ஒரே மாதத்தில் 4.45 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம் தெரியுமா?
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் ஒட்டுமொத்தமாக 4,45,580 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தான் ஒரு வேர்ல்ஸ்ட் லார்ஜஸ்ட் டூ-வீலர் (உலகின் முன்னணி இருசக்கர வாகன) உற்பத்தியாளர் என்பதை ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் அதன் விற்பனையின் வாயிலாக இந்த உலகிற்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக மிக அதிக எண்ணிக்கையில் நிதியாண்டு 2023 ஏப்ரல்-ஜூலையில் விற்பனையாகியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையும், நடந்து முடிந்த ஜூலை மாத விற்பனை விபரங்களையுமே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

2022 ஜூலை மாத விற்பனை நிலவரம்:
கடந்த 2022 ஜூலை மாதத்தில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் ஹீரோ இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மிக துள்ளியமாக கூற வேண்டும் என்றால் ஒட்டுமொத்தமாக 4,45,580 யூனிட் ஹீரோ டூ-வீலர்கள் விற்பனையாகியுள்ளன. மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, பைக்குகள் 4,21,288 யூனிட்டுகளும், ஸ்கூட்டர்கள் 24,292 யூனிட்டுகளும் விற்பனையாகியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தைக் காட்டிலும் சற்று குறைவானது ஆகும். 2021 ஜூலையில் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் 4,24,126 யூனிட்டுகளும், ஸ்கூட்டர்கள் 30,272 யூனிட்டுகளும் விற்பனையாகின. இதுதவிர 25,190 யூனிட் டூ-வீலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆக 2021 ஜூலையில் ஒட்டுமொத்தமாக 4,54,398 யூனிட்டு ஹீரோ இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதனுடன் ஒப்பிடுகையில் சுமார் 8,818 யூனிட்டுகள் நடந்து முடிந்த ஜூலையில் குறைவாக விற்பனையாகியிருக்கின்றன. இது மிக பெரிய விற்பனை இழப்பாகும். இந்த விற்பனைச் சரிவிற்கு நடப்பாண்டு ஜூலை மாதத்தில் ஏற்றுமதி குறைந்ததும் ஓர் காரணமாக உள்ளது.

சென்ற ஆண்டு ஜூலையில் அது 25,190 யூனிட்டுகளாக இருந்த நிலையில் நடப்பாண்டு ஜூலையில் 14,896 யூனிட்டுகளாக குறைந்துள்ளன. இதுவும் நிறுவனத்திற்கு சற்றே ஏமாற்றத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. என்னதான் நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த மாத விற்பனையில் பெரும் சரிவைச் சந்தித்திருந்தாலும் நிறுவனம் சற்றே மகிழ்ச்சியில் திகைக்கத் தொடங்கியிருக்கின்றது.

நிதியாண்டு 23 ஏப்ரல்-ஜூலை விற்பனை நிலவரம்:
ஏனெனில், நடப்பு நிதியாண்டின் (FY'23) ஏப்ரல்-ஜூலையில் 24.1 சதவீத விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது. இதுவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 18,35,773 டூ-வீலர்கள் விற்பனையாகியிருக்கின்றன. சென்ற நிதியாண்டில் 14,78,905 யூனிட் டூ-வீலர்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வளர்ச்சி அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் இந்தியாவை பண்டிகைக் காலங்கள் ஆரம்பிக்க உள்ளன. இந்தியர்கள் பண்டிகைக் காலங்களை புதிய வாகனங்களுடன் விரும்புவார்கள். ஆகையால், வரும் மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேலையில், நிறுவனமும் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யும் வகையில் புதிய தேர்வுகளை தன்னுடை இருசக்கர வாகனங்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், அண்மையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி, 2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் 125 கேன்வாஸ் பிளாக் எடிசன் ஆகிய இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதுதவிர, வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை ரேலி எடிசனாக மாற்றக் கூடிய ரேலி கிட்-ஐயும் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து இன்னும் சில இருசக்கர வாகன மாடல்களையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், நிச்சயம் வரும் காலங்களிலும் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








