குறைவான விலையில் வரும் புதிய பல்சர் பைக்! போட்டி நிறுவனங்களுக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar). பஜாஜ் நிறுவனம் பல்சர் பெயரில் பல்வேறு புதிய பைக்குகளை தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது களமிறங்கியுள்ள ஒரு புதிய தயாரிப்புதான் பஜாஜ் பல்சர் என்150 (Bajaj Pulsar N150).
பஜாஜ் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் பல்சர் என்150 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடியாக பல்சர் பிராண்டில் இன்னொரு புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் தயாராகி வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் பல்சர் என்எஸ்400 (Bajaj Pulsar NS400) என்ற பெயரில் இந்த புதிய மாடல் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், இது பஜாஜ் பல்சர் பைக்கின் 400 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட புதிய வெர்ஷன் ஆகும். அனேகமாக அடுத்த ஆண்டு (2024), பஜாஜ் பல்சர் என்எஸ்400 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போது பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) பைக் விற்பனையில் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சேஸிஸ் சற்று மாற்றியமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பஜாஜ் பல்சர் என்எஸ்400 பைக் உருவாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய இன்ஜினை கையாளும் வகையில், ஃப்ரேம் வலிமையாக்கப்படலாம்.

அதே நேரத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ் வரிசை பைக்குகளின் டிசைன் அம்சங்கள், என்எஸ்400 மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய மாடலில், எல்இடி ஹெட்லேம்ப், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
400 சிசி மாடல் என்றவுடன், கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke) பைக்கில் வழங்கப்பட்டுள்ள 399 சிசி இன்ஜின்தான், பஜாஜ் பல்சர் என்எஸ்400 பைக்கில் வழங்கப்படும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவல்களோ, பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400) பைக்கின் இன்ஜின்தான், பஜாஜ் பல்சர் என்எஸ்400 பைக்கில் இடம்பெறும் என தெரிவிக்கின்றன.
இது 373 சிசி இன்ஜின் ஆகும். இந்த சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின், பஜாஜ் பல்சர் என்எஸ்400 பைக்கில், அதிகபட்சமாக 39.4 பிஹெச்பி பவர் மற்றும் 35 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம்.
இந்த புதிய பைக், பஜாஜ் டோமினார் 400 பைக்கை விட விலை (Price) குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பஜாஜ் டோமினார் 400 பைக், 2.30 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதைக்காட்டிலும் குறைவான விலையில், பஜாஜ் பல்சர் என்எஸ்400 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்களை போலவே நாங்களும் பஜாஜ் பல்சர் என்எஸ்400 பைக்கை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளோம். இந்திய வாடிக்கையாளர்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், இந்த என்எஸ்400 மாடல், பல்சர் பிராண்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. 2024ம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்த பைக் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








