சிங்கிள் சார்ஜில் 180 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் பைக்! ராயல் என்பீல்டு மாதிரியே இருக்கு! மொதல்ல விலையை பாருங்க!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) விற்பனை சக்கை போடு போடுகிறது. டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj), ஓலா (Ola), ஏத்தர் (Ather) உள்பட பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து கொண்டுள்ளன.
ஆனால் எலெக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனினும் அந்த நிலைமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியுள்ளது. ஆம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இணையாக தற்போது பல்வேறு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்தியாவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

இந்த வரிசையில் அட்டகாசமான புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்ஸோ விஎஸ்01 (ABZO VS01) எலெக்ட்ரிக் பைக்கை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். அப்ஸோ மோட்டார்ஸ் (ABZO Motors) நிறுவனம் களமிறக்கியுள்ள முதல் எலெக்ட்ரிக் பைக்தான் விஎஸ்01.
72V 70 Ah லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பை இந்த எலெக்ட்ரிக் பைக் பெற்றுள்ளது. ரெகுலர் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு சுமார் 6 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இதை வெறும் 3 மணி நேரம் 20 நிமிடங்களில் செய்து விடலாம்.

பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பி விட்டால், 180 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் (Range) என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் மொத்தம் 3 ரைடிங் மோடுகள் (Riding Modes) வழங்கப்பட்டுள்ளன.
அவை ஈக்கோ (Eco), நார்மல் (Normal) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகும். இதில், ஈக்கோ மோடில் அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோ மீட்டர்கள் வேகத்திலும், நார்மல் மோடில் மணிக்கு 65 கிலோ மீட்டர்கள் வேகத்திலும், ஸ்போர்ட் மோடில் மணிக்கு 85 கிலோ மீட்டர்கள் வேகத்திலும் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் என இந்த எலெக்ட்ரிக் பைக்கில் ஏகப்பட்ட வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு உள்பட மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில், இந்த எலெக்ட்ரிக் பைக் கிடைக்கும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய அப்ஸோ விஎஸ்01 எலெக்ட்ரிக் பைக்கின் ஆரம்ப விலை (Price) 1.80 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 2.22 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அப்ஸோ விஎஸ்01 எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச், வசதிகள் எல்லாம் ஓகேதான். ஆனால் விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை போல் தோன்றுகிறது. ராயல் என்பீல்டு பைக்குகளை போல், அப்ஸோ விஎஸ்01 எலெக்ட்ரிக் பைக் ரெட்ரோ க்ரூஸர் வடிவத்தில் டிசைன் (Design) செய்யப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளையே ஒருவரால் வாங்கி விட முடியும். ஒரு எலெக்ட்ரிக் பைக்கை, பெட்ரோலில் இயங்கும் பைக் ஒன்றுடன் ஒப்பிட முடியாது என்றாலும் கூட, பொதுவான இந்திய வாடிக்கையாளர்களின் சிந்தனை அவ்வாறுதான் இருக்கும். எனவே அப்ஸோ விஎஸ்01 விற்பனையில் சாதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








