நடிகர் அஜித் துவங்கிய AK Moto Ride என்ன மாதிரியான கம்பெனி தெரியுமா? இதுல என்னென்ன சர்வீஸ் குடுக்கபோறாங்க?
நடிகர் அஜித் குமார் AK Moto Ride என்ற மோட்டார்சைக்கிள் டூரிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார். அவரது தனிப்பட்ட ஆர்வத்தை தொழிலாக மாற்றும் முயற்சியாக இதை மேற்கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிள் டூரிங் நிறுவனம் என்றால் என்ன? அதை எப்படி நாம் பயன்படுத்த முடியும் என காணலாம் வாருங்கள்.
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணியான நடிகர்களில் ஒருவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூகவலைத்தளத்தையே அதிர வைக்கும். என்னதான் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் இவருக்கு பிடித்தது கார், பைக் ரைடிங் தான்.

இவர் சினிமா சூட்டிங் போக மீதம் இருக்கும் நேரங்களில் தனது பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியா, மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் ரைடிங் செய்கிறார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவர் நடிக்கும் திரைப்படங்களில் பைக், கார் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்படும்.
இந்நிலையில் இவர் அடுத்து வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு உலக சுற்றுலா செல்லவுள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது அதற்கான பணிகள் நடந்து வரும் சூழ்நிலையில் தற்போது அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித் குமார் பற்றி ஒரு முக்கியமான அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் நடிகர் அஜித்குமார் AK Moto Ride என்ற பெயரில் ஒரு மோட்டார் சைக்கிள் டூரில் நிறுவனத்தை துவங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ரைடர்கள், சாகச ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சாலைகளிலும் ரைடிங் செய்ய சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டை பார்த்த பலருக்கு ஏற்பட்ட குழப்பம் மோட்டார்சைக்கிள் டூரிங் நிறுவனம் என்றால் என்ன?இந்த நிறுவனம் என்ன மாதிரியான சேவைகளை வழங்கும் என புரியாமல் குழம்பி வருகின்றனர். இது வேறு ஒன்றும் இல்லை நடிகர் அஜித் குமார் இத்தனை ஆண்டுகளாக அவ்வப்போது டூர் போகிறார் அல்லா அதே போல நீங்களும் செல்ல வேண்டும் என்றால் அதற்கு இந்த AK Moto Ride நிறுவனம் உதவும்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மூலம் பயணிப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். பலருக்கு மோட்டார் சைக்கிளில் லடாக் செல்ல வேண்டும் என்பது கனவு, லடாக் போல இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் பல பகுதிகள் இருக்கிறது. அங்கு மோட்டார் சைக்கிள் பயணம் செய்ய வேண்டும் என்றால் நாம் சொந்தமாக ஒரு சூப்பர் பைக் வாங்க வேண்டும்.
இப்படியான பயணத்திற்கு வெளிநாடுகளுக்கு இந்த பைக்கை கொண்டு செல்ல அனுமதி வாங்க வேண்டும். அங்கு ரைடு செல்லும் போது வரும் சக்கல்களை தீர்ப்பது என பல பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில் தான் நடிகர் அஜித்குமாரின் இந்த AK Moto Ride நிறுவனம் செயல்படவுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையிலும் சில குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி AK Moto Ride நிறுவனம் அட்வெஞ்சர் டூரிங் சூப்பர் பைக்குகளை ரைடு செல்லும் நபர்களுக்கு வழங்குகிறது. இந்த நிறுவனம் மூலம் ரைடு செய்பவர்களுக்கு பாதுகாப்பையும் சொகுசு வசதியையும் வழங்கவுள்ளது. ரைடு செல்லும் போது உடன் அனுபவமிக்க கைடுகள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக வெளிநாடுகள் அல்லது வேறு மாநிலங்களுக்கு பயணிக்கும் போது அங்கு மொழி மற்றும் அந்த மக்களின் கலாச்சாரம் வேறு படும் என்பதால் இதை எல்லாம் நன்று புரிந்த ஒருவரும் வழிகாட்டியாக இந்த ரைடில் செல்லும் நபர்களுடன் கூட வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக AK Moto Ride நிறுவனத்தின் மூலம் ரைடு செய்பவர்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை தேவையான உதவிகளை இந்த நிறுவனம் செய்து கொடுக்கவுள்ளது. இது தான் ஒரு மோட்டார் சைக்கிள் டூரிங் நிறுவனத்தின் வேலை. இப்படியான சேவையை வழங்கும் நிறுவனம் சில டூர் பேக்கேஜ்களை வைத்திருப்பார்கள்.
நடிகர் அஜித் குமாரின் AK Moto Ride நிறுவனத்தின் டூர் பேக் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை,இதில் எப்படி ரைடிற்காக பதிவு செய்வது, ஒரு ரைடிற்கு எவ்வளவு செலவாகும்? எந்தெந்த நாடுகள் மற்றும் ஊர்களில் ரைடு சர்வீஸ்களை இந்நிறுவனம் வழங்குகிறது உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித் குமார் நீண்ட காலமாக பைக் ரைடிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். அதன் நீட்சியாகவே இந்த மோட்டார்சைக்கிள் டூரிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இது அவரது ரசிகர்களை நல்வழிப்படுத்தும். அவரது ரசிகர்களுக்கும் பைக் ஓட்டும் ஆர்வத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications









