லட்ச ரூபாய்களில் பைக் வாங்க ராயல் என்பீல்டை தான் எல்லாரும் தேடுறாங்க!! கவாஸாகி எல்லாம் ஒண்ணுமே இல்ல!
இந்தியாவில் குறைந்த சிசி என்ஜின் மோட்டார்சைக்கிள்களை வாங்கவே அதிக பேர் இருக்கின்றனர். இருப்பினும் 500சிசி-க்கு மேல் சிசி என்ஜின் கொண்ட பைக்குகளும் ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 500சிசி+ பைக்குகளை இனி பார்க்கலாம்.
500சிசி-க்கு மேல் அதிக பைக்குகளை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக கடந்த பல வருடங்களாகவே ராயல் என்பீல்டு விளங்குகிறது. ஆரம்பத்தில், ராயல் என்பீல்டின் 650சிசி ட்வின் பைக்குகளான இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகள் மட்டுமே இந்த பிரிவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது அவற்றை முந்திக் கொண்டு ராயல் என்பீல்டின் புதிய 650சிசி பைக்கான சூப்பர் மீட்டியோர் உள்ளது.

அதாவது, இந்தியாவிலேயே 500சிசி-க்கு மேல் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் பைக்காக தற்சமயம் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 விளங்குகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 2,202 சூப்பர் மீட்டியோர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இந்தியாவில் மொத்தமாகவே கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 500சிசி+ பைக்குகளின் எண்ணிக்கை 4,305 மட்டுமே ஆகும்.
அதாவது, 500சிசி-க்கு மேல் பைக் வாங்க விரும்புவோரில் 2இல் ஒருவரது தேர்வு ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் ஆக விளங்குகிறது. சூப்பர் மீட்டியோருக்கு அடுத்து 2வது இடத்திலும் ராயல் என்பீல்டின் தயாரிப்புகளான 650 ட்வின் பைக்குகள் உள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 1,746 650 ட்வின் பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் இதனை காட்டிலும் 112 அதிகமாக 1,858 650 ட்வின் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மேற்கூறப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை எண்ணிக்கையை கூட்டி பார்த்தாலே 4 ஆயிரம் வந்துவிடுகிறது. அப்படியென்றால், மீதி 300 யூனிட்கள் மட்டுமே மற்ற பைக் பிராண்ட்கள் விற்பனை செய்த 500சிசி+ பைக்குகளின் எண்ணிக்கை ஆகும்.
மேற்கூறப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் மிக பெரிய இடைவெளியுடன், இந்த வரிசையில் 3வது இடத்தில் கவாஸாகி இசட்900 பைக் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த கவாஸாகி பைக்கின் விற்பனை எண்ணிக்கை வெறும் 119 மட்டுமே ஆகும். 2022 அக்டோபர் மாதத்தில் இதனை காட்டிலும் குறைவாக, வெறும் 35 இசட்900 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கவாஸாகியின் மற்றொரு விலையுயர்ந்த மோட்டார்சைக்கிளான நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் 67 யூனிட்கள் விற்பனை உடன் இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. இந்த கவாஸாகி பைக்கின் விற்பனையும் 2022 அக்டோபரில் குறைவாகவே (23) இருந்தது. உலகளவில் பிரபலமான சுஸுகி சூப்பர் பைக்கான ஹயபுஸா இந்த வரிசையில் 52 யூனிட்கள் விற்பனை உடன் 5வது இடத்தில் உள்ளது.
ஆனால், 2022 அக்டோபரில் 28 ஹயபுஸா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிரையம்ப்பின் ஸ்ட்ரீட் டிரிபிள் மோட்டார்சைக்கிள் இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 29 ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 7வது மற்றும் 8வது இடங்களில் கவாஸாகி பைக்குகளான வெர்ஸஸ் 650 மற்றும் நிஞ்சா 650 பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 16 மற்றும் 15 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூப்பர் மீட்டியோர் பைக்கின் மூலம் 500சிசி+ பைக்குகள் விற்பனையை ராயல் என்பீல்டு டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. ராயல் என்பீல்டு அளவிற்கு இல்லையென்றாலும், கவாஸாகி, சுஸுகி உள்ளிட்ட மற்ற சூப்பர் பைக் நிறுவனங்களின் விற்பனையும் கடந்த அக்டோபர் மாதத்தில் சிறப்பாகவே முன்னேற்றம் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









