகின் அதி வேக எஸ்யூவி-ஆக நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. காரின் அதி-வேக இயக்கத்திற்காக பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் 707 எஸ்யூவியின் உற்பத்தி மாடலில், ஏஎம்ஜி பிராண்டின் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 697 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். தற்போது விற்பனையில் இருக்கும் எந்த எஸ்யூவி ரக காரும் இந்த மாதிரியான அதிக திறனை வெளிப்படுத்தாது என அஸ்டன் மார்ட்டின் கூறுகின்றது.

இதுமட்டுமின்றி, டிபிஎக்ஸ் 707 வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டி விடும் என்றும், அதன் டாப்ஸ்பீடு மணிக்கு 310 கிமீ என்றும் அஸ்டன் மார்ட்டின் கூடுதல் தகவலை தெரிவித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூப்பர் ஃபாஸ்ட் பவரை தற்போது விற்பனையில் இருக்கும் வேறு எந்த எஸ்யூவி காரும் வெளிப்படுத்தாது என அது உறுதியாக தெரிவித்திருக்கின்றது.

உலகளவில் அஸ்டன் மார்ட்டின் தயாரித்து வரும் இந்த கார் மாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டிபிஎக்ஸ் 707 மாடலின் உற்பத்தி பணிகளை நிறுவனம் தீவிரப்படுத்தியிருக்கின்றது. விரைவில் காரின் டெலிவரி பணிகளையும் அஸ்டன் மார்ட்டின் தொடங்க இருக்கின்றது. இந்த பணிகள் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிபிஎக்ஸ் 707 விற்பனைக்கு வரும்பட்சத்தில், போர்ஷே கேயென்னே டர்போ ஜிடி மற்றும் லம்போர்கினி உருஸ் ஆகியவற்றிற்கு கடுமையான போட்டியை வழங்கக் கூடிய தயாரிப்பாக அது இருக்கும். இவையே தற்போது அதி வேக திறனை வெளிப்படுத்தக் கூடிய எஸ்யூவி ரக கார்களாக காட்சியளிக்கின்றன.

அஸ்டன் மார்ட்டின் 707 வெறும் அதி-வேகத்தை வெளிப்படுத்தக் கூடிய காராக மட்டுமே உருவாக்கப்படவில்லை. அக்காரில் சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதற்கான அம்சங்களும் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கக் கூடிய அப்டேட்டட் ஏர் சஸ்பென்ஷன், புதிய டேம்பர்கள் மற்றும் ஸ்பிரிங்குகள் அக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது தவிர எலெக்ட்ரானிக் ஆக்டீவ் ரோல் கன்ட்ரோல் அம்சம் அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 காரில் பயன்படுத்தப்படடுள்ளது. இவற்றின் வாயிலாக மிக மிக அதிக சொகுசான வாகனமாக டிபிஎக்ஸ் 707 மாறியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இக்காரின் ஸ்டைலும் வேற லெவலில் இருக்கின்றது.

முக்கியமாக காருக்கு பெரிதும் கவர்ச்சி சேர்க்கும் விஷயமாக முன்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் க்ரில் இருக்கின்றது. இது வழக்கமான அஸ்டன் மார்ட்டின் கார்களில் காணப்படுவதைக் காட்டிலும் 27 சதவீதம் பெரியது ஆகும். இதற்கு கீழாக மிக சிறப்பான காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஏர்-இன்டேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, 22 அங்குல வீல்கள், வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் 23 இன்ச் அளவுள்ள வீல்கள் ஆகியவற்றை இக்காரில் அஸ்டன் மார்ட்டின் வழங்க இருக்கின்றது. இதுதவிர, மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக கார்பன் செராமிக்கினாலான 6 பிஸ்டன்கள் கொண்ட கேலிபர் டிஸ்க்குகள் பயனப்டுத்தப்பட்டுள்ளன.

காரின் அதிகபட்ச வேகத்தைக் கண்டு அச்சம் தெரிவிப்பவர்களுக்கு ஆறுதலாக இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆம், மிக அதிகபட்ச வேகத்தை நொடிபொழுதில் கன்ட்ரோல் செய்யவே இந்த அம்சம் டிபிஎக்ஸ் 707இல் வழங்கப்பட்டிருக்கின்றது. காரின் திறன் மற்றும் ஸ்டைல் மட்டும் ஸ்போர்ட்டியானதாக வழங்கப்படவில்லை.

அதன் இன்டீரியரும் மிக அட்டகாசமான ஸ்போர்ட்டியானதாக காட்சியளிக்கின்றது. கண்கவர் நிறங்கள், பன்முக கன்ட்ரோல் பொத்தான்கள், டிஜிட்டல் திரை, சொகுசான இருக்கைகள் ஆகியவற்றால் டிபிஎக்ஸ் 707 அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியான அம்சங்களின் காரணத்தினாலேயே இக்காரின் வருகையை பெரிதும் எதிர்நோக்கி சொகுசு கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் விரும்பிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








