2023இல் புதுசா பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் 5 பைக்குகள்!! பைக் வாங்கும் பிளான் இருந்தா வெயிட் பண்ணுங்க..
இந்தியா கடந்த பல வருடங்களாகவே விலை குறைவான வாகனங்களுக்கே ஏற்ற சந்தையாக விளங்கி வருகிறது. இதனாலேயே அதற்கேற்ப வாகனங்களை வடிவமைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களே நம் நாட்டு ஆட்டோமொபைல் சந்தையில் நிலைத்து நின்றுள்ளன. டிரெண்டை மாற்ற நினைத்த நிறுவனங்களுள் சில சந்தையை விட்டு சென்றுள்ளன. சில நிறுவனங்கள் தற்போதுவரையில் போராடி கொண்டு இருக்கின்றன.
இதில் 2 சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா... ஏனென்றால் நம் நாட்டில் அன்றாட அலுவலக பயன்பாட்டிற்காகவும், மற்ற இதர தினசரி பயன்பாட்டிற்காகவும் இருசக்கர வாகனங்களை வாங்குவோரே அதிகம். இதற்கேற்ப கடந்த 2022இல் சில அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு வந்தன. அவற்றை தொடர்ந்து இந்த 2023ஆம் ஆண்டிலும் சில நிறுவனங்கள் அன்றாட பயன்பாட்டு 2-வீலர்களை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளன.
அவற்றில் சில மாடல்களின் அறிமுகங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன. சில மாடல்கள் இன்னும் உறுதியாக இறுதி செய்யப்படாமல் உள்ளன. இருப்பினும் இந்தியாவில் இந்த 2023ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படும் 5 அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம். மேலும், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதினால் இந்த 5 இருசக்கர வாகனங்களில் எலக்ட்ரிக் பைக்கும் அடங்குகின்றது.

1. ஹோண்டா 100-110சிசி அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்
கடந்த வருடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகடா இந்தியாவில் விரைவில் பட்ஜெட் விலையில் புதிய பைக் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்து இருந்தார். 100சிசி (அ) 110சிசி-இல் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய போதிய விபரங்கள் தற்போதைக்கு இல்லை என்றாலும், இந்த புதிய பைக் தற்போதைய சிடி110 ட்ரீம் பைக்கை காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஓலா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்வதில் மட்டுமே தற்போதைக்கு ஈடுப்பட்டுவரும் ஓலா நிறுவனம் விரைவில் முதல் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருந்தார். அதாவது, "2023, 2024ஆம் ஆண்டுகளில் தங்களது பிராண்ட்களில் இருந்து ஏகப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் வெளிவரவுள்ளன. முதலாவதாக பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிளும், அதன்பின் மாஸ் மார்க்கெட் மோட்டார்சைக்கிளும் களமிறக்கப்பட உள்ளன" என டுவிட்டரில் பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருந்தார்.
3. டிவிஎஸ் ஃபியாரோ 125
கடந்த 2022ஆம் வருடத்தின் துவக்கத்தில் எதிர்கால தயாரிப்புகளுக்காக சில பெயர்களுக்கான உரிமைகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கைபற்றி இருந்தது. அதில் ஃபியாரோ 125 -உம் ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல், ரைடர் 125 பைக்கில் இருந்து தரமான மோட்டார்சைக்கிள்களை வடிவமைப்பதற்கான ப்ளாட்ஃபாரத்தையும் டிவிஎஸ் நிறுவனம் கொண்டுள்ளது. இதனால் முன்பு ஆக்டிவாக இருந்த ஃபியாரோ பெயரை புதிய தோற்றத்திலான தயாரிப்புடன் டிவிஎஸ் நிறுவனம் மீண்டும் கொண்டுவருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
4. யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 125
இந்திய ரசிகர்கள் யமஹா நிறுவனத்திடம் பல வருடங்களாக கேட்டு கொண்டிருக்கும் தயாரிப்பு எக்ஸ்.எஸ்.ஆர் 125 ஆகும். பார்ப்பதற்கு சற்று பழமையான ஆர்.எக்ஸ்100 பைக்கை போல் இருப்பதாலோ என்னவோ எக்ஸ்.எஸ்.ஆர் 125 பைக்கின் மீது நம் இளைஞர்களுக்கு அப்படியொரு ஆசை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள இந்த பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போதைக்கு இல்லை. என்ன நடக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
5. ப்யூர் இவி ஈக்கோ ட்ரிஃப்ட்
ஹைதராபாத்தை சேர்ந்த எலக்ட்ரிக் 2-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ப்யூர் இவி ஏற்கனவே ஈக்கோ ட்ரிஃப்ட் எலக்ட்ரிக் பைக் பற்றிய விபரங்களை வெளியிட்டுவிட்டது. ஆகையால், விலைகளை அறிவித்தப்படி விற்பனைக்கு வருவது மட்டுமே பாக்கி உள்ளது. முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ள ஈக்கோ ட்ரிஃப்ட் பைக் ஆனது ப்யூர் இவி நிறுவனத்தின் விலைமிக்க தயாரிப்பாக விளங்கவுள்ளது என்றாலும், இதுவும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாகும்.


Click it and Unblock the Notifications








