போடு தகிட தகிட... பஜாஜின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்னும் கம்மியான விலையில்!! ஷோரூமில் கூட்டம் அள்ள போகுது!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் புதிய சேத்தக் அர்பன் (Chetak Urbane) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சேத்தக் இ-ஸ்கூட்டரில் கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதையும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மக்கள் பலர் விரும்பி வாங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று பஜாஜ் சேத்தக் ஆகும். ஆனால், சேத்தக்கின் ஒரேயொரு குறையாக அதன் அதிகப்படியான விலை இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அர்பன் வேரியண்ட்டிற்கு முன்பு வரையில், ஒரேயொரு பிரீமியம் வேரியண்ட்டில் மட்டுமே சேத்தக் விற்பனை செய்யப்பட்டது.

சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.50 இலட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. இவ்வளவு விலை கொடுத்து நிறைய பேரால் ஸ்கூட்டரை வாங்க முடியாது என்பதால், குறைவான விலையில் சேத்தக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் கூட நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம்.
சிறிய அளவிலான பேட்டரி ஆப்ஷன் உடன் சேத்தக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டமிட்டு வருவதாகவும், அதுதொடர்பான ஆவண படம் ஒன்றையும் அந்த செய்தியில் பதிவிட்டு இருந்தோம். இந்த நிலையில், பெரியதாக எந்தவொரு ஆர்பாட்டமுமின்றி, பஜாஜ் சேத்தக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், பேட்டரியின் அளவு சிறியதாக இருக்கும் என வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியாக போய்விட்டது. ஏனெனில், சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் அதே 2.9kWh பேட்டரி தொகுப்பு தான் இந்த புதிய மாடலிலும் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், ரேஞ்ச் எனப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக ஸ்கூட்டர் இயங்கும் தூரம் ஆனது புதிய அர்பன் வேரியண்ட்டில் குறைவு.
சேத்தக் பிரீமியம் வேரியண்ட்டின் ரேஞ்ச் 126கிமீ ஆகும். ஆனால், புதிய சேத்தக் அர்பன் வேரியண்ட்டின் ரேஞ்ச் 113கிமீ மட்டுமே ஆகும். இதனாலேயே இதன் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.15 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 113கிமீ ரேஞ்ச் என்பதும் பல்வேறு காரணிகளை சார்ந்தது ஆகும். ஆதலால், நிஜ உலகில் இதனை காட்டிலும் சற்று குறைவான ரேஞ்ச் தான் கிடைக்கும்.

புதிய சேத்தக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கூடுதல் வசதிகள் மற்றும் செயல்படுதிறன் உடனும் 'டெக்பேக்' என்ற தொகுப்பு மூலமாக வாங்கலாம். ஆனால், இந்த டெக்பேக் தொகுப்பு உடன் சேத்தக் அர்பன் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.21 இலட்சம் ஆகும். சேத்தக் பிரீமியம் வேரியண்ட்டில் கிடைப்பதை போல், சேத்தக் அர்பன் வேரியண்ட்டிலும் வண்ண எல்சிடி டிஸ்பிளே வழங்கப்பட்டு உள்ளது.
சேத்தக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக 63kmph வேகத்தில் ஓட்டிச் செல்லலாம். இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ என்ற ஒரேயொரு ரைட் மோட் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், டெக்பேக் தொகுப்பை வாங்கி பொருத்திக் கொண்டால், கூடுதலாக ஸ்போர்ட் ரைடிங் மோடும் கிடைப்பது மட்டுமின்றி, ஸ்கூட்டரையும் அதிகப்பட்சமாக மணிக்கு 73kmph வேகத்தில் ஓட்டிச் செல்ல முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், சேத்தக் ஸ்கூட்டரை வாங்குவதில் ஒரே பிரச்சனையாக அதன் அதிகப்படியான விலை இருந்தது. ரூ.1.50 இலட்சம் செலவு செய்து ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க சிலர் யோசித்தனர். இந்த குறையை சரிச்செய்யும் விதமாக ரூ.1.15 இலட்சத்தில் சேத்தக் ஸ்கூட்டரை பஜாஜ் அறிமுகப்படுத்தி இருப்பது அருமையான முடிவு என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









