ஏத்தரின் மலிவு விலை இ-ஸ்கூட்டர் 450எஸ்-ன் டெலிவரி தொடங்கியது.. ரொம்ப நாளா காத்திருந்தவங்களுக்கு செம விருந்து!
ஏத்தர் நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450எஸ் இருக்கின்றது. இதனை மிக சமீபத்திலேயே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கியநிலையில், அதற்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கியது.
இந்த நிலையிலேயே புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டரை டெலிவரி கொடுக்க வேண்டும் என்பதற்காக 450எஸ் மாடலின் உற்பத்தி பணிகளை ஏத்தர் தொடங்கியது. இந்த பணிகள் தொடங்கி சில நாட்களே ஆகின்ற நிலையில் தற்போது அதன் டெலிவரி பணிகளையும் ஏத்தர் தொடங்கி இருக்கின்றது.

இன்று (செப்டம்பர் 9) உலக இவி தினம் ஆகும். அதாவது, உலக மின் வாகன தினம் ஆகும். இந்த நாளை சிறப்பிக்கும் விதமாகவே ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளை ஏத்தர் இன்று தொடங்கி இருக்கின்றது. ஏத்தர் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.30 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஓலா எஸ்1 ஏர் மாடலுக்கு போட்டியாக 450எஸ் களமிறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் நமது தமிழகத்தில் உள்ள ஓசூர் ஆலையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கிருந்தே நாடு முழுவதிற்குமான 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
2.9 kWh பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 115 கிலோ மீட்டர் தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர் ஆகும்.
இது ஓர் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் பெரிய அளவில் தொழில்நுட்ப வசதிகள் இடம் பெறவில்லை. இருப்பினும், இந்த வாகனத்தில் டர்ன் -பை- டர்ன் (திருப்பத்திற்கு திருப்பம்) வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம் அடங்கிய 17.7 அங்குல திரை கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதுமட்டுமா இன்னும் பல சிறப்பம்சங்களைக் ஏத்தர் இந்த 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பார்க் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்ட், 22 லிட்டர் பூட் ஸ்பேஸ், மோனோஷாக் சஸ்பென்ஷன், சைடு ஸ்டாண்டு சென்சார்கள், ஆட்டோ இன்டிகேட்டர் கட்-ஆஃப், கைடு-மீ-ஹோம் மின் விளக்கு, கோ இன்காக்னிட்டோ, சைடு ஸ்டெப் உள்ளிட்ட அம்சங்களையும் ஏத்தர் வழங்கி இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 36 நிமிடங்கள் தேவைப்படும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் ப்ரோ எனும் ஆட்-ஆன் வசதியையும் வழங்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதனை ரூ. 14 ஆயிரம் கூடுதல் கட்டணத்தில் ஏத்தர் எனெர்ஜி வழங்க இருக்கின்றது.
இத்துடன், ரூ. 5,499 மதிப்புள்ள ஏத்தர் பேட்டரி புரடெக்ட் எனும் திட்டத்தை வெறும் 1 ரூபாய்க்கு வழங்க இருப்பதாகவும் ஏத்தர் தெரிவித்து இருக்கின்றது. இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ வலை தளத்தின் வாயிலாகவே நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இது வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவர்வதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வண்ண தேர்வில் 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். காஸ்மிக் கருப்பு, ஸ்டில் ஒயிட், சால்ட் கிரீன் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய நிற தேர்வுகளே வழங்கப்படுகின்றது. இதுபோன்ற சிறப்பு வசதிகளை இந்த ஸ்கூட்டர் மிக தாராளமாகக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போல இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்த தேவையைப் பூர்த்தி செய்வதிலேயே ஏத்தர் மற்றும் ஓலா நிறுவனங்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏத்தர் 450 எஸ் மாடலையும், ஓலா எஸ்1 ஏர் மாடலையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








