முழுசா சார்ஜ் ஆவதற்கு முன்னாடியே துரத்தி விடுறாங்கப்பா.. புலம்பும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்கள்!
சார்ஜ் ஆகுறதுக்கு முன்னாடியே ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ஜிங் மையங்களில் இருந்து வெளியேற்றப்படுவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பின்னால் மறைந்து இருக்கும் காரணங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுபற்றிய விரிவான பதிவை பார்க்கலாம்.
ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் சிலர் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முழுமையாக சார்ஜாகும் முன்னரே சார்ஜிங் மையத்தில் இருந்து வெளியேற்ப்படுவதாக புகார் தெரிவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். 100 சதவீதம் சார்ஜ் ஆகும் முன்னரே வெளியேற்றப்படுவதாக சில ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்கள் ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

குறிப்பாக, 80 சதவீதம் சார்ஜாகிய உடனேயே தானாக சார்ஜ் செய்யப்படுவது துண்டிக்கப்படுவதாக ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எப்போது எல்லாம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யப்படுகின்றதோ அப்பதெல்லாம் தாங்கள் இந்த நிலையை சந்திப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏத்தர் நிறுவனம் 'ஏத்தர் க்ரிட்' எனும் பெயரில் சார்ஜிங் மையங்களை செயல்படுத்தி வருகின்றது. நிறுவனத்தின் இந்த அதிகாரப்பூர்வ மையங்களில் சார்ஜ் செய்யும்போது மட்டுமே இந்த நிலையை ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள சந்தித்து வருகின்றனர். மற்ற ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் சார்ஜ் செய்ய காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கவே இத்தகைய கெடுபிடி ஏத்தர் அதிகாரப்பூர்வ சார்ஜிங் மையங்களில் கையாள்வது தகவல் வெளியாகி உள்ளன.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அபரீதமாக வளர்ச்சி அடைந்துக் காணப்படுகின்றது. ஆனால், இந்த வேகத்திற்கு ஏற்ப சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை உயரவில்லை. இதன் விளைவாக குறிப்பிட்ட சில முக்கிய நகர்புற பகுதிகளில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ஜ் செய்ய சார்ஜ் மையங்களில் அணி வகுத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
ஒவ்வொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் அதனைக் குறைக்கும் பொருட்டே 80 சதவீதம் வரை சார்ஜாகிய உடனேயே தானாக சார்ஜ் செய்யப்படுவது துண்டிக்கும் வகையில் சார்ஜிங் மையங்கள் செட்-அப் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், இதனால் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிலர் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

ஏத்தர் நிறுவனமும் தங்களின் சார்பில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களுக்கு அறிவிப்புகளை வழங்க தொடங்கி இருக்கின்றன. அந்த அறிவிப்பில் "மற்ற மின்சார ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களும் விரைவில் பயன்பெறும் விதமாக சார்ஜிங் மையங்கள் 80 சதவீதம் மட்டுமே சார்ஜ் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக" தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஏத்தர் எனெர்ஜி 450 பிளஸ் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் எனும் இரு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டும் வெவ்வேறு விதமான ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார ஸ்கூட்டர்கள் ஆகும். 450 பிளஸ் மாடலானது ஓர் முழு சார்ஜில் 85 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும்.

அதேவேளையில், 450 எக்ஸ் தேர்வில் நம்மால் ஓர் முழு சார்ஜில் 105 கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும். இதேபோல் மின் மோட்டார் திறன் வெளிப்பாட்டிலும் இரண்டும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. 450 எக்ஸ் 6.2 kW பவரையும் - 26 என்எம் டார்க்கையும், 450 பிளஸ் 5.4 kW பவரையும் - 22 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
சிறப்பு அம்சமாக ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட திரை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த அம்சம் 450 எக்ஸ் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். 450 பிளஸ் விலை குறைவாக விற்பனைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த அம்சம் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications









