குறைவான விலையில் ஏத்தர் கொண்டுவரும் இ-ஸ்கூட்டர் இதுதான்!! ஓலாவுக்கு இப்போதே தலை சுற்ற ஆரம்பித்து இருக்கும்!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான இது விரைவில் 450எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைவான விலையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், புதிய ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒருபக்கம் புதிய, புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மார்க்கெட்டில் முளைத்துவரும் நிலையில், மறுப்பக்கம் ஏற்கனவே சந்தையில் காலூன்றி விட்ட இவி நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் மார்க்கெட்டை விரிவுப்படுத்தும் முனைப்பில் உள்ளன.

இந்த வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450எஸ் என்ற பெயரில் புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. பொதுவாகவே, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலைமிக்கவை என்கிற பார்வை மக்களிடத்தில் உள்ளது. இதனை மாற்றும் விதமாக, குறைவான விலையில் ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான புதிய டீசர் படத்தை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் இருந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால், புதிய 450எஸ் ஸ்கூட்டரின் பின் இறுதி முனையை மட்டுமே காண முடிகிறது. ஸ்கூட்டரின் பின்னால் இருந்து பார்த்தால், ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படுகின்ற இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியை காண முடியும்.
ஆனால், ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுவதால், அறிமுகத்திற்கு முன்பாக தெரியக்கூடாது என்பதற்காக அந்த பகுதி மட்டும் துணியினால் மூடப்பட்டு உள்ளது. ஏத்தர் 450எஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட உள்ளது புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என சொல்லுவதை விட, மலிவான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில் புதிய 450எஸ் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் சில அம்சங்களை பெற முடியாது.
முக்கியமாக, புதிய 450எஸ் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையை டச் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியாது. அதேபோல், நாவிகேஷன் எனப்படும் வழிக்காட்டி வசதியையும் பெற முடியாது என கூறப்படுகிறது. ஸ்கூட்டரின் தோற்றத்தை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், புதிய 450எஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1.30 லட்சம் என ஏற்கனவே ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துவிட்டது.

அதேபோல் ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ப்ரீ-புக்கிங்குகளும் ஏற்கனவே நாடு முழுவதும் துவங்கப்பட்டு விட்டன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிரபலமான 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க பயன்படுத்திய அதே 450 பிளாட்ஃபாரத்தை உபயோகித்தே 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆனால், குறைந்த விலையில் விற்பனை செய்ய, அளவில் சிறியதான 3kWh பேட்டரி தொகுப்பு இந்த புதிய ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு உள்ளது.
பேட்டரியின் அளவு சிறியது ஆகுவதால், அதன் மூலம் கிடைக்கும் ரேஞ்சும் குறைவாக இருக்கும். அதாவது, ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாகவே 115கிமீ தொலைவிற்கு மட்டுமே ஸ்கூட்டரை இயக்கி செல்ல முடியும். இருப்பினும், புதிய 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 90kmph வரையிலான டாப்-ஸ்பீடை எட்டலாம் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கூறுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியா எப்போதும் விலை குறைவான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடியது. இதனால்தான், மாருதி சுஸுகியில் இருந்து ஓலா வரையில் அனைத்து நிறுவனங்களும் மலிவான விலையிலான வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன. இந்த வரிசையில் விரைவில் ஏத்தர் எனர்ஜியும் இணையவுள்ளது உண்மையில் சந்தோஷமான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








