கேடிஎம் எல்லாம் கொல நடுக்கத்துல இருக்குது!! அப்ரிலியா நிறுவனம் களமிறக்கி இருக்கும் புது பைக் அப்படி!
இந்தியன் பைக் வார (2023 Indian Bike Week) கண்காட்சியில் அப்ரிலியா ஆர்.எஸ்457 (Aprilia RS457) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்ரிலியா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை எவ்வளவு? இதன் என்ஜின் & தொழிற்நுட்ப அம்சங்கள் உள்பட சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
கடைசி டிசம்பர் மாதத்தில், ஒவ்வொரு வருடமும் இந்தியன் பைக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் தற்சமயம் நடைபெற்றுவரும் இந்தியன் பைக் வார கண்காட்சியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த கண்காட்சியில் கவாஸாகி, டிரையம்ப் உள்ளிட்ட முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் புதிய மோட்டார்சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த வரிசையில் அப்ரிலியா நிறுவனம் அதன் புதிய ஆர்.எஸ்457 சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை இந்த கண்காட்சியின் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இத்தாலியில் உள்ள அப்ரிலியாவின் தலைமையகத்தில் இந்த சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்ரிலியா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்டது என்னவோ இத்தாலியாக இருந்தாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள ஆர்.எஸ்457 பைக்குகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. மஹாராஷ்டிரா, பாரமதியில் உள்ள பியாஜியோ நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி390 மற்றும் மற்றும் பிரபலமான யமஹா ஆர்3 பைக்குகளுக்கு விற்பனையில் புதிய ஆர்.எஸ்457 பைக் போட்டியாக விளங்கவுள்ளது.

இந்த பைக்கில் 457சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 47 பிஎச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் குயிக் ஷிஃப்டர் இணைக்கப்படுகிறது. புதிய ஆர்.எஸ்457 பைக்கின் தோற்றம் ஒன்றும் நமக்கு புதுமையானது அல்ல. ஏற்கனவே அப்ரிலியா ஆர்.எஸ்660 பைக்கின் அதே ஸ்டைலிலான தோற்றம் தான்.
இதன்படி, 3-விளக்குகளை கொண்ட எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் கூர்மையான பின்பகுதி உள்ளிட்டவற்றை புதிய ஆர்.எஸ்457 பைக்கிலும் காண முடிகிறது. பைக்கின் ஏரோடைனாமிக்ஸ் கொஞ்சம் தாறுமாறாக இருந்தாலும், இந்த பைக் சிட்டி ரைடிங்கிற்கு ஏற்றதாக இருக்கும். இதற்கேற்ப பெரிமீட்டர் ஃப்ரேம் மற்றும் போல்ட்-ஆன் சப்ஃப்ரேமில் இந்த பைக் உருவாக்கப்படுகிறது.
3 ரைடிங் மோட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய 3-நிலை டிராக்ஷன் கண்ட்ரோல், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றை தொழிற்நுட்ப அம்சங்களாக புதிய ஆர்.எஸ்457 பைக் பெற்றுள்ளது. அத்துடன், 5-இன்ச் வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரைடு-பை-வயர் சிஸ்டம் மற்றும் குயிக் ஷிஃப்டர் (கூடுதல் தேர்வாகவே) உள்ளிட்டவையும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.
சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 120மிமீ டிராவல் உடன் 41மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 130மிமீ டிராவல் உடன் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் ப்ரீ-லோடு அட்ஜெஸ்டபிள் ஆகும். பிரேக் பணியை கவனித்துக் கொள்ள முன் சக்கரத்தில் பைபர் 4-பிஸ்டன் ரேடியல் காலிபர் உடன் 320மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 220மிமீ டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அப்ரிலியா பைக்குகள் இந்தியாவிற்கு ஒன்றும் புதியது அல்ல. அந்த வரிசையில் தற்போது புதியதாக அப்ரிலியா ஆர்.எஸ்457 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்தியாவில் யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக அப்ரிலியா நிறுவனம் அதன் இந்த புதிய சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை களமிறக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








