எப்பா பால் ஊத்த ரெடியா?.. போட்டியாளர்களை கதிகலங்க செய்யும் வகையில் புதிய இ-ஸ்கூட்டரை களமிறக்கிய ஆம்பியர்!
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்-அப் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஆம்பியர் (Ampere)-ம் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் தனது போட்டியாளர்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் விதமாக ஓர் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே இந்தியாவில் அது விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 900 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அறிமுகத்தைத் தொடர்ந்து ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் பணிகளும் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றன.

499 ரூபா இருந்தா இப்பவே புக் பண்ணிக்கலாம்
ரூ. 499 முன் கட்டணத்தில் தங்களுக்கான பிரைமஸ் இ-ஸ்கூட்டரை விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் புக் செய்துக் கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. ஆன்லைன் மற்றும் அதிகாரப்பூர்வ ஷோரூம் என இரு வழிகளிலும் புதிய ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனத்தை அதிக திறனை வெளியேற்றக் கூடிய சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் இ-ஸ்கூட்டராக ஆம்பியர் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
100 கிமீ வரை ஃபுல் சார்ஜ்ல பயணிக்கலாம்
இதுதவிர நவீன காலத்திற்கு ஏற்ற தயாரிப்பாகவும் பிரைமஸை ஆம்பியர் வடிவமைத்து இருக்கின்றது. குறிப்பாக, ஓர் முழு சார்ஜில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 77 கிமீ ஆகும். இந்த சூப்பரான வேக திறனுக்காக 4 kW PMS எலெக்ட்ரிக் மோட்டாரே பிரைமஸ் மின்சார ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நான்கு விதமான ரைடிங் மோட்கள்
இந்த மோட்டார் வெறும் ஐந்தே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்டுவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் பிரைமஸ் இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. ஈகோ (Eco), சிட்டி (City), பவர் (Power) மற்றும் ரிவர்ஸ் (Reverse) ஆகியவையே அவை ஆகும். இதில், ரிவர்ஸ் மோட் ஆனது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரிவர்ஸ் எடுக்க மட்டுமே பயன்படும்.
எப்போவுமே பொறுமையா போறது பெஸ்ட்
அதேவேளையில், நிறுவனம் உறுதி அளித்திருக்கும் முழு ரேஞ்ஜ் திறனை ஈகோ மோடில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். பிற மோட்கள் சற்று கூடுதல் திறனை வெளியேற்றக் கூடியவை என்பதால் அவற்றில் நிறுவனம் வாக்குறுதி அளித்திருக்கும் ரேஞ்ஜை எட்ட முடியாது. பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் வசதிக் கொண்ட 3 KWh LFP பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதுவே ஓர் முழு சார்ஜில் 100 க்கும் அதிகமான ரேஞ்ஜை தரும். இந்த பேட்டரி பேக் வழக்கமான பேட்டரி பேக்குகளைக் காட்டிலும் அதிக ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர, சில நவீன கால சிறப்பு வசதிகளும் ஆம்பியர் பிரைமஸ் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
செல்போனை இணைச்சுக்கலாம்
ப்ளூடூத் இணைப்பு, நேவிகேஷன், செல்போன் இணைப்பு வசதி உள்ளிட்ட சூப்பர் வசதிகளையே இந்த ஸ்கூட்டரில் ஆம்பியர் வழங்கி இருக்கின்றது. இதில் பயணக்கும்போது அதிக கம்ஃபோர்ட்டான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு சிறப்புகளை ஆம்பியர் சேர்த்து இருக்கின்றது. நீளமான லெக்ரூம், அகலமான இருக்கைகள் உள்ளிட்டவற்றை பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆம்பியர் வழங்கி இருக்கின்றது.
நிற தேர்வு தாராளம்
ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஆம்பியர் அறிவித்து இருக்கின்றது. ஹிமாலயன் ஒயிட் (Himalayan White), ராயல் ஆரஞ்சு (Royal Orange), ஹேவ்லாக் ப்ளூ (Havelock Blue) மற்றும் பக் பிளாக் (Buck Black) ஆகியவையே அவை ஆகும். இதுபோன்ற பிரத்யேக அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே ஆம்பியர் பிரைமஸ் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்னொரு வண்டியையும் அறிமுகம் செஞ்சிருக்கு
இது ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஒகினாவா உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. புதிய பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் சேர்த்து ஆம்பியர் நிறுவனம் ஜுல் எக்ஸ் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








