ராயல் என்பீல்டின் பிளான் ஒவ்வொன்றாக ஒர்க் அவுட் ஆகுது!! 650சிசி பைக்குகள் விற்பனையில் போட்டிக்கு யாரும் இல்ல..
நம் இந்தியாவில் 500சிசி-க்கும் அதிக சிசி என்ஜின் கொண்ட பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஏப்ரலில் 500சிசி-க்கு மேல் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
குறைவான விலை, உள்நாட்டில் உற்பத்தி போன்ற காரணிகளினால் ராயல் என்பீல்டு தான் 500சிசி+ பைக்குகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக விளங்குகிறது. ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து தற்சமயம் மூன்று 650சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இண்டர்செப்டர் 650, காண்டினெண்டல் ஜிடி650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 என்பவை அந்த மூன்று மாடல்களாகும்.

இதில் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகள் ராயல் என்பீல்டின் 650 ட்வின் பைக்குகள் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 1,865 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவைதான் தற்போதைக்கு இந்தியாவில் 500சிசி-க்கு மேல் சிறப்பாக விற்பனையாகும் பைக்குகளாகும். ஆனால் 2022 ஏப்ரலில் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் மொத்தம் 2,159 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் 650 ட்வின் பைக்குகளின் விற்பனை 13.62% குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம், சூப்பர் மீட்டியோர் என்ற மற்றொரு 650சிசி பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து விற்பனை வந்தது ஆகும். கடந்த 2023 ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக் கடந்த ஏப்ரலில் மொத்தம் 1,139 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 3,004 650சிசி பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு அடுத்து, 3வது இடத்தில் கவாஸாகி பைக்கான வெர்ஸஸ் 650 உள்ளது. இருப்பினும், சூப்பர் மீட்டியோருக்கும் வெர்ஸஸ் 650-க்கும் இடையே மிக பெரிய இடைவெளி உள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் வெறும் 59 வெர்ஸஸ் 650 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் 2022 ஏப்ரலில் இந்த கவாஸாகி பைக்கின் விற்பனை ஆனது இதனை காட்டிலும் குறைவாக, 47 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. சுஸுகி மோட்டார்சைக்கிளின் சூப்பர் பைக்கான ஹயபுஸா இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை 57 யூனிட்களின் விற்பனை உடன் தனதாக்கி உள்ளது. ஆனால் 2022 ஏப்ரலில் வெறும் 3 ஹயபுஸா பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

5வது இடத்தில் டிரையம்ப் டைகர் 900 பைக் உள்ளது. கடந்த ஏப்ரலில் மொத்தம் 34 டைகர் 900 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இதற்கடுத்து 6வது, 7வது மற்றும் 8வது இடங்களில் கவாஸாகியின் சூப்பர் பைக்குகளான இசட்900, நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் மற்றும் நிஞ்சா 1000 பைக்குகள் முறையே 33, 24 மற்றும் 19 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. 9வது மற்றும் 10வது இடம் டிரையம்ப் மோட்டார்சைக்கிளின் ஸ்பீடு ட்வின் ரக பைக்குகளான ஸ்பீடு ட்வின் 1200 மற்றும் ஸ்பீடு ட்வின் 900 அடுத்தடுத்து உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவை 10 தான் தற்போதைக்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 500சிசி+ பைக்குகள் ஆகும். சந்தையில் புதியதாக ஏதேனும் ஒரு சூப்பர் பைக் அறிமுகமாகினால், அதன் விற்பனை அதிகரிக்க, இந்த பத்தில் ஒன்றின் விற்பனை குறைய துவங்கும். ஆதலால், சூப்பர் பைக்குகளின் விற்பனை ஆனது ஓர் நிலையற்றதே ஆகும். உதாரணத்திற்கு, 2022 ஏப்ரலில் ஹோண்டா சிபிஆர்650எஃப், டிரையம்ப் டைகர் 660 உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின, ஆனால் கடந்த ஏப்ரலில் அவை ஒன்றுக்கூட விற்பனையாகவில்லை.


Click it and Unblock the Notifications









