3 வருடங்களுக்கு பிறகு... அவெஞ்சர் ஸ்ட்ரீட் பைக்கை மீண்டும் கொண்டுவந்தது பஜாஜ் - இந்த முறை விலை எவ்வளவு?
பஜாஜ் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் (Bajaj Avenger 220 Street) மோட்டார்சைக்கிள் ரூ.1.42 லட்சம் என்ற விலையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் விலை குறைவான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் பஜாஜ் அவெஞ்சர் ஆகும். பஜாஜ் அவெஞ்சர் பைக்குகள் 160சிசி மற்றும் 220சிசி என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் 220சிசி அவெஞ்சர் பைக்குகள் க்ரூஸர் மற்றும் ஸ்ட்ரீட் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் இதில் அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் வேரியண்ட்டின் விற்பனையை கடந்த 2020ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுத்தியது.

இந்த நிலையில், தற்போது 3 வருடங்கள் கழித்து அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கை மீண்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, 2020 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்குவந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் முதல் கட்ட கட்டுப்பாடுகளினால் இந்த பைக்கின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,42,029 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை மற்ற அவெஞ்சர் பைக்குகளான 220 க்ரூஸ் மற்றும் 160 ஸ்ட்ரீட் உடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. அவெஞ்சர் 220 க்ரூஸ் பைக்கில் பொருத்தப்படும் அதே 220சிசி ஏர்/ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கிலும் வழங்கப்பட உள்ளது.
மேலும் இதே 220சிசி என்ஜின் தான் பிரபலமான பல்சர் 220 பைக்கிலும் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 19 பிஎச்பி மற்றும் 17.55 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பைக்கின் ஹெட்லைட் கௌல், அலாய் சக்கரங்கள், ஹேண்டில்பார் மற்றும் கிராப் ரெயில் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை, முன்பு வழங்கப்பட்டவையே புதிய அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கிலும் தொடரப்பட்டுள்ளன.
ஆனால் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் புதிய அம்பெர் பேக் லைட்டை பெற்றுள்ளது. இந்த அவெஞ்சர் பைக்கிற்கு டிவிஎஸ் நிறுவனத்தின் யூரோகிரிப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் உராய்வை தடுக்கும் இரட்டை புஷ் உடன் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 5-ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றுள்ளன.
அவெஞ்சர் 220 க்ரூஸ் பைக்கை போன்று, 220 அவெஞ்சர் வேரியண்ட்டும் ஏபிஎஸ் -ஐ பெற்றுள்ளது. இது 280மிமீ டிஸ்க் பிரேக் உடன் உள்ள முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. க்ரூஸர் ரக பைக் என்பதால், அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட் பைக்கின் கிரவுண்ட் கிளியரென்ஸ் 169மிமீ மட்டுமே ஆகும். நீண்ட தொலைவு பயணங்களுக்கு ஏற்ப இந்த பைக்கில் 13 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது. விற்பனையில் இந்த பஜாஜ் க்ருஸர் பைக்கிற்கு நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்புகளுள் ஒன்று அவெஞ்சர் ஆகும். இத்தகைய பைக்கில் மீண்டும் ஸ்ட்ரீட் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது உண்மையில் நல்ல விஷயமாகும். இதனால் அவெஞ்சர் பைக்குகளின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி. சமீப காலமாக, சாலைகளில் அவ்வளவாக புதிய அவெஞ்சர் பைக்குகளை பார்க்க முடிவதில்லை என்பதும் உண்மையே.


Click it and Unblock the Notifications








