150சிசி பல்சர் பைக் தான் இரண்டும்!! ஆனால் எதை வாங்குவது? பைக்கை புக் செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் பல்சர் என்150 மோட்டார்சைக்கிளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பல்சர் பைக்கிற்கு விற்பனையில் பல்வேறு பிராண்ட் பைக்குகள் போட்டியாக விளங்கவுள்ளன. ஆனால், அவை எல்லாவற்றையும் விட பல்சர் என்150 பைக்கிற்கு அதன் சகோதர மாடலான பஜாஜ் பல்சர் பி150 முக்கிய போட்டி மாடலாக உள்ளது.
விலையை பொறுத்தவரையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல்சர் பி150 பைக்கை காட்டிலும் விலைமிக்கதாக புதிய என்150 கொண்டுவரப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 150சிசி என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு விதமான பல்சர் பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.

தோற்றம்: ஹெட்லைட்டை தவிர்த்து, இந்த இரு 150சிசி பல்சர் பைக்குகளும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவையே. பி150 பைக்கில் பல்சர் பைக்குகளின் சிக்னெச்சர் வடிவில் ஹெட்லைட் வழங்கப்படுகிறது. ஆனால், என்150 பைக்கில் முகம் போன்றதான டிசைனில் இரு கண்கள், ஒரு வாய் உடன் முகப்பு பகுதி வடிவமைக்கப்படுகிறது. என்160 பைக்கின் முகப்பு பகுதியும் இவ்வாறே வடிவமைக்கப்படுகிறது.
புதிய மோட்டார்சைக்கிள் என்பதால், என்150 கூடுதல் ஸ்போர்டியரானதாக இளம் தலைமுறையினரை கவரக்கூடிய வகையில் உள்ளது. அதுவே, பல்சர் பி150 பைக் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஸ்போர்டியரானதாக இல்லை. ஆதலால், வழக்கமான பல்சர் பைக்கின் தோற்றத்தில் பைக் வாங்க நினைப்போருக்கு பி150 ஏற்றது.
பவர்டிரெயின்: புதிய பல்சர் என்150 மற்றும் பி150 பைக்குகள் இரண்டிலும் ஒரே மாதிரியான 149.68சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. அதேபோல், என்ஜின் மூலம் கிடைக்கக்கூடிய இயக்க ஆற்றலும் இரண்டிலும் ஒன்றே. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 14.3 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 13.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹார்ட்வேர்: புதிய பல்சர் என்150 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 31மிமீ டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 260மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு உள்ளன.
மறுப்பக்கம், பி150 பைக் சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டிரம் வேரியண்ட்டில் புதிய என்150 பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே சஸ்பென்ஷன் & பிரேக் செட்-அப் தான் வழங்கப்படுகிறது. ஆனால், டிஸ்க் வேரியண்ட்டில் மட்டும் பின் சக்கரத்திலும் 230மிமீ டிஸ்க் கொடுக்கப்படுகிறது.
விலை: ஏற்கனவே கூறியதுதான், பி150 பைக்கை விட புதிய என்150 பைக் விலைமிக்கது. அதற்காக, பெரிய அளவில் வித்தியாசத்தை எதிர்பார்க்க வேண்டாம். வெறும் ரூ.1000 மட்டுமே அதிகமாக உள்ளது. அதாவது, புதிய என்150 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, பி150 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.17 லட்சமாக உள்ளது. இது டிரம் பிரேக் உடன் பி150 பைக்கின் விலை ஆகும். டிஸ்க் பிரேக் உடன் ரூ.1.19 லட்சம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காலம் செல்ல, செல்ல பஜாஜ் பல்சர் பைக்குகளும் பரிணாம வளர்ச்சியை கண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, பல்சர் பைக்குகள் வரிசையில் புதியதாக 'என்' பைக்குகளை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த என் பிரிவு பல்சர் பைக்குகள் வழக்கமான பல்சர் பைக்குகளின் தோற்றத்தில் இருந்து வித்தியாசப்படுவதே அவற்றின் அடையாளமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








