1984 ராயல் என்பீல்டு பைக்கில் எலக்ட்ரிக் மோட்டார்!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 90கிமீ-க்கு சென்று வரலாம்!
1984ஆம் ஆண்டை சேர்ந்த ராயல் என்பீல்டு பைக் ஒன்று, எலக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த மாற்றம் சாத்தியமாகியது என்பதையும், இந்த மாற்றத்தை செய்து காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனத்தை பற்றியும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் சாலைகளில் இயங்கும் என்பதை உணர்ந்து பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டன. பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டும் எலக்ட்ரிக் பைக்குகளை இன்னும் சில வருடங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறிவருகிறது.

ஆனால், சில கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் ஏற்கனவே ராயல் என்பீல்டு பைக்குகளை எலக்ட்ரிக்காக மாற்றியுள்ளன. அந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த புல்லடீர் கஸ்டம்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் 1984ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழமையான ராயல் என்பீல்டு புல்லட் பைக் ஒன்றை கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றியுள்ளது.
அதாவது, விண்டேஜ் தோற்றத்திலான பைக்கில் மாடர்ன் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ராயல் என்பீல்டு பைக்கை ஏற்கனவே எங்கேயோ பார்த்ததுப்போல் சிலருக்கு தோன்றலாம். ஏனெனில், கடந்த 1.5 வருடத்திற்கு முன்பு ராயல் என்பீல்டு மேனியா என்ற கண்காட்சி நிகழ்ச்சியில் இந்த கஸ்டம் ராயல் என்பீல்டு எலக்ட்ரிக் பைக் முதன்முறையாக பார்வையாளர்களின் முன்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்த பைக் குறித்த புதிய வீடியோ பைக்வித்கேர்ள் என்ற பிரபலமான யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், இந்த 1984 ராயல் என்பீல்டு பைக்கின் உரிமையாளர் ரிக்கி தனக்கு எவ்வாறு இப்படியொரு யோசனை தோன்றியது என்பது குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோவினை கீழே, செய்திக்கு இறுதியில் காணலாம்.
1984இல் உருவாக்கப்பட்ட இந்த ராயல் என்பீல்டு பைக்கை ரிக்கியின் தந்தை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு பெட்ரோல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக இப்போது பல கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் மாற்றுகின்றன. ஆனால் அவற்றுடன் ஒப்பிடுகையில், இந்த கஸ்டம் 1984 ராயல் என்பீல்டு பைக்கின் ஸ்பெஷல் என்னவென்றால், எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி பொருத்தப்பட்டது மட்டுமின்றி பைக்கின் தோற்றத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு உள்ளனர்.

குறிப்பாக, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்பு ஆனது பைக்கின் என்ஜின் போன்றே மூடப்பட்டுள்ளது. அதாவது, பலர் இந்த பைக்கை பார்த்தவுடன் அளவில்-பெரிய என்ஜினை கொண்ட பைக் என்றே நினைப்பர். ராயல் என்பீல்டு நிறுவனம் 1984இல் வழங்கிய பைக்கின் சேசிஸில் எந்த மாற்றமும் இல்லை. அது அப்படியே தொடரப்பட்டு உள்ளது. பைக்கின் பெட்ரோல் டேங்க்கை பேட்டரி மற்றும் மோட்டார் கண்ட்ரோலரை வைக்கும் பகுதியாக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்த கஸ்டம் ராயல் என்பீல்டு எலக்ட்ரிக் பைக்கில் 5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பின் சக்கரத்திற்கு அருகே பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்க பொருத்தப்பட்டுள்ள பேட்டரி பேக்கை ஏறக்குறைய 6 மணிநேரத்தில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பி விடலாமாம். முழுவதுமாக சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியின் உதவியில் அதிகப்பட்சமாக 90கிமீ தொலைவிற்கு பைக்கை இயக்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகள் பலவற்றை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால் அவை எதிலிலும் இல்லாத புதுமையான தோற்றத்தில் இந்த 1984 ராயல் என்பீல்டு பைக் உள்ளதை கூறியே ஆக வேண்டும். அத்துடன், டயர்களும் பெரியதாக்கப்பட்டு உள்ளதால், பைக் பார்ப்பதற்கே முரட்டுத்தனமானதாக காட்சியளிக்கிறது.


Click it and Unblock the Notifications









