பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை வாங்க இனி அதிகம் செலவாகாது!! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புது மாடல் வருது!
பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் விரைவில் சிறிய அளவிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பேட்டரி ஆப்ஷனில் சேத்தக்கில் 113கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என கூறப்படுகிறது. வாருங்கள், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று பஜாஜ் சேத்தக் ஆகும். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அர்பன், பிரீமியம் என இரு விதமான வேரியண்ட்களில் பஜாஜ் சேத்தக் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், அதன்பின் அர்பன் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டதால், தற்போதைக்கு பிரீமியம் வேரியண்ட்டிலும், பிரீமியம் எடிசனிலும் மட்டுமே சேத்தக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சேத்தக்கின் அர்பன் வேரியண்ட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் பணிகளில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இறங்கியுள்ளது.
விரைவில் சிறிய அளவிலான பேட்டரி ஆப்ஷன் உடன் சேத்தக் அர்பன் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் மூலமாக, பஜாஜ் சேத்தக்கின் விலை இன்னும் குறையும் என கூறப்படுகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் இ-ஸ்கூட்டரில் புதியதாக கொண்டுவரும் பேட்டரி ஆப்ஷனுக்கான அனுமதியை வேண்டி அரசாங்கத்திடம் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த அரசாங்க ஆவணம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் மூலமாக, புதிய சேத்தக் அர்பன் ஸ்கூட்டரை பற்றி பல்வேறு விபரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. குறிப்பாக, சிறிய அளவிலான 2.48kWh பேட்டரி ஆப்ஷனை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுவர உள்ளது. அதுவே, தற்போதைய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரில் 2.88kWh பேட்டரி வழங்கப்படுகிறது.
பேட்டரியின் அளவு குறைவதால், அதற்கேற்ப ஸ்கூட்டர் வழங்கும் ரேஞ்சின் அளவும் குறைவாக இருக்கும். அதாவது, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக இயங்கும் தூரம் குறைவாக இருக்கும். புதிய சேத்தக் அர்பன் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 113கிமீ என தற்போது வெளியாகியுள்ள அரசாங்க ஆவண படத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், தற்சமயம் விற்பனையில் இருக்கும் சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டர் ஆனது 126கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. மற்றப்படி, நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனால், தோற்றத்திலும் தற்போதைய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டருக்கும், புதிய அர்பன் ஸ்கூட்டருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது.
இருப்பினும், எடையில் பிரீமியம் வேரியண்ட்டை காட்டிலும் புதிய அர்பன் வேரியண்ட் 3 கிலோ வரையில் குறைவானதாக இருக்கும். சில வாரங்களுக்கு முன்பு சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று மத்தியில் பொருத்தப்பட்ட மோட்டார் உடன் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு இருந்தது. எங்களுக்கு தெரிந்தவரையில், அதுதான் சேத்தக் அர்பன் ஸ்கூட்டராக இருக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.50 இலட்சம் என்ற அளவில் உள்ளது. இதனை குறைத்து, ரூ.1 இலட்சம் - ரூ.1.20 இலட்சம் என்ற அளவில் சேத்தக்கை விற்பனைக்கு கொண்டுவரும் பொருட்டே புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் களமிறக்குகிறது.


Click it and Unblock the Notifications









