5 சூப்பரான டூ-வீலர்களை இந்தியாவில் களமிறக்கும் சீன நிறுவனம்... பைக் லவ்வர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கு!
சீன இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜோன்டஸ் (Zontes) இந்திய சந்தையில் அது களமிறக்க உள்ள ஐந்து டூ-வீலர் மாடல்களை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் கால் தடம் பதிக்க இருப்பதாக சீனாவைச் சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனம் ஜோன்டஸ் (Zontes) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய வணிக செயல்பாட்டிற்காக நிறுவனம் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரி என்றழைக்கப்படும் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா (Adishwar Auto Ride India) நிறுவனத்துடன் அது கூட்டணியை அமைத்திருக்கின்றது.

இந்த கூட்டணியின் வாயிலாகவே சீன நிறுவனம் இந்திய சந்தையில் அதன் இருசக்கர வாகன தயாரிப்புகள் அனைத்தையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜோன்டஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஐந்து இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமின்றி, இந்த கூட்டணி என்னென்ன மாடல்களை விற்பனைக்கு களமிறக்க போகின்றது?, அவற்றில் என்ன மாதிரியான எஞ்ஜின்கள் மற்றும் சிறப்பம்சங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன போன்ற முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன. 350ஆர் நேக்கட் (350R naked), 350 எக்ஸ் ஸ்போர்ட்பைக் (350X sportbike), ஜிகே 350 கஃபே ரேசர் (GK350 cafe racer), 350 டி (350T) மற்றும் 350 டி அட்வென்சர் டூரர் (350T ADV tourer) ஆகிய இருசக்கர வாகன மாடல்களையே ஜோன்டஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஒற்றை மோட்டாரையே பயன்படுத்த இருக்கின்றது. அதாவது, 348 சிசி திறனை வெளியேற்றக் கூடிய லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டாரையே விரைவில் இந்திய களம் காணவிருக்கும் அனைத்து பைக்குகளிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 38 எச்பி மற்றும் 32 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

மோட்டார் விஷயத்தில் மட்டுமின்றி இன்னும் சில தொழில்நுட்ப கருவிகள் விஷயத்திலும் அனைத்து பைக்குகளும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உருவம் மற்றும் ஸ்டைலில் அனைத்தும் வெவ்வேறு விதமானவையாக காட்சியளிக்கின்றன. அதாவது, அவையவைகளின் பெயர்களுக்கு ஏற்பாற்போல் வடிவமைப்பைப் பெற்றிருக்கும்.

ஜோன்டஸ் நிறுவனம் 350 ஆர் நேக்கட் பைக், 350 எக்ஸ் ஸ்போர்ட் பைக் மற்றும் ஜிகே 350 கஃபே ரேஸர் மற்றும் 350 டி டூரர் பைக்குகளில் அலுமினியம் காஸ்ட் கட் அலாய் வீலைப் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த வீலில் இந்தியாவின் சவால் நிறைந்த சாலைகளை பதம் பார்க்க 120/70-17, 160/60-17 ஆகிய அளவிலான டயர்கள் பயன்படுத்த உள்ளன.

அதேவேலையில், 350 டி அட்வென்சர் பைக்கில் மட்டும் ஸ்போக் வீலும், 110/80-19 (முன்பக்கத்தில்) - 160/60-17 (பின் பக்கத்தில்) ஆகிய டயர்களும் வழங்கப்படும் என ஜோன்டஸ் தெரிவித்துள்ளது. இது அட்வென்சர் ரக பைக் என்பதால் பிரத்யேக அம்சமாக இவை வழங்கப்பட இருக்கின்றன. இதில் வழங்கப்பட்டிருக்கும் ஆஃப்-ரோடு சாலைகளில் மிக சிறப்பாக செயல்படக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில் ஆன்-ரோடிலும் இவை மிக சிறப்பாக செயல்படும்.

சஸ்பென்ஷனை பொருத்த வரை அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கும். அனைத்து பைக்கின் முன் பக்கத்திலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்க பயன்படுத்தப்பட இருப்பதாக நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 265 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் வழங்கப்பட இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. இத்துடன், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் அம்சமும் அனைத்து பைக் மாடல்களிலும் வழங்கப்பட உள்ளன.

நவீன கால அம்சங்களாக முழு வண்ண டிஎஃப்டி திரை, ஸ்மார்ட்போன் இணைப்பு, முழு எல்இடி லைட், இரு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சாவியே இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் அம்சம் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் ஆகிய சிறப்பு வசதிகள் ஜோன்டஸ் நிறுவனத்தின் அனைத்து பைக்குகளிலும் இடம் பெற இருக்கின்றது.

ஜோன்டஸ் நிறுவனம் இந்தியாவில் களமிறக்குவதாக அறிவித்திருக்கும் அனைத்து இருசக்கர வாகனங்களும் பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களாகும். ஆகையால், அவை ரூ. 3.5 லட்சத்திற்கும் அதிகமான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார்சைக்கிள்கள் பிஎம்டபிள்யூ, கேடிஎம், கவாஸாகி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விற்பனைக்கு வர உள்ளன.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








