காசை ரொம்ப மிச்சப்படுத்தலாம்... ரூ.70,000 இருந்தால் போதும், இந்த 5 மைலேஜ் பைக்குகளுள் ஒன்றை வாங்கிடலாம்!!
இந்தியா, பட்ஜெட் வாகனங்களுக்கான சந்தை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதனாலேயே மற்ற வெளிநாட்டு சந்தைகளில் காஸ்ட்லீயான வாகனங்களை விற்கும் நிறுவனங்கள் கூட இந்தியா என்று வந்தால் மட்டும் அதிக மைலேஜ் தரும் வாகனங்களை களமிறக்க முயல்கின்றன. ஏனெனில் இந்தியர்கள் வாகனத்தின் மைலேஜை தான் பார்ப்பார்கள் என்பது எல்லா நிறுவனங்களுக்கும் தெரியும்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் மைலேஜை அதிகம் வழங்கினால் மட்டுமே அவை நம் நாட்டில் சிறப்பாக விற்பனையாகும். இதற்கு ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களின் தயாரிப்புகள் மிக சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். அந்த வகையில் இந்திய சந்தையில் ரூ.70,000க்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட சிறந்த 5 மைலேஜ் பைக்குகளை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ்
இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்டாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து ஸ்பிளெண்டருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாக எச்.எஃப் டீலக்ஸ் விளங்குகிறது. முதன்முதலாக 2013இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கில் 97.2 சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ஹீரோ பைக்கில் 65kmpl என்ற அளவில் மைலேஜ் கிடைக்கிறது.
பஜாஜ் சிடி110
பிரபலமான பஜாஜ் சிடி100 பைக்கின் செயல்திறன்மிக்க வெர்சனாக சிடி110 சமீபத்தில்தான் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பொருத்தப்படும் 115.45சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது 8.48 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த புதிய பஜாஜ் பைக்கில் 70kmpl வரையிலான மைலேஜை பெறலாம்.
பஜாஜ் பிளாட்டினா 110
சிடி பைக்குகளை போன்று, பஜாஜ் பிளாட்டினா பைக்குகளும் 10 வருடத்திற்கும் மேலான வரலாற்றை சந்தையில் கொண்டவை. குறிப்பாக, டெலிவிரி பணிகளில் ஈடுப்படுவோரின் முதல் சாய்ஸ் பிளாட்டினா பைக்காக தான் இருக்கும். பிளாட்டினா பைக்கில் 115.45சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் உதவியுடன் 70kmpl வரையிலான மைலேஜை பிளாட்டினா 110 பைக் வழங்குகிறது.
டிவிஎஸ் ஸ்போர்ட்
நமது தமிழக நிறுவனமான டிவிஎஸ் மோட்டாரின் சார்பில் இந்த வரிசையில் உள்ள ஒரேயொரு மோட்டார்சைக்கிள் இதுவாகும். ஸ்போர்ட் பைக்கில் 109.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை டிவிஎஸ் நிறுவனம் பொருத்துகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படும் இந்த என்ஜினின் மூலம் 70kmpl வரையில் மைலேஜை ஸ்போர்ட் பைக் வழங்குகிறது.
பஜாஜ் பிளாட்டினா 100
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதிக மைலேஜை வழங்கும் பைக் இதுவாகும். இந்த பைக்கில் 102சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பொருத்துகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7.9 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. பிளாட்டினா 100 பைக்கில் 72kmpl வரையிலான மைலேஜை பெற முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
நீங்கள் சற்று உற்று கவனித்தீர்கள் எனில், இந்த 5 பைக்குகளிலும் கிட்டத்தட்ட ஒரு ஒற்றுமை இருக்கும். அதாவது இவை ஐந்திலும் பேனல்கள் அவ்வளவாக வழங்கப்பட்டிருக்காது. இதனால் இந்த பைக்குகளின் எடை மிகவும் குறைவாக இருக்கும். இது, மைலேஜை அதிகமாக பெறுவதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் யுக்தி ஆகும். ஆதலால், அதிக பாடி பேனல்களுடனான ஸ்டைலான, எடைமிக்க பைக்குகளில் மைலேஜ் குறைவாகவே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








