ரூ.1.5 லட்சத்தில் இ-ஸ்கூட்டர் வாங்க எத்தனை பேர் ரெடி? மத்திய அரசின் நடவடிக்கையால் விழி பிதுங்கும் ஆம்பியர்!!
ஃபேம்-2 திட்டத்தின் மானியம் குறைக்கப்படுவதை அடுத்து தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் அதிரடியாக அதிகரித்துள்ளது. ஃபேம்-2 திட்டத்தின் மானியங்கள் எப்போதில் இருந்து குறைக்கப்படுகின்றன? இதனால் விலை உயர்வை சந்திக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என தெரிந்துவிட்டதால், விரைவாக எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நமது மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் தான் ஃபேம்-2 ஆகும். இந்த திட்டத்தின்படி, எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு சில பல மானியங்கள் மத்திய அரசு சார்பிலும், அந்தந்த மாநில அரசாங்கங்களின் சார்பிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக சமீப ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளில் புதியதாக முளைக்க ஆரம்பித்தன. அதில் ஒன்றுதான் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் என கூறினாலும், ஃபேம்-2 திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே ஆம்பியர் நிறுவனம் செயல்பட்டு வருவதை கூறியே ஆக வேண்டும்.
சரி விஷயத்திற்கு வருவோம். எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மக்களிடத்தில் ஓரளவிற்கு அதிகரித்து இருப்பதாலோ என்னவோ ஃபேம்-2 திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தை குறைத்து கொள்வதாக சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், இதனால் பெரியதாக எந்த பிரச்சனையும் இருக்காது என ஓலா எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் தெரிவித்தன.

ஆனால் எதிர்பார்த்தப்படி, ஃபேம்-2 மானியம் குறைப்பால் ஓலா உள்பட பல்வேறு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலைகளை கணிசமாக அதிகரித்து வருகின்றன. இந்த வகையில், ஓலா தனது எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை ரூ.15,000 வரையில் உயர்த்தியுள்ள நிலையில், ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை ரூ.39,100 வரையில் உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் ஃபேம்-2 மானிய குறைப்பானது கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மானிய குறைப்பானது எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கு மட்டுமே தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பியர் பிராண்டில் இருந்து மொத்தம் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரிமஸ், மேக்னஸ் இ.எக்ஸ் மற்றும் ஜியல் இ.எக்ஸ் என்பவை ஆகும். இதில் ஜியல் இ.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.20,900 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை இனி ரூ.95,900 ஆகும். மேக்னஸ் இ.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.21,000 அதிகரிக்கப்பட்டு, ரூ.1.05 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைமிக்க ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான பிரிமஸின் விலை அதிரடியாக ரூ.39,100 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆம்பியர் பிரிமஸை இனி ரூ.1.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில்தான் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரூ.1.50 லட்சத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க எத்தனை தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் எந்த பிரச்சனையும் இல்லை என ஓலா கூறும்போதே, ஓலா நிறுவனம் பயத்தில் ஏதோ உளறுவதாக கூறியிருந்தோம். ஓலாவின் பயத்திற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய எலக்ட்ரிக் 2-வீலர் சந்தை இன்னும் சில மாதங்களில் எந்த அளவிற்கு மாறவுள்ளது என்பதை நினைத்தாலே திக்...திக் என உள்ளது.


Click it and Unblock the Notifications









