ஓலாவை கதிகலங்க வைக்க தயாராகும் ஏத்தர்... இவ்ளோ கம்மி விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வர போகுதா!
இப்போதைய நிலவரப்படி ஓலாவுக்கு மிகப் பெரிய போட்டி எது என்றால் அது கர்நாடாக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனெர்ஜிதான். இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி 450எஸ், 450எக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதில், 450எஸ் 2.9 kWh பேட்டரி பேக் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், 450எக்ஸ் மாடலில் ஜென்3, 450எக்ஸ் 3.7 kWh பேட்டரி பேக் மற்றும் 2.9 kWh பேட்டரி பேக் ஆகிய ஆப்ஷன்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையிலேயே இந்த மாடலில் (450எக்ஸ்-இல்) கூடுதலாக ஓர் புதிய தேர்வை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஏத்தர் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓலா நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியை வழங்க வேண்டும் என்கிற நோக்கில் அது புதிய 450எக்ஸ் தேர்விற்கான பதிவை தற்போது நாட்டில் செய்திருக்கின்றது.
இந்த பதிவு விண்ணப்பமே தற்போது இணையம் வாயிலாக வெளியாகி இருக்கின்றது. இந்த ஆவணத்தின் வாயிலாக புதிய தேர்வு 450எக்ஸ் எல்ஆர் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த தேர்வில் 2.9 kWh பேட்டரி பேக்கையே ஏத்தர் பயன்படுத்த இருக்கின்றது.

ஏற்கனவே இதே பேட்டரி பேக் ஆப்ஷனை 450எக்ஸ்-இல் வழங்கிக் கொண்டிருக்கின்றநிலையில், புதியதொரு ஆப்ஷனுக்கான அவசியம் என்ன என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கலாம். இதே சந்தேகமே எங்களுக்கும் எழும்பி இருக்கின்றது. ஒருவேளை 450எக்ஸ் மாடலை இன்னும் மலிவு விலைக் கொண்டதாக விற்பனைக்கு வழங்கும் நோக்கில் இந்த புதிய தேர்வை அது அறிமுகம் செய்யப் போகின்றதோ என்கிற எண்ணத்தை ஏத்தரின் இந்த செயல் எழுப்பி இருக்கின்றது.
450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 1.37 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 1.50 லட்சத்தைத் தொடலாம். இந்த அளவு அதிக விலையைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே நிறுவனம் புதிய தேர்வை 450எக்ஸ் மாடலில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது என கூறப்படுகின்றது.
இந்த புதிய தேர்வும் தற்போது விற்பனையில் இருக்கும் 450எக்ஸ் 2.9 kWh பேட்டரி பேக் தேர்வை போலவே ஓர் முழு சார்ஜில் 111 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேக திறனிலும் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்படினா என்ன விஷயத்தில்தான் இவை வித்தியாசத்துடன் இருக்கும் என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். சிறப்பம்சங்களைத் தாங்கி இருக்கும் விஷயத்திலேயே இரண்டிற்கும் இடையில் வேற்றுமை இருக்கப் போகின்றது. இதேபோல், அலங்கரிப்பு விஷயத்திலும் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் தென்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனத்தின் இப்போதைய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450எஸ் இருக்கின்றது. அதன் விலை 1.29 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பலதரப்பட்ட சிறப்பம்சங்களை இழந்த ஓர் மாடலாக இதுக் காட்சியளிக்கின்றது. 115 கிமீ ரேஞ்ஜ் மற்றும் 90 கிமீ வேகம் ஆகிய திறன்களைக் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது.
ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகள் மட்டுமே இந்த மாடலில் வழங்கப்படுகின்றது. இந்த 450எஸ் மாடலைவிடவும் குறைவான விலைக்கு 450எக்ஸ் எல்ஆர் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது. 1.10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே புதிய 450எக்ஸ் எல்ஆர் தேர்வு எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே ஓலா-ஏத்தர் இடையில் கடுமையான போட்டி மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் விஷயத்தில் தென்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏத்தர் 450எக்ஸ் எல்ஆர் தேர்விற்கு ஏத்தர் நாட்டில் பதிவு செய்திருக்கின்றது. இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. விரைவில் இதன் வருகை அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








