குறைந்த பட்சமாகவே லிட்டருக்கு 50கிமீ மைலேஜ் கிடைக்கும்!! ரூ.1 இலட்சம் செலவிலேயே இந்த ஸ்கூட்டர்களை வாங்கிடலாம்!
பைக்கிற்கும், ஸ்கூட்டருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, ஸ்கூட்டர்களில் மைலேஜ் என்றொரு விஷயம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பைக்குகளுடன் ஒப்பிடுகையில் ஸ்கூட்டர்களில் சற்று குறைவாகவே மைலேஜ் கிடைக்கிறது. இதற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என பல்வேறு காரணங்கள் உள்ளன.
இருப்பினும், ஸ்கூட்டர் ஒன்றை வாங்குவதுதான் உங்கள் விருப்பம் எனில், இந்தியாவில் சில ஸ்கூட்டர்கள் அதிக மைலேஜை வழங்குகின்றன. அவை என்னென்ன என்பதை தேடி பிடித்து வாங்குவது சற்று சிரமம். உங்களுக்காகவே, ரூ.1 இலட்சத்திற்குள் சிறந்த மைலேஜை வழங்கக்கூடிய 5 ஸ்கூட்டர்களை இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி: இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா ஆகும். தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்ற ஆறாம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டரில் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. எல்இடி விளக்குகளில் இருந்து ஃப்யுல் இன்ஜெக்ஷன் வரையில் அந்த வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.73,086 ஆக உள்ளது.

டிவிஎஸ் ஜூபிட்டர் 125: ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் களமிறக்கிய ஸ்கூட்டர் தான் ஜூபிட்டர் ஆகும். டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் பொதுவாகவே அவற்றின் பெரிய அளவிலான அண்டர்-சீட் இடவசதியினால் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. அத்துடன், ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரில் டிஜிட்டல் அனலாக் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

சுஸுகி ஆக்ஸஸ் 125: மேற்கூறப்பட்ட ஹோண்டா, டிவிஎஸ் 125சிசி ஸ்கூட்டர்களுக்கு இது எந்த விதத்திலும் சளைத்தது இல்லை. மேலும், இந்த சுஸுகி ஸ்கூட்டரின் விலையும் பெரியதாக அதிகம் கிடையாது. ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் துளை மற்றும் நீளமான ஃபுட்போர்டு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125: இந்த வரிசையில் நாம் பார்க்கும் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர் இது எனலாம். ஏனெனில், மேஸ்ட்ரோ எட்ஜின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.86 ஆயிரம் என்ற அளவில் இருந்து ஆரம்பிக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சைடு-ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப், எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், மொபைல் சார்ஜர் மற்றும் இருக்கைக்கு அடியிலும் விளக்கு உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் ஆகும்.

யமஹா ரே இசட்.ஆர்: மேஸ்ட்ரோ எட்ஜ் போல அதிக ஷார்ப் லைன்களுடன் வடிவமைக்கப்படும் யமஹா 125சிசி ஸ்கூட்டர். ரே இசட்.ஆரின் எடை வெறும் 98 கிலோ மட்டுமே. இதன் மூலம் இந்த லிஸ்ட்டிலேயே எடை குறைவானதாக இந்த ஸ்கூட்டர் விளங்குகிறது. ரே இசட்.ஆரில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், கியர்கள் ஆட்டோமேட்டிக்காக மாறுவதால் பைக்குகள் அளவிற்கு ஸ்கூட்டர்களில் மைலேஜ் கிடைப்பதில்லை. இருப்பினும், மேற்கூறப்பட்டுள்ள ஸ்கூட்டர்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60இல் இருந்து 65கிமீ மைலேஜை பெறலாம். குறைந்தப்பட்சமாக, டிவிஎஸ் ஜூபிட்டரில் கூட 50 kmpl மைலேஜ் சராசரியாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









