இ20 எரிபொருளில் ஓடும் பஜாஜ் பல்சர் என்160 அறிமுகம்.. ஹீரோவோட சாம்ராஜ்யத்தை அடியோடு சாய்க்க இது ஒன்னு போதும்!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பல்சர் என்160 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓபிடி2 மற்றும் இ20 தர நிலைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட பைக் ஆகும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 1,29,645 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இத்தகைய குறைவான விலையிலேயே இ20 (E20) பெட்ரோலில் ஓடக் கூடிய ஓபிடி2 (OBD2) தர நிலைக்கு உட்பட்ட பல்சரை என்160 பைக்கை பஜாஜ் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் இந்த 2023 பல்சர் என்160 பைக்கை மிகக் குறைவான மாற்றங்களைச் செய்தே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஓபிடி2 மாற்றமே நிறுவனம் செய்திருக்கும் மிக முக்கியமான மாற்றமாக இருக்கின்றது. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த புதிய மாசு உமிழ்வு விதியை மத்திய அரசு சமீபத்திலேயே அமல்படுத்தியது. சுயமாக வாகனத்தில் இருந்து வெளியேறும் மாசுவின் தரத்தைக் கண்டறியும் கருவியே புதிய விதியின் வாயிலாக கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது.
இது வாகனத்தில் இருந்து வெளியேறும் மாசு அதிகரிக்கும் எனில் ரைடருக்கு அதுகுறித்த தகவலை வழங்கும். இதுதவிர, இ20 பெட்ரோலில் ஓடக் கூடிய வாகனமாகவும் இது மாறி இருக்கின்றது. இ20 ரக பெட்ரோல் என்பது 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருள் ஆகும்.

பெட்ரோலின் விலையைக் கணிசமாக குறைக்கும் பொருட்டும், குறிப்பாக, வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசின் அளவை குறைக்கும் பொருட்டு இ20 ரக பெட்ரோல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த மாற்றங்களைத் தவிர வேறு எந்த பெரிய அளவிலான மாற்றங்களையும் நிறுவனம் இந்த பைக்கில் செய்யவில்லை.
முந்தைய வெர்ஷனில் காணப்பட்ட அம்சங்கள் பல அப்படியே புதிய பஜாஜ் பல்சர் என்160யிலும் காட்சியளிக்கின்றன. சிங்கிள்-பாட் புரஜெக்டர் ரக ஹெட்லைட், டிஆர்எல்கள், உடல் நிறத்திலான ஹெட்லேம்ப் கவுல், கவர்ச்சியான முன் பக்க ஃபெண்டர், எஞ்ஜின் கவுல் மற்றும் ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கைகள் என எக்கசக்க அம்சங்கள் இதில் அப்படியே மீண்டும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, அதிக கட்டுமஸ்தான பாடி பேனல்கள் பெட்ரோல் டேங்கை ஒட்டி காணப்படுகின்றது. இத்துடன், காம்பேக்ட்டான எக்சாஸ்ட் குழாயே பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இருசக்கர வாகனத்தின் அதிக கவர்ச்சியான தோற்றத்திற்காக இந்த காம்பேக்ட் ரக புகை வெளியேற்றும் குழாய் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பின் வீலை இரு பக்கத்திலும் துள்ளியமாகவும், தெளிவாகவும் காண முடிகின்றது.
எக்சாஸ்ட் குழாய் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் பைக்குகளில் பின் வீலை சுத்தம் செய்வது சற்றே சிரமமாக இருக்கும். ஆனால், இந்த பைக்கில் அத்தகைய சிரமம் இருக்காது என தெளிவாக தெரிகின்றது. இதுமட்டுமின்றி, எல்இடி டெயில் லைட், பல்ப் ரக டர்ன் இன்டிகேட்டர்கள், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த க்ளஸ்டர் இன்னும் எத்தனை கிமீ வாகனம் பயணிக்கும் என்கிற தகவலை வழங்கும் திறன் கொண்டது. இரு விதமான தேர்வுகளில் இந்த வாகனத்தை பஜாஜ் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவையே அவை ஆகும்.
இதுதவிர, மூன்று விதமான நிற தேர்வுகளை இந்த பைக்கில் பஜாஜ் வழங்க இருக்கின்றது. ப்ரூக்ளின் பிளாக் (Brooklyn Black), ரேஸிங் ரெட் (Racing Red) மற்றும் கரீபியன் ப்ளூ (Caribbean Blue) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். இந்த பைக்கில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பல்சர் என் 160 பைக்கில் 31 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 280 மிமீ டிஸ்க் முன் பக்க வீலிலும், 230 மிமீ ரோடார் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் டூயல் சேனல் ஏபிஎஸ் தேர்வில் 37 மிமி ஃபோர்க்கும், 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்ஜினை பொருத்த வரை 164.82 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 15.68 பிஎச்பி பவரையும், 14.65 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் பல்சர் பைக் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து மாடல்களுக்கும் நாட்டில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பு இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் புதிய மாடலான 2023 பல்சர் என்160 ஓபிடி2 வெர்ஷனுக்கும் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


Click it and Unblock the Notifications









