ராயல் என்பீல்டு பைக்கை வாங்குறது பெரிய மேட்டரு இல்ல!! தேவையில்லாம இதையெல்லாம் வாங்கி பொருத்தாதீங்க!
ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்குகளுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில், ராயல் என்பீல்டு பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்று வாழ்நாள் கனவாக இருப்பவர்களும் இருக்கின்றனர். ராயல் என்பீல்டு பைக்கின் மீது நிறைய பேர் பைத்தியம் போல் இருப்பதற்கு காரணங்களுள் ஒன்று, இந்த பைக்குகளை எளிதாக கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என்பதாகும்.
அதாவது, விருப்பத்திற்கேற்ப பைக்கை அலங்கரித்துக் கொள்ளலாம் என்பதாகும். இருப்பினும், சில ஆக்ஸஸரீ பாகங்களை ராயல் என்பீல்டு பைக்குகளில் பொருத்த முடியாது/ கூடாது. அவற்றுள் முக்கிய 5 ஆக்ஸஸரீகளை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். இவை உங்கள் ராயல் என்பீல்டு பைக்கின் அழகை கெடுப்பது மட்டுமின்றி, பைக்கின் செயல்படுதிறனையும் பாதிக்கலாம்.

எக்ஸாஸ்ட்: ராயல் என்பீல்டு பைக்குகளின் அடையாளமே அவற்றிம் "டும்... டும்" சத்தம் தான். ஆனால், இன்றைய கால மாடர்ன் ராயல் என்பீல்டு பைக்குகள் அந்த அளவிற்கு எக்ஸாஸ்ட் சத்தத்தை வெளிப்படுத்தக்கூடியவைகளாக இல்லை. இதற்கு, ஓர் முக்கிய காரணம் உள்ளது. அதை பற்றி இங்கே விவாதிக்க போவதில்லை. சில கஸ்டமர்ஸ் டும்... டும் சத்தத்திற்காகவே தனியாக ஒரு எக்ஸாஸ்ட் குழாயை வாங்கி பொருத்திக் கொள்கின்றனர். இது பைக்கின் மைலேஜ் விஷயத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், போலீஸாரின் பிடியிலும் உங்களை சிக்க வைத்துவிடும்.
அலாய் சக்கரங்கள்: தனது பைக்குகளில் அலாய் சக்கரங்களை வழங்குவதில் ராயல் என்பீல்டு நிறுவனமே தற்சமயம் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது. ஏனெனில், அலாய் சக்கரங்களை பொருத்த வேண்டுமெனில், எடைமிக்க ராயல் என்பீல்டு பைக்குகளின் பாடி ஸ்டைலில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். இதை தெரியாமல், பல ராயல் என்பீல்டு ஓனர்கள் தங்களது பைக்குகளில் ஸ்போக் சக்கரங்களுக்கு பதிலாக அலாய் சக்கரங்களை பொருத்துவதை பார்க்க முடிகிறது.

ஹேண்டில்பார்கள்: மற்ற பிராண்ட் பைக்குகளுக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கும் நிறைய வித்தியாசமும் உள்ளது. அதில் முக்கியமானது பைக்கின் எடை. எந்தவொரு பைக்கிலும் ஹேண்டில்பாரை நீக்கி, நாமாக ஒரு ஹேண்டில்பாரை பொருத்துவது கூடாது. அப்படியிருக்கையில், பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பின் வடிவமைக்கப்படும் ராயல் என்பீல்டு பைக்குகளில் இந்த செயல் கூடவே கூடாது.
ஹெட்லைட்ஸ்: ராயல் என்பீல்டு பைக்குகளில் பொருத்துவதற்கு என பல்வேறு ஹெட்லைட்கள் ஆஃப்டர் மார்க்கெட் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இருப்பினும், சிலர் பிரகாசமான & வித்தியாசமான ஒளிக்காக விலை குறைவான ஹெட்லைட்டை வாங்கி பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் மறந்துவிட வேண்டாம், ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் ஹெட்லைட்டை விட எந்த ஹெட்லைட்டும் பிரகாசமான ஒளியை தராது.

லெக் கார்ட்: ராயல் என்பீல்டு மட்டுமின்றி, எந்தவொரு பைக்கிற்கும் லெக் கார்ட் அவசியமானது ஆகும். ஏனெனில், அவைதான் விபத்தின்போது உங்களது கால்களை பாதுகாக்கக் கூடியவை. ஆனால், ராயல் என்பீல்டு பைக்குகளை பொறுத்தவரையில், அவற்றை சரியாக வாங்கி, பொருத்துவது முக்கியம். லெக் கார்ட்கள் பைக்கின் ஏரோடைனாமிக்ஸை பாதிக்கக்கூடியவை என்பதை மறந்துவிட வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு பைக்குகள் கிட்டத்தட்ட கார் போன்றவை. அவற்றை வாங்குவதை காட்டிலும், முறையாக பராமரிப்பதும், எல்லா விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவதும் முக்கியம். மேற்கூறப்பட்ட ஆக்ஸஸரீகளை பலர் குறைந்த விலையில் வாங்கி பொருத்துவதன் காரணமாகவே, இவற்றை உங்கள் ராயல் என்பீல்டு பைக்குகளில் பொருத்த வேண்டாம் என்கிறோம்.


Click it and Unblock the Notifications









