ராயல் என்ஃபீல்டு நூறாண்டு பழைமையான பிராண்டா!.. என்ன இதுபோல இன்னும் 4 நிறுவனங்கள் இருக்கா!!
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த உலகில் நூற்றாண்டைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த நிறுவனத்தைப் போலவே இன்னும் சில இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த உலகில் 100 ஆண்டுகளைக் கடந்துக் கொண்டிருக்கின்றன.
அந்த நிறுவனங்கள் எவை? எந்த ஆண்டில் இருந்து அவை இந்த உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றன? மேலும், அது இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் தயாரிப்பு என்ன? என்பது போன்ற சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹார்லி டேவிட்சன் (Harley Davidson): இது ஓர் அமெரிக்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்த உலகில் முதல் முறையாக 1903 ஆம் ஆண்டிலேயே தோன்றியது. இரண்டு நண்பர்களால் தொடங்கப்பட்டதே இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ஆகும். வில்லியம் எஸ் ஹார்லி மற்றும் ஆர்தர் டேவிட்சன் என்பவர்களே இந்த நிறுவனத்தை தோற்றியவர்கள் ஆவார்கள்.
இவர்களின் பெயர்களே நிறுவனத்திற்கும் வைக்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் உலக அளவில் தன்னுடைய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் பிராண்ட என்பதால், அதன் தயாரிப்புகள் அனைத்தும் மிக மிக விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. சொல்லப் போனால் பட்ஜெட் கார்களின் விலையை ஹார்லி டேவிட்சன் பைக்குகள் கொண்டிருக்கின்றன.

இது தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 120 ஆண்டுகள் ஆகுவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் முதன் முதலில் தயாரித்தது 7.07 சிசி எஞ்சின் ஆகும். ஆனால், விற்பனைக்குக் கொண்டு வந்தது 24.74 சிசி திறன் கொண்ட பைக்காகும். இது மாடல் 1 என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
ஹஸ்க்வர்னா (Husqvarna): ஹார்லி டேவிட்சனை போலவே நீண்ட ஆண்டுகளாக இந்த உலகில் இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மற்றுமொரு நிறுவனமாக ஹஸ்க்வர்னா இருக்கின்றது. முதலில் இந்த நிறுவனம் மஸ்கட் எனும் வகை கைத்துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. இதற்கு பின்னரே அது இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டது.

1903 ஆம் ஆண்டில் இருந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஆரம்பத்தில் இந்த நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எஞ்சின்களையே தனது மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தி வந்தது. இதற்கு பின்னரே சொந்தமாக தானே மோட்டார்களை அது தயாரிக்கத் தொடங்கியது. இந்த பணிகளை அது தொடங்க 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதாவது, 1918 ஆம் ஆண்டிலேயே அது எஞ்சின் உற்பத்தியைத் தொடங்கியது. ஹஸ்க்வர்னாவும் பிரீமியம் தர பைக்குகளைத் தயாரிக்கும் பிராண்டாகக் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் இந்த பிராண்ட் பைக்குகளுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், விலை அதிகம் என்பதால் செல்வந்தர்களுக்கு மட்டுமே இந்த பிராண்டின் வாகனங்கள் எட்டும் கனியாக உள்ளது.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles): ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹஸ்க்வர்னா ஆகிய இரண்டு பிராண்டுகளும் இந்த உலகில் தோன்றுவதற்கு முன்னரே அறிமுகமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமே டிரையம்ப் ஆகும். இது ஓர் பிரிட்டிஷ் இருசக்கர வாகன பிராண்ட் ஆகும். 1902 ஆம் ஆண்டில் இருந்து இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
அதேவேளையில், இது பைக் உற்பத்தியை 1889 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. ஆனால், முதல் பைக்கை தயாரித்தது 1902 ஆம் ஆண்டில் ஆகும். இது பெல்ஜியன் மினர்வா எஞ்சின் பொருந்திய ஓர் மிதிவண்டியையே முதலில் தயாரித்தது. தற்போது உலகின் தலைசிறந்த பிரீமியம் மற்றும் சூப்பர் பைக்குகளை இந்த நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield): உலகின் மிகவும் பழைமையான பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டும் ஒன்றாகும். இது தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் பெருமை தரக் கூடிய ஒன்றாகும். இந்த நிறுவனம் அதன் முதல் பைக்கை தயாரித்த ஆண்டு 1901 ஆகும்.
உலக போரில் இந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களே பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இது ஓர் பிறப்பால் இங்கிலாந்து நிறுவனம் ஆகும். பின்னர் 1960-லேயே இந்திய நிறுவனமாக மாறியது. தற்போது ஐசர் பிராண்டிற்கு இது சொந்தமாகி உள்ளது. இருசக்கர வாகன உற்பத்திக்கு முன்னர் ஆயுதங்களை தாங்கும் வாகனம் மற்றும் ஊசி தயாரித்தல் உள்ளிட்ட பணிகளையே அது மேற்கொண்டது.

இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் (Indian Motorcycles): உலகின் முதல் மற்றும் மிகவும் பழைமையான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இது இருக்கின்றது. இது தொடங்கப்பட்ட ஆண்டு 1901ஆகும். இதுவே முதலில் செயின் டிரைவ் பைக்கை தயாரித்தது. அத்துடன், நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மணிக்கு 90கிமீ வேகத்தில் ஓடி உலகின் முதல் அதிக வேக பைக் என்ற புகழைச் சூடியது. இது அமெரிக்க பிராண்டாகும். இப்போதும், இந்த பிராண்டின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டும் உலகின் மிக மிக பழைமையான பிராண்டுகளாக உள்ளன. இப்போதும் இந்த பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு நல்ல மவுசு இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம் ஆகும். அதிலும், ராயல் என்பீல்டின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகள் அனைத்திலும் மிக மிக சூப்பரான வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









