இந்தியாவை டார்க்கெட் செய்துள்ள மற்றொரு சீன பைக் நிறுவனம் இதுதான்!! ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் 4 பைக்குகள்...
சீன இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பெண்டா நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் 4 மோட்டார்சைக்கிள்களை வெளியீடு செய்துள்ளது. இதில் எல்.எஃப்.எஸ் 700 மோட்டார்சைக்கிளை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்துவிட்ட நிலையில், மீதி 3 மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி பார்க்கலாம்.
சீனாவில் ஹாங்க்ஷோ நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸேஜியாங் மாகாண சாங்லிங் பின்ஜியாங் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பிராண்ட் தான் பெண்டா ஆகும். பெண்டா எல்.எஃப்.எஸ் 700 ஆனது உயரம் அதிகம் கொண்ட ரோட்ஸ்டர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். ஆனால் மற்ற 3 பைக்குகளும் தாழ்வான உடலமைப்பை கொண்ட க்ரூஸர் ரகத்தை சேர்ந்தவைகளாகும்.

அவற்றின் பெயர்கள் எல்.எஃப்.சி700 (LFC700), டார்க் ஃப்ளாக் (Darkflag) மற்றும் வி302சி (V302C) ஆகும். இதில் எல்.எஃப்.சி700 க்ரூஸர் பைக் ஸ்டாண்டர்ட் மற்றும் ஃபேட் ரியர் டயர் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் சீனாவில் விற்பனையில் உள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சமே அதன் என்ஜின் தான். ஏனெனில் இந்த பைக்கில் 4 சிலிண்டர்களை கொண்ட 680சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 86 பிஎச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-இல் 60 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.
இது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றலே. ஃபேட் ரியர் டயர் வேரியண்ட்டில் 11,000 ஆர்பிஎம்-இல் 91 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 63 என்எம் டார்க் திறன் வரையில் என்ஜின் இயக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கின் மொத்த கெர்ப் எடை ஆனது 235 கிலோ ஆகும். எல்.எஃப்.சி 700 பைக்கின் டாப் ஸ்பீடு 195kmph ஆகும்.
தொழிற்நுட்ப அம்சங்களாக முழு-வண்ண டிஎஃப்டி திரை மற்றும் கோள வடிவில் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பிரேக்கிங் பணியை எல்.எஃப்.சி700 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் நிஸின் பிரேக்குகளும், டாப் வேரியண்ட்டில் பிரெம்போ பிரேக்குகளும் பொருத்தப்படுகின்றன. பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூவல்-சேனல் ஏபிஎஸ் இந்த பைக்கில் பொருத்தப்படுகிறது. சீனாவில் இந்த பெண்டா க்ரூஸர் பைக்கின் விலை 48,500 யுவான் ஆக உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5.57 லட்சம் ஆகும். பெண்டா நிறுவனம் தற்போது 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ள மற்ற 2 பைக்குகளும் எல்.எஃப்.சி700 பைக் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 2023 ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. மற்ற இரு பெண்டா பைக்குகளுள் ஒன்றான டார்க் ஃப்ளாகில் 496சிசி வி4 என்ஜின் பொருத்தப்படுகிறது.

டார்க் ஃப்ளாக்கில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 54.3 பிஎஸ் பவரையும், 7,500 ஆர்பிஎம்-இல் 42 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டார்க் ஃப்ளாக் க்ரூஸர் பைக்கின் எடையும் கிட்டத்தட்ட எல்.எஃப்.சி700 பைக்கிற்கு இணையாகவே உள்ளது. சஸ்பென்ஷனுக்கு டார்க் ஃப்ளாக் பைக்கில் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஏர் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகின்றன.

வி302சி பைக்கை பொறுத்தவரையில், இந்த க்ரூஸர் ரக பைக் ஆனது பெண்டா பிராண்டில் மட்டுமின்றி, நமது இந்திய சந்தைக்கு ஏற்கனவே பரீட்சையமான கீவே பிராண்டிலும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. வி302சி பைக்கில் 298சிசி வி-ட்வின் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 29.9 பிஎஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 26.5 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெறலாம்.


Click it and Unblock the Notifications








