எங்கிருந்துங்க இவ்வளவு பேர் கிட்ட காசு இருக்கு!! பல்சர் பைக்குகளை வாங்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கு!
பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்குகள் ஒரு மாதத்தில் இதுவரையில் இல்லாத உச்சமாக 1.61 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பஜாஜ் ஆட்டோவின் விற்பனையில் பல்சர் பைக்குகளின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது? என்பதையும், கடந்த ஆண்டை விட பல்சர் பைக்குகள் விற்பனை எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதையும் இனி பார்க்கலாம்.
பொல்லாதவன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் பஜாஜ் பல்சர் பைக்குகள் இளைஞர்கள் அனைவரிடத்திலும் நன்கு பரீட்சையமாகியது. கிராமத்தில் ஏதோ ஓர் மூலையில் இருப்பவர்கள் கூட பல்சர் பைக்குகளை பற்றி அறிந்திருந்தனர். அதேநேரம் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பல்சர் பைக்குகள் பிரபலமாக துவங்கின.

இதனால், தற்போதைக்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக பல்சர் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2023 அக்டோபர் மாதத்தில், பல்சர் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 1.61 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 2,78,486 இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. அதுவே 2022 அக்டோபர் மாதத்தில் சற்று குறைவாக 2,06,131 இருசக்கர வாகனங்களை மட்டுமே உள்நாட்டில் பஜாஜ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், பஜாஜின் 2-வீலர்கள் விற்பனை 35% அதிகரித்துள்ளது.

பஜாஜின் இந்த விற்பனை முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம், நிறுவனத்தின் மொத்த விற்பனையில் பல்சர் பைக்குகளின் பங்களிப்பாகும். கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 1.61 லட்சத்திற்கும் அதிகமான பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு மாதத்திலும் இவ்வளவு அதிகமான பல்சர் பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்தது இல்லை.
ஆனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1,35,772 பல்சர் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,29,658 பல்சர் பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

உள்நாட்டு விற்பனை, வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து பார்த்தால், மொத்தமாக கடந்த மாதத்தில் 408,144 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகளவில் விற்பனை செய்திருந்தது. பஜாஜின் இந்த ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆனது 19% அதிகரித்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு இதே அக்டோபரில் 341,903 இருசக்கர வாகனங்களை பஜாஜ் விற்பனை செய்திருந்தது.
கடந்த 2023 ஏப்ரலில் இருந்து அக்டோபர் வரையில், இந்த 7 மாதங்களில் 13,26,737 இரு சக்கர வாகனங்கள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த 2022ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 11,41,683 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பஜாஜ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஓர் அசைக்க முடியாத நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ உருவாகி வருவதை மறுக்க முடியாது. குறிப்பாக, பஜாஜ் பல்சர் இந்தியாவின் ஓர் தனிபெரும் அடையாளமாக மாறி வருகிறது. அதேநேரம், இந்த புனே நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி எண்ணிக்கைகளும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதை கவனிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









