சன்னி ஞாபகம் இருக்கா? மறைக்கப்பட்ட தோற்றத்தில் சாலையில் நடமாடியபோது எடுக்கப்பட்ட படம்.. இந்த லெஜண்ட் மீண்டுமா!
பஜாஜ் சன்னி (Bajaj Sunny) ஞாபகம் இருக்கா.. 80ஸ், 90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத ஓர் டூ-வீலரே சன்னி ஆகும். மிகவும் ஒல்லியான தேகம் கொண்ட இந்த இருசக்கர வாகனம் ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் ஃபேமஸாக இருந்த டூ-வீலர்களில் இதுவும் ஒன்றாகும்.
இப்போதும் கூட ஒரு சிலரிடத்தில் இந்த வாகனம் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த வாகனத்தையே பஜாஜ் நிறுவனம் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக பஜாஜ் சன்னி-யின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அந்த வாகனத்தை நிறுவனம் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தியபோதே அது ஸ்பை செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதன் வாயிலாகவே மீண்டும் இந்திய சந்தையில் சன்னி களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதன் வருகை குறித்த எந்தவொரு தகவலையும் பஜாஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
ஆகையால், இதன் வருகை எப்போது அமையும்? என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வரும் என்பது துள்ளியமாக தெரியவில்லை. அதேவேளையில், கடந்த காலத்தைப் போல் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனமாக அல்லாமல் அது மின்சார அவதாரத்திலேயே விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஸ்பை செய்யப்பட்ட சன்னி ஸ்கூட்டரில் எக்சாஸ்ட் சிஸ்டம் இடம் பெறவில்லை. இதன் அடிப்படையிலேயே அது மின்சார அவதாரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது. தொடர்ந்து, இந்த வாகனம் பழைய சன்னி-யை பிரதிபலிக்கும் வகையிலேயே மிகவும் மெல்லிய தேகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், ஸ்டைலிங் விஷயத்தில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்காது என்பது தெரிகின்றது.
அதேவேளையில், அணிகலன் மற்றும் தொழில்நுட்ப விஷயத்தில் நவீன காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை இந்தியாவில் மிகப் பெரிய புரட்சியைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இந்த வாகனம் ரூ. 80 லட்சம் தொடங்கி ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் எளிமையான தோற்றமே அது மலிவு விலையில் விற்பனைக்கு வருவதற்கு பெரும் உதவியாக இருக்கப் போகின்றது. இப்போதைய நிலவரப்படி பஜாஜ் நிறுவனம் சேத்தக் எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
இதன் விலை ரூ. 1.15 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது ஓர் முழு சார்ஜில் 108 கிமீ ரேஞ்ஜை தரும். மேலும், இதன் டாப் ஸ்பீடு 63 கிமீ ஆகும். இதன் பேட்டரி பேக்கை முழுமையாக 5 மணி நேரங்கள் செலவு செய்யும்பட்சத்தில் முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இதன் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 2.9 kWh பேட்டரி பேக்கை பஜாஜ் பயன்படுத்தி இருக்கின்றது. இதுதவிர ப்ளூடூத் இணைப்பு வசதி, ஓவர் தி ஏர் அப்டேட், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், தண்ணீரில் இருந்து ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வசதி என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் விலை சற்று காஸ்ட்லியாக இருக்கின்ற காரணத்தினாலேயே பஜாஜ் நிறுவனம் விரைவில் இதே மாடலில் மலிவு விலை தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் வருகையையும் இன்னும் பஜாஜ் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், வெகு விரைவில் அதிகரித்து வரும் போட்டியைக் களம் காணும் விதமாக மலிவு விலை சேத்தக் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியர்களைக் கவரும் விதமாக பஜாஜ் நிறுவனம் அதன் சன்னி மாடலை மின்சார வெர்ஷனில் தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. வெகு விரைவில் இதனையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









