ஓலாவை தலையில் கொட்டி உட்கார வைக்க வருகிறது ஏத்தர் 450எஸ்! இந்த அளவு அடிமட்ட விலைக்கு இ-ஸ்கூட்டரா?..
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி. இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் மிக மிக விலைக் குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனது புகழ்பெற்ற 450எக்ஸ் (450X) மாடலிலேயே 450எஸ் (450S) எனும் புதிய தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ஏத்தர் எனெர்ஜி. இதன் அறிமுகம் வெகு விரைவிலேயே அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், எப்போது என்கிற துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் அது விற்பனைக்கு வந்துவிடும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 450 எக்ஸ் மாடலின் மலிவு விலை வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைக் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவான சிறப்பு வசதிகளையே இந்த வெர்ஷனில் ஏத்தர் வழங்க இருக்கின்றது.
ஆகையால், 450எக்ஸ் மாடலைக் காட்டிலும் மிகக் குறைவான அம்சங்களைத் தாங்கியதாக அது இருக்கும். ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டி அளிக்க வேண்டும் என்கிற ஒற்றை கண்ணோட்டத்திலேயே இந்த மலிவு விலை வெர்ஷனை ஏத்தர் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அதுமட்டுமின்றி, விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் இந்த குறைந்த விலை 450 எஸ் தேர்வை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க உள்ளது. நிறுவனத்தின் விற்பனையகங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இது குறைந்த விலை 450 எஸ் விற்பனையை மேலும் ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.
தற்போது பிராண்டின்கீழ் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமே விற்பனையில் இருக்கின்றது. 450 எக்ஸ் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை இரு வெவ்வேறு விதமான பேக்குகளில் வாங்கிக் கொள்ள முடியும். 450 எக்ஸ் (Ather 450X) மற்றும் 450எக்ஸ் ப்ரோ பேக் (Ather 450X Pro Pack) எனும் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் 450எக்ஸ்-க்கு ரூ. 1.16 லட்சமும், 450எக்ஸ் ப்ரோ பேக்-கிற்கு ரூ. 1,46,743 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். விலையை அதிகமாகக் கொண்டிருப்பதைப் போலவே சிறப்பு வசதிகள் விஷயத்திலும் ஏத்தர் 450 எக்ஸ் ப்ரோ பேக் நீண்ட பட்டியலைக் கொண்டதாகக் கட்சியளிக்கின்றது.
450எக்ஸ் ப்ரோ பேக்கை 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4.30 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், 450எக்ஸுக்கு 12 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். வீட்டு சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்திலேயே இந்த அதிகபட்ச நேரத்தை இவை எடுத்துக் கொள்ளும். தொடர்ந்து, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ப்ரோ பேக்கிற்கு வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால், வழக்கமான 450எக்ஸிற்கு அது வழங்கப்படவில்லை. தொடர்ந்து, ஈகோ, ரைடு, ஸ்போர்ட், வார்ப் மற்றும் ஸ்மார்ட் ஈகோ என பன்முக ரைடிங் மோட்கள் ஏத்தர் 450 ப்ரோ பேக்கில் வழங்கப்பட்டிருக்கும். இந்த மாதிரியான ரைடிங் மோடை வழக்கமான 450எக்ஸில் பார்க்க முடியாது.
இதுபோன்ற சிறப்பு வசதிகளைக் குறைவாகக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே 450 எக்ஸின் விலை மிகக் குறைவாக இருக்கின்றது. இதைவிட குறைவான விலையிலேயே 450 எஸ் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணாக ஓலா எலெக்ட்ரிக் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டும் சென்ற ஏப்ரல் மாதத்தில் 30 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகின. இத்தகைய நிறுவனத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாகவே ஏத்தர் அதன் 450எஸ் மாடலை இந்தியாவிற்காக தயார் செய்து வருகின்றது.


Click it and Unblock the Notifications









