யமஹாவின் அழைப்பை ஏற்று, சென்னை MMRT-யில் சீறி பாய்ந்த நம்மூர் ரேஸர்கள்!! இலவச ‘ட்ராக்-டே’ நிறைவுற்றது!
'தி கால் ஆஃப் தி ப்ளூ' (The Call of the Blue) என்கிற பெயரில் யமஹாவின் டிராக் டே (Track Day) போட்டிகள் வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பந்தய கள போட்டிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சூப்பர் பைக்கை வாங்க வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு ஒரு கனவாக இருக்கும். குறைந்தப்பட்சம், யமஹா ஆர்15, ஆர்15 எம் போன்ற இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் பந்தய களத்திற்கான மோட்டார்சைக்கிள்களையாவது வாங்கிவிட வேண்டும் என ஆசைப்படுவோம்.

அதுவே ஸ்போர்ட்ஸ் பைக்குகளை சர்வ சாதாரணமாக வாங்குவோர் அதனை முழு வேகத்தில் பந்தய களத்தில் ஒருமுறையேனும் ஓட்டி பார்க்க வேண்டும் என விரும்புவர். அத்தகையவர்களுக்காகவே முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான யமஹா ‘தி கால் ஆஃப் தி ப்ளூ' என்கிற பெயரில் ட்ராக் டே -வை நமது சென்னையில் இருங்காட்டு கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் பந்தய களம் (MMRT)-இல் நடத்தியுள்ளது.

இதில் யார் வேண்டுமானாலும் இலவசமாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டதால், எதிர்பார்த்ததை போல் முன்பதிவுகள் குவிந்தன. ஆனால் இதற்காக குறிப்பிட்ட ஸ்லாட்களை மட்டுமே யமஹா நிர்ணயித்ததால், புக்கிங் திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே நிறைவுற்றது. இந்த ட்ராக் டே -வின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பங்கேற்ற அனைவருக்கும் யமஹா இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இது யமஹா தனது தயாரிப்பு வாகனங்களின் மீது வைத்துள்ள அளவுக்கடந்த நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக அமைந்தது. அத்துடன் ட்ராக் டே -வில் பங்கேற்ற அனைவருக்கும் மாஸ்க், யமஹாவின் லோகோ பொறிக்கப்பட்ட டி-சர்ட் மற்றும் லேன்யார்ட் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், பந்தய களத்தில் யமஹாவின் பைக்குகளை இயக்கிய ரேஸர்களுக்கு ஷேரிங் முறையில் ரைடிங் கியரும் வழங்கப்பட்டது.

அதேநேரம் பந்தய களத்திற்கான ரைடிங் கியரை சொந்தமாக வைத்திருந்தவர்கள் அவற்றை யமஹா ட்ராக் டே -க்கு கொண்டுவந்தனர். அதேபோல் சிலருக்கு சொந்த யமஹா பைக்குகளை உபயோகப்படுத்தி கொள்ளவும் யமஹா அனுமதி வழங்கியது. இதற்கு உரிமையாளர்கள் வாகனத்தின் ஆர்டிஓ பதிவு சான்றிதழை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் ட்ராக் டே போட்டிகளில் பங்கேற்ற அனைத்து ரைடர்களும் தங்களது ஓட்டுனர் உரிமத்தை தாக்கல் செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.

பொது சாலைகளுக்கு மாறாக பந்தய சாலையில் சவாரி செய்வதில் உள்ள பல்வேறு அளவுருக்கள் & வேறுப்பாடுகள் மற்றும் பந்தய களத்தில் பங்கேற்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், தோரணை பயிற்சி போன்றவை குறித்தும் போட்டியாளர்களுக்கு கற்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3.71கிமீ நீளம் கொண்டதாக உள்ள மெட்ராஸ் மோட்டார் பந்தய களத்தில் மொத்தம் 12 திருப்பங்கள் உள்ளன.

இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட யமஹா ரசிகர்கள் கூடினர். இதில் 200 ரைடர்கள் யமஹாவின் ஒய்.இசட்.எஃப்-ஆர்3, ஒய்.இசட்.எஃப்-ஆர்15, எம்டி-15, எஃப்.இசட் பைக்குகள் மற்றும் ஏரோக்ஸ் 155 என்ற மேக்ஸி-ஸ்கூட்டர்களுடன் போட்டிகளில் பங்கேற்றதாக அங்கிருந்துவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அழைப்பை யமஹா அதிகாரப்பூர்வமாக கடந்த மார்ச் 8ஆம் தேதி விடுத்தது.

மேலும் அதே தினத்தில்தான் மெட்ராஸ் ட்ராக் டே மார்ச் 13ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்தே யமஹா பைக் பிரியர்கள் இலவசமாக பந்தய களத்தில் சவாரி செய்ய ஆயத்தமாக ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே கூறியதுபோல், ட்ராக் டே நிகழ்வானது யமஹா தனது உலகளாவிய இமேஜை ஒரு வலுவான பந்தய பாரம்பரியத்துடன் ஒரு அற்புதமான பிராண்டாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாகும்.

இது யமஹா வாடிக்கையாளர்களுக்கு பெருமை மற்றும் சொந்த உணர்வை வழங்கி இருக்கும். இந்த நிகழ்ச்சியில் பந்தய கள பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் மற்றும் ரைடிங் கியர்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ரைடர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் வந்தவர்களும் பிரம்மாண்டமான மெட்ராஸ் மோட்டார் பந்தய களத்தில் மகிழ்ச்சியோடு செல்ஃபி எடுத்து கொண்டனர். ஆதலால் யமஹாவின் இவ்வாறான முயற்சிகள் இந்தியாவில் ரேஸர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி உள்நாட்டில் யமஹாவின் விற்பனையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை ட்ராக் டே-வை தொடர்ந்து ‘தி கால் ஆஃப் தி ப்ளூ' குடையின் கீழ் நடப்பு 2022ஆம் ஆண்டில் பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் சில புதிய தயாரிப்புகளை யமஹா அறிமுகப்படுத்த உள்ளது. அத்துடன் இவ்வாறான ட்ராக் டே போட்டிகளை இந்தியாவின் வேறு சில நகரங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








