சூப்பரான அப்டேட்கள்... யமஹா எம்டி-15 பைக்கை வாங்க கூட்டம் குவிய போகுது!! அறிமுகத்திற்கு முன் வெளிவந்த வீடியோ
இந்தியாவில் யமஹா பைக்குகளுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன். ஆர்15, எஃப்.இசட் பைக்குகள் இதற்கு சிறந்த உதாரணங்களாக சொல்லலாம். அவற்றின் வரிசையில் சமீப காலத்தில் யமஹா எம்டி-15 பைக்கும் இணைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் யமஹா எம்டி-15 பைக்குகளுக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர். இதனாலேயே எம்டி-15 பைக்குகளை யமஹா நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்து விடுகிறது. அந்த வகையில் இந்த 2023ஆம் வருடத்திற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ள யமஹா எம்டி-15 பைக் டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைய துவங்கியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், 2023 யமஹா எம்டி-15 பைக்கின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம். 2023ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக பைக்கிற்கு புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பைக்கில் சில புதிய டச்-அப்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் ஒபிடி-2விற்கு இணக்கமானதாகவும் புதிய எம்டி-15 பைக் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய அப்டேட்களினால் பைக்கின் விலை வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்பது உறுதி. 2023 எம்டி-15 பைக்கிற்கு யமஹா புதியதாக வழங்கியுள்ள பெயிண்ட் தேர்வானது பளபளப்பான கருப்பு/ சிவப்பு ஆகும். இந்த பெயிண்ட்டில் பைக்கின் பெரும்பான்மையான பாகங்கள் கருப்பு நிறத்திலேயே உள்ளன. அதேநேரம் இந்த பெயிண்ட் தேர்வின் மூலமாக முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க்குகளை தங்க நிறத்தில் பெறலாம்.

அதேபோல், பைக்கின் சக்கரங்கள் இந்த பெயிண்ட் தேர்வில் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். எம்டி-15 பைக்கிற்கு ஏற்கனவே மெட்டாலிக் கருப்பு, ஐஸ் ஃப்ளோ-வெர்மிலியன், சியான் ஸ்ட்ரோம், ரேசிங் நீலம் மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசன் என்ற 4 விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஒபிடி-2 ஆனது பைக் வெளியிடும் மாசு உமிழ்வை தீவிரமாக கட்டுப்படுத்தக்கூடிய தொழிற்நுட்ப அம்சமாக விளங்குகிறது.
எக்ஸாஸ்ட் எரிவாயுகளை ஒவ்வொரு வினாடியும் கண்காணிக்கும் தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஒபிடி-2 ஆனது செயல்படக்கூடியது. இவை தவிர்த்து, 2023 எம்டி-15 பைக்கில் வேறெந்த மாற்றத்தையும் யமஹா நிறுவனம் கொண்டுவரவில்லை. இதனால் புதிய எம்டி-15 பைக்கிலும் வழக்கமான 155சிசி, லிக்யுடு-கூல்டு, SOHC, 4-வால்வு என்ஜினே தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 18.4 பிஎஸ் மற்றும் 14.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. யமஹா எம்டி-15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.1,65,390 ஆக உள்ளது. இந்த விலை எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்டி-15 பைக் மட்டுமின்றி, ஆர்15 மற்றும் எஃப்.இசட்-எக்ஸ் பைக்குகளையும் யமஹா நிறுவனம் புதிய வருடத்திற்காக அப்டேட் செய்துள்ளது.
இந்த அப்டேட்டின்படி, ஆர்15 பைக் புதிய மேட் கருப்பு/கோல்டு நிறத்தேர்வையும், எஃப்.இசட்-எக்ஸ் பைக் புதிய மேட் நீல நிறத்தேர்வையும் பெற்றுள்ளன. இதில் எஃப்.இசட்-எக்ஸ் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய மேட் நீல நிறமானது ஆர்15 பைக்கிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நீல நிறத்துடன் ஒத்து காணப்படுகிறது. எஃப்.இசட்-எக்ஸ் பைக்கில் மற்றொரு முக்கிய அப்டேட்டாக ட்யூவல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








