ஹெட்லைட் டிசைன் மாத்தியாச்சு... 2023 கேடிஎம் 200 ட்யூக் பைக் அறிமுகம் - இதுதான் ஷோரூம் விலை!!
மேம்படுத்தப்பட்ட 2023 கேடிஎம் 200 ட்யூக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் புதிய 200 ட்யூக் பைக்கில் என்னென்ன புதிய அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? என்பதை இனி பார்க்கலாம்.
ஆஸ்திரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் களமிறங்கியது. இந்த 10 வருடங்களில் கேடிஎம் நம் நாட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது என்றால், அதில் மிகையில்லை. இதற்கு முக்கிய காரணம், நம் நாட்டு சந்தைக்கு ஏற்பவும், நம் மக்களுக்கு ஏற்பவும் அமைந்த கேடிஎம் நிறுவனத்தின் திட்டங்களாகும்.

கேடிஎம் பிராண்டில் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பைக் 200 ட்யூக் ஆகும். அதன் பின்னரே 125சிசி பைக்குகளை அறிமுகப்படுத்தியது. அப்படியென்றால், 200சிசி பைக்குகள் மீது எத்தகைய நம்பிக்கையை கேடிஎம் நிறுவனம் வைத்துள்ளது என்பதை அறியலாம். இந்தியாவில் 200சிசி-இல் 200 ட்யூக் மற்றும் ஆர்சி200 என்ற மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது.
இந்த கேடிஎம் 200சிசி பைக்குகளுள் ஒன்றான 200 ட்யூக் தற்போது மேம்படுத்தப்பட்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. புதிய 200 ட்யூக் பைக்கில் மிக முக்கிய அம்சமாக முழு-எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட புதிய கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.96 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023 கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் ஹெட்லைட் தான் முக்கிய அப்டேட்டாக புதிய வடிவில் வழங்கப்படும் என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்ததே. அதன்படி, கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் வழங்கப்பட்டு வந்த முழு-எல்இடி ஹெட்லைட் செட்-அப் புதிய 200 ட்யூக் பைக்கில் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டினால் கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,000 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
200 ட்யூக் பைக்கில் இனி 32 எல்இடி பல்புகள் மற்றும் 6 ஒளி எதிரொலிப்பான்கள் இருக்கும். இவற்றுடன் கூடுதலாக, பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளும் புதிய 200 ட்யூக் பைக்கில் கிடைக்கும். கேடிஎம் ட்யூக் பைக்குகள் 125சிசி-இல் இருந்து 390சிசி வரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் 200 ட்யூக் பைக் மட்டுமே ஹெட்லைட் விஷயத்தில் சற்று வித்தியாசமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது 200 ட்யூக் பைக்கும் மற்ற ட்யூக் பைக்குகளை போல் ஹெட்லைட்டை பெற்றுள்ளது.

புதிய ஹெட்லைட்டை தவிர்த்து 2023 கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் வேறெந்த மாற்றமும் இல்லை. அதாவது, தோற்றத்திலும் சரி, இயந்திர பாகங்களிலும் சரி எந்த அப்டேட்டும் இந்த முறை கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் பைக்கிற்கு வழங்கப்படும் நிறத்தேர்வுகளில் கூட எந்த மாற்றமும் இல்லை. 2023 கேடிஎம் 200 ட்யூக் பைக்கை வாடிக்கையாளர்கள் எலக்ட்ரானிக் ஆரஞ்ச் அல்லது டார்க் சில்வர் மெட்டாலிக் நிறத்தில் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஹெட்லைட்டை தவிர்த்து, பைக்கில் வேறெந்த அப்டேட்டும் வழங்கப்படாத காரணத்தினால்தான் 2023 கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் விலை வெறும் ரூ.3,000 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கேடிஎம் 200 ட்யூக் பைக் ஏற்கனவே மிகவும் அட்வான்ஸான ஸ்டைலில் தோற்றத்தை கொண்டுள்ளது. இதனால் 200 ட்யூக் பைக்கை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயம் கேடிஎம் நிறுவனத்திற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









