ராயல் என்பீல்டுனு ஒரு கம்பெனியே இருக்க கூடாது! நம்பவே முடியாத குறைவான விலையில் வரும் பஜாஜ்-ட்ரையம்ப் பைக்!
இந்தியாவை சேர்ந்த பஜாஜ் (Bajaj) நிறுவனமும், இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ப் (Triumph) நிறுவனமும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணி இந்திய சந்தையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு 2 புத்தம் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
அவை ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) ஆகியவை ஆகும். இதில், ஸ்பீடு 400 பைக்கின் விலை (Price) 2.33 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பண்டிகை காலத்தையொட்டி, வரும் அக்டோபர் மாதம்தான் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கின் விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த 2 பைக்குகளுக்கும் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், ஸ்பீடு 400 பைக்கின் டெலிவரி (Delivery) பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ட்ரையம்ப் போன்ற ஒரு நிறுவனத்திடம் இருந்து வெறும் 2.33 லட்ச ரூபாய் என்ற விலையில் ஒரு பைக் வந்திருப்பது, இந்திய வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கே மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதைக்காட்டிலும் விலை குறைவான 2 புதிய பைக்குகளை பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணி களமிறக்கவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணி, இந்திய சந்தையில் 2 புத்தம் புதிய 250 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பைக்குகள் விற்பனைக்கு வந்தால், அவை ஸ்பீடு 400 பைக்கை விட விலை குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த தகவல், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அனேகமாக ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் ஆகிய 2 பைக்குகளின் டிசைன் (Design) அம்சங்கள்தான், 2 புதிய 250 சிசி பைக்குகளிலும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் வசதிகளில் (Features) மாற்றங்கள் செய்யப்படலாம். இங்கே மற்றொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனம் தற்போது பல்சர் 250 (Pulsar 250) மற்றும் டோமினார் 250 (Dominar 250) ஆகிய 250 சிசி பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்குகளில் உள்ள அதே இன்ஜின், ட்ரையம்ப் கூட்டணியில் வெளிவரவுள்ள 2 புதிய 250 சிசி பைக்குகளிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியின் மற்ற நிகழ்வுகளை பொறுத்தவரையில், புதிய ஸ்பீடு 400 பைக்கை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். செயல்திறன் மற்றும் டிசைன் என பல்வேறு அம்சங்களிலும் இந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இதேபோல் வாடிக்கையாளர்களும் கவரப்படலாம் என்பதால், இந்த பைக் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில், 398 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 40 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 37.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியிடம் இருந்து இன்னும் விலை குறைவான 250 சிசி பைக்குகள் விற்பனைக்கு வந்தால், அவை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த 2 புதிய பைக்குகளையும் பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணி களமிறக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த கூட்டணியின் அதிரடி நடவடிக்கைகள், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








