மிகவும் குறைவான விலையில் பஜாஜ் பைக்! ராயல் என்பீல்டுக்கு செக்! இங்கிலாந்து கம்பெனி கூட சேந்து அடிக்க போறாங்க!
இந்தியாவை சேர்ந்த முன்னணி டூவீலர் நிறுவனங்களில் ஒன்று பஜாஜ் (Bajaj). பல்சர் (Pulsar) உள்பட பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் மற்றொரு முன்னணி டூவீலர் நிறுவனமான டிரையம்ப் (Triumph) உடன், பஜாஜ் தற்போது கை கோர்த்துள்ளது.
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் பல்வேறு புதிய பைக்குகளை (Affordable Bikes) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி உருவாக்கி வரும் முதல் பைக், இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது, கேமராவின் கண்களிலும் இந்த பைக் சிக்கியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த பைக், வரும் ஜூன் 27ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ராஜீவ் பஜாஜ் (Rajiv Bajaj), இந்த தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பைக்கின் உலகளாவிய அறிமுகம் இந்தியாவில் நடைபெற போவதில்லை.
அதற்கு பதிலாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (London) வைத்து, இந்த பைக்கின் உலகளாவிய அறிமுகம் நடைபெறவுள்ளது. பஜாஜ் நிறுவனம் தற்போது கூட்டணி அமைத்துள்ள டிரையம்ப் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்தது என்பது இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஆகும்.

உலகளாவிய அறிமுகம் வரும் ஜூன் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதை தொடர்ந்து நடப்பு 2023ம் வருடத்தின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்திலேயே இந்த பைக்கின் விலை (Price) அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி இந்த ஒரு பைக் மட்டுமல்லாது, இன்னும் வேறு சில பைக்குகளையும் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி களமிறக்கவுள்ள 2வது மாடல் அனேகமாக ஸ்க்ராம்ப்ளர் (Scrambler) ரகத்தை சேர்ந்த பைக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த 2வது பைக்கும், வரும் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி களமிறக்கவுள்ள புதிய பைக்குகளில், 300 சிசி - 400 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் (BMW G 310 R) மற்றும் கேடிஎம் ட்யூக் 390 (KTM Duke 390) ஆகிய பைக்குகளுக்கு அவை மிக கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுடனும் அவை போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு உடன் மோதுவதற்கு முயற்சி செய்து, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டுள்ளது. இம்முறை ராயல் என்பீல்டு மட்டுமல்லாது, வேறு ஒரு சில நிறுவனங்களையும் ஒரு கை பார்க்கும் முடிவுடன் களமிறங்கியுள்ள பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி வெற்றி பெறுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications








