இந்த பைக் மட்டும் அறிமுகமாச்சு பல்சரையே கை கழுவ தயாராயிடுவீங்க! 3புது டூவீலர்களுக்கு வர்த்தக பதிவு செய்த பஜாஜ்
பஜாஜ் நிறுவனம் அடுத்தடுத்து என மூன்று புதுமுக வாகன மாடல்களை களமிறக்க இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் இந்தியாவில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கும் விதமாக அந்த மாடல்களின் பெயர்களுக்கு வர்த்தக பதிவை செய்திருக்கின்றது. இதுகுறித்த ஆவணங்களே தற்போது சமூக வலை தளங்கள் வாயிலாக வெளியாகி இருக்கின்றது.
இந்த ஆவணத்தின் வாயிலாக நிறுவனம் அடுத்து என்ன பெயரில் தன்னுடைய புதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. பஜாஜ் அவரா (Bajaj Aura), பஜாஜ் ரேசர் (Bajaj Racer) மற்றும் பஜாஜ் ஹேம்மர் (Bajaj Hammer) ஆகிய பெயர்களிலேயே புதிய தயாரிப்புகள் சந்தையை களம் காண இருக்கின்றன.

இந்த வாகனங்கள் பற்றிய வேறு எந்த முக்கிய விபரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் சில முக்கிய தகவல்கள் இந்த வாகனங்கள் பற்றி அரசல்புரசலாக இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், 'அவுரா' என்பது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றும், இதை பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் பஜாஜ் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஜாஜ் நிறுவனத்தின்கீழ் தற்போது சேத்தக் எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. தன்னுடைய மின் வாகன பிரிவை விரிவாக்கம் செய்யும் விதமாக பஜாஜ் அவுராவை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் இந்த எலெக்ட்ரிக் டூ-வீலரை கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா ஆகிய நிறுவனங்களுடனான கூட்டணியின்கீழ் உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டவாது தயாரிப்பான ரேசரை நிறுவனம் ரேஸ் ரக பைக்காக உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே அந்த புதுமுக பைக்கிற்கு ரேசர் என்கிற பெயரை பஜாஜ் சூட்ட இருக்கின்றது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல்சர் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த பைக் இருக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
கடைசியாக இருக்கும் ஹேம்மர் யூகிக்க முடியாத ஓர் இருசக்கர வாகன மாடலாக இருக்கின்றது. இருப்பினும், இதன் பெயரை வைத்து பார்க்கையில் மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட மோட்டார்சைக்கிளாக இது இருக்கும் என கணிக்க முடிகின்றது. மேலும், இதுவரை தயாரித்திராத முற்றிலும் வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த இருசக்கர வாகனம் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதில் முதலில் அவுரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே ஆளுகைச் செய்துக் கொண்டிருக்கின்றது. கடந்த 2023 மார்ச் மாதத்தில் மட்டும் 27 ஆயிரத்திற்கும் அதிகமான ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த அதீத எண்ணிக்கையின் காரணமாக நிறுவனம் இந்திய மின்வாகன உலகின் தலைவனாக மாறி இருக்கின்றது.
கடந்த ஏழு மாதங்களாகவே இத்தகைய சூப்பரான விற்பனை வளர்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் பெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான அமோக விற்பனை எண்ணிக்கையை பெற்றிருக்கும் ஓலாவிற்கு போட்டி அளிக்கும் விதமாக பஜாஜ் தன்னுடைய அவுரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கணிசமான அளவு போட்டியை ஓலா எலெக்ட்ரிக், ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கூடுதல் போட்டியை வழங்கும் விதமாக அவுரா களமிறக்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








