ஏத்தரின் மலிவு விலை ஸ்கூட்டரில் இப்படி ஒரு திரையா!! டச் வசதி மட்டும்தான் இல்ல, மத்தது எல்லாமே இருக்குமாம்!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜியும் ஒன்று. இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஓர் புதிய மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. 450எஸ் எனும் மாடலையே அது விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் திரையே தற்போது டீசர் படமாக வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் மலிவு விலை இ-ஸ்கூட்டராக விற்பனைக்கு களமிறங்க இருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை விலை விபரத்தை நிறுவனம் உறுதி செய்யவில்லை.

இருப்பினும், இந்த புதிய மாடல் ரூ. 1.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என இப்போது வெளியாகி இருக்கும் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் உண்மை விலை என்ன என்பதை அறிய இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே, புதிய 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திரை வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. மின்சார இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த செயலை அது செய்திருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பது எல்சிடி திரை ஆகும். இந்த திரையே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலாக 450எஸ் மாடலில் செயல்படும்.

இந்த வாகனத்தின் மலிவு விலைக்காகவே எல்சிடி திரை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 450எஸ்-இன் மலிவு விலைக்காக இதுபோன்று இன்னும் பல விஷயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே தற்போது விற்பனையில் இருக்கும் 450எக்ஸ்-ஐக் காட்டிலம் மலிவு விலைக் கொண்டதாக 450எஸ்-ஐக் சந்தையைக் களம் காண இருக்கின்றது.
தற்போது காட்சிக்குள்ளாகி இருக்கும் எல்சிடி திரை மிகவும் எளிமையானதாகக் காட்சியளிக்கின்றது. இருப்பினும், சிறப்பம்சங்கள் பலவற்றை அதில் ஏத்தர் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, கருப்பு-வெள்ளை அல்லாமல் வண்ண மயமான வசதியை அது தாங்கி இருக்கும். ஆனால், இதில் டச் வசதி கொடுக்கப்படவில்லை.
இருப்பினும், செல்போனை இணைத்துக் கொள்ளுதல், நேவிகேஷன் மற்றும் முக்கிய ஆவணங்களை சேகரித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, ப்ளூடூத் இணைப்பு, செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றல் மற்றும் குறுந்தகவலை காணுதல் உள்ளிட்ட வசதிகளும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதேவேளையில், விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு சில விஷயங்களில் இது வசதி குறைவானதாக இருக்கும். குறிப்பாக, ரேஞ்ஜ் மற்றும் பேட்டரி பேக் விஷயத்தில் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் புதிய 450 எஸ் லேசாக பின் தங்கிய மாடலாக இருக்கும்.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் 115 கிமீ ரேஞ்ஜ் தொடங்கி 146 கிமீ ரேஞ்ஜ் தேர்வுகளில் புதிய 450எஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடனேயே புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 450 எஸ் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது (புதிய ஏத்தர் 450எஸ்) விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும். குறிப்பாக, பஜாஜ் சேத்தக், ஹீரோ விடா வி1, டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு இதன் வருகை மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்த இருக்கின்றது. ஆகாஸ்டு 3ஆம் தேதி அன்றே இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








