மத்திய அரசு இதை செய்திருக்க கூடாது!! பஜாஜ் ஆட்டோவால் கூட சமாளிக்க முடியல... சேத்தக் இன்னும் அதிக விலையில்!
ஃபேம்-2 மானியம் குறைப்பால் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் அதிரடியாக ரூ.22,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி எந்த விலையில் மட்டுமே வாங்க முடியும் என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்காக மத்திய அரசு வழங்கிவரும் மானியம் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டதை அடுத்து பல்வேறு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போதைக்கு சந்தையில் விற்பனை செய்யும் ஒரே எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேத்தக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பஜாஜ் சேத்தக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.22 லட்சத்தில் இருந்து ரூ.1.44 லட்சமாக உயர்ந்துள்ளது. சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து விற்பனை செய்து வருவதற்காக ரூ.43,500 தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கிவந்தது.
ஆனால் இந்த தொகை இந்த ஜூன் மாதத்தில் இருந்து ரூ.22,500ஆக குறைக்கப்படுகிறது. ரூ.21,000 மானியம் குறைந்துள்ளதினால், சேத்தக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானியம் குறைப்பு அறிவிப்பை கடந்த மே மாதத்தில் கனரக தொழிற்துறை அமைச்சகம் அறிவித்தது. எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் அவற்றின் தொழிற்சாலை விலையில் 15% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரியின் ஒவ்வொரு kWh திறனுக்கும் ரூ.10,000 குறைக்கப்படுவதாகவும் கனரக தொழிற்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. இதன் விளைவாகவே பஜாஜ் ஆட்டோ மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலைகளை உயர்த்தி உள்ளன.
பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முதன்முதலாக 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படாத காரணத்தினாலேயே சேத்தக்கின் விலைகளை கடந்த மார்ச் மாதத்தில் பஜாஜ் நிறுவனம் குறைத்தது. ஆனால் அதற்குள், அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் ஸ்கூட்டரின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் பஜாஜ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்ட் & பிரீமியம் என 2 விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்சமயம் பிரீமியம் வேரியண்டின் பெயர் மட்டுமே பஜாஜ் ஆட்டோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ளது. சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரை கோல்டு, நீலம், சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வாங்கலாம். விற்பனையில் சேத்தக்கிற்கு டிவிஎஸ் ஐ-க்யூப், ஓலா எஸ்1 மற்றும் ஹீரோ விடா வி1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக விளங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் அதிகமான விலையே ஆகும். இதனை சமாளிக்கவே மத்திய அரசு மானியம் வழங்கிவந்தது. இன்னும் சொல்ல போனால், அந்த மானியமே இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை பெருக செய்து வருகிறது. அத்தகைய மானியம் குறைக்கப்படுகிறது எனும்போது, அது எலக்ட்ரிக் 2-வீலர் விற்பனையை எந்த அளவிற்கு பாதிக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









