ரூ 2.23 லட்சத்திற்கு டிரையம்ப் பைக் அறிமுகம் ; ராயல் என்ஃபீல்டை சுத்தி வளைச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க!
பஜாஜ் - டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் ஆகிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதில் ஸ்பீடு400 பைக் ரூ2.33 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்குகள் ஏற்கனவே சர்வதேச மார்கெட்டில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிரையம்ப் நிறுவனம் சர்வதேச அளவில் பைக்குகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் ஒரு முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலை பஜாஜ் நிறுவனத்துடன் சேர்த்து செய்கிறது. அதன்படி டிரையம்ப் டிசைன் செய்த பைக்குகளை பஜாஜ் நிறுவனம் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஏற்கனேவ ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து இது போன்ற ஒப்பந்தத்தில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை கொண்டு வருவது போல பஜாஜ் நிறுவனத்தின் மூலம் டிரையம்ப் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையில்தான் போட்டி ஏற்பட்டுள்ளது.
தற்போது பஜாஜ் - டிரையம்ப் பைக்குகளாக ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் ஆகிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு பைக்கிற்கும் ஒரே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. 398 சிசி, ஆயில்கூல்டு, ஃப்யூயல் இன்ஜெக்ஷன், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 40 எச்பி பவரையும் 37.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பைக்குகளும் டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்பீடு 900 மற்றும் ஸ்கிரம்பிளர் 900/1200 ஆகிய பைக்குகளை அடிப்பையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்க்க கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியாக பல அம்சங்கள் இருக்கிறது. யூஎஸ்டி ஃபோர்க்ஸ், பின்பக்கம் மோனோஷாக் சன்பென்சன், 2 வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ், எல்இடி லைட்டிங், டிராக்ஷன் கண்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, அலாய் வீல்களுடன் டியூப்லெஸ் டயர், 790மிமீ சீட் உயரம் ஆகியன உள்ளன.

இரு வண்டிகளிலும் சில வித்தியாசமான அம்சங்கள் இருக்கிறது. பிரேக்குகளை பொருத்தவரை ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக்கில் 320 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்பீடு 400 பைக்கில் 300 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் எடையை பொருத்தவரை ஸ்கிரம்பிளர் பைக் 179 கிலோ எடையும், ஸ்பீடு 400 பைக் 170 கிலோ எடையையும் கொண்டுள்ளது.
சர்வதேச மார்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக்கிலிருந்து இந்திய வெர்ஷன் பைக்கில் நம்பர்பிளேட், சேரி கார்டு, மற்றும் கிராப் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கிற்கான வாரண்டியை பொருத்தவரை 2 ஆண்டுகளுக்கு 16 ஆயிரம் கி.மீ சர்வீஸ் இடைவெளியுடன் அன்லிமிடெட் வாரண்டி வழங்கப்படுகிறது. இடையில் எந்த பிரச்சனை வந்தாலும் டிரைம்ப் நிறுவனமே சரி செய்து கொடுத்துவிடும்.

இந்த இரண்டு பைக்கில் ஸ்பீடு 400 பைக் வரும் இந்த மாதம் மத்தியில் ஷோரூம்களுக்கு விற்பனைக்கு வரும் ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பஜாஜ் நிறுவனம் மாதம் 5 ஆயிரம் பைக்குகள் வரை தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த பைக்குகளுக்கான புக்கிங் ஏற்கனேவ துவங்கிய நிலையில் ரூ 2ஆயிரம் கொடுத்து பலர் இந்த பைக்குகளை புக்கிங் செய்துள்ளனர். இதில் ஸ்பீடு 400 பைக்கின் டெலிவரி இந்த மாத மத்தியிலும், ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக்கின் டெலிவரி அக்டோபர் மாதமும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ஸ்பீடு 400 பைக்கின் விலை மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ2.33 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த பைக் ரூ2.23 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் பைக்கின் விலை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரையம்ப் பைக் மார்கெட்டில் ராயல் என்ஃபீல்டு மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இவ்வளவு குறைவான விலையில் டிரையம்ப் களம் இறங்கியதால் இனி மார்கெட்டில் ராயல் என்ஃபீல்டிற்கு மிகப்பெரிய போட்டி காத்திருப்பத தெளிவாக தெரிகிறது. ஹார்லி டேவிட்சன் பைக்கும் விற்பனையில் டஃப் கொடுக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் பைக்குகளுக்கு மார்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதன் அதிகமான விலை காரணமாக பலர் வாங்காமல் தவித்து வந்தனர். தற்போது இந்தியாவிலேயே அந்த பைக்கை தயாரித்து அதன் விலையை மிக குறைவாக அறிவித்துள்ளதால் இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









