இந்தியாவிற்கான புதிய 1000சிசி கவாஸாகி பைக் - விலை எவ்வளவு என்று மட்டும் கேட்காதீங்க... தாங்க மாட்டீங்க!!
மேம்படுத்தப்பட்ட 2023 வெர்ஸஸ் 1000 (2023 Versys 1000) பைக்கை இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த முன்னணி 2-வீலர் பிராண்டான கவாஸாகி இந்தியாவில் 2023 வெர்ஸஸ் 1000 மோட்டார்சைக்கிளை ரூ.12.19 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கவாஸாகியின் 1000சிசி அட்வென்ச்சர் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கான இது மெட்டாலிக் ஸ்பார்க் கருப்பு உடன் மெட்டாலிக் மேட் கிராபேன் ஸ்டீல் கிரே என்ற ஒரேயொரு ட்யூவல்-டோன் பெயிண்ட் தேர்வில், ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், 2022 வெர்ஸஸ் 1000 பைக்கை போன்றுதான் புதிய 2023 மாடலும் உள்ளது. இந்த கவாஸாகி பைக்கில் 2-பேட் ஹெட்லைட், ஃபேரிங் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட கார்னரிங் விளக்குகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்க்ரீன், ஸ்டெப்-அப் சீட் டிசைன், பின்பக்க லக்கேஜ் ராக் மற்றும் சைடு-ஸ்லங் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை முக்கிய பாகங்களாக இடம் பெற்றுள்ளன.
விளக்குகள் முழு-எல்இடி தரத்தில் பொருத்தப்பட, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தான் புதிய வெர்ஸஸ் 1000 பைக்கிலும் தொடரப்பட்டுள்ளது. அனலாக்-ஸ்டைலில் டச்சோமீட்டரை கொண்டுள்ள இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது எல்சிடி திரையின் வழியாக விபரங்களை காட்டுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு கவாஸாகி கார்னரிங் மேனேஜ்மெண்ட் செயல்பாட்டுடன் போஸ்ச் ஐ.எம்.யூ, ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன.

இவற்றுடன், முன்பு கூடுதல் ஆக்ஸஸரீயாக இருந்த டிசி சாக்கெட் தற்போது பைக்கின் ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மொபைல் போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்ய பயன்படும் இந்த தொழிற்நுட்பத்தை பைக்கின் விலையிலேயே இனி பெற முடியும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வெர்ஸஸ் 1000 பைக்கில் 1,043சிசி, இன்லைன்-4 சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அமைப்பில் சிலிண்டர் ஒன்றுக்கு ஒரு வால்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 118.2 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 102 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆனது அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் மெக்கானிசமை கொண்டுள்ளது. என்ஜினை போன்று பைக்கின் மற்ற இயந்திர பாகங்களிலும் 2023 வெர்ஸஸ் 1000 பைக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 43மிமீ தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன. இவை இரண்டும் ரீபாண்ட் டேம்பிங்கிற்கும், ப்ரீலோடுக்கும் அட்ஜெஸ்ட் ஆகக்கூடியவை. பிரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 4-பிஸ்டன் காலிபர்களுடன் 310மிமீ-இல் இரு டிஸ்க்குகளும், பின்பக்கத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 250மிமீ-இல் சிங்கிள் ரோடாரும் கவனித்து கொள்கின்றன.
வெர்ஸஸ் 1000 பைக்கில் வழங்கப்படும் அலாய் சக்கரங்களில் முன் சக்கரத்தில் 120/70-பிரிவு டயரும், பின் சக்கரத்தில் 180/55-பிரிவு டயரும் பொருத்தப்படுகின்றன. ஏற்கனவே கூறியதுபோல், 2023 கவாஸாகி வெர்ஸஸ் 1000 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.12.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த கவாஸாகி பைக்கிற்கு பிஎம்டபிள்யூ எஃப்900 எக்ஸ்.ஆர் மற்றும் டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








