வெறும் 200 ரூபாய்! இது சரியா வேலை செய்யலனா இன்ஜின் சீஸ் ஆயிரும்! இவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியாம போச்சே!
இந்தியாவில் பைக்குகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட உருவாகி விட்டது. ஒரு சில வீடுகளில், 2, 3 பைக்குகளை கூட வைத்துள்ளனர். அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்வதாக இருந்தால் கூட, பைக்குகளை எடுக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால் பைக்குகளை பற்றி சிறிய கேள்வி கேட்டால் கூட, பலருக்கும் பதில் தெரிவதில்லை.
உங்கள் பைக்குகளில் உள்ள பாகங்களை பற்றிய அறிவை நீங்கள் வளர்த்து கொள்வது மிகவும் முக்கியம். இதன் மூலம் பைக்குகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், நீங்களே சரி செய்து கொள்ள முடியும். தேவை இல்லாமல் மெக்கானிக்குகளிடம் பைக்கை எடுத்து சென்று, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே புரியாமல், அனைத்திற்கும் சரி... சரி... என தலையாட்டி விட்டு வருவதையும் இதன் மூலம் தடுக்கலாம். அதிலும் ஒரு சில மெக்கானிக்குகள் வாடிக்கையாளர்களிடம் பணம் பறிப்பவர்களாக உள்ளனர்.

அவர்களை போன்ற நபர்களிடம் உங்கள் பைக் சிக்கி கொண்டால், நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் வீணாகி விடும். எனவே பைக்குகளின் முக்கியமான பாகங்களை பற்றிய தகவல்களை எல்லாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் ஆர்வமாக இருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஏனெனில் பைக்குகளில் ஏர் ஃபில்டர்களின் (Air Filters) முக்கியத்துவத்தை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்வோம்.
ஏர் ஃபில்டர்கள் இவ்ளோ முக்கியமா!
உங்கள் பைக்கின் இன்ஜினில், காற்றும், எரிபொருளும் எரிக்கப்படும். இதன் மூலம்தான் நீங்கள் முன்னோக்கி செல்வதற்கான டார்க் மற்றும் பவர் உருவாக்கப்படுகிறது. இந்த பணி சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால், ஏர் ஃபில்டர்கள் மிகவும் முக்கியம். உங்கள் பைக்கின் இன்ஜினுக்கு உள்ளே அசுத்தமான காற்று நுழைவதை, ஏர் ஃபில்டர்கள் தடுக்கின்றன. காற்றில் உள்ள தூசி மற்றும் அசுத்தங்களை வடிகட்டு, சுத்தமான காற்றை இன்ஜினுக்கு உள்ளே அனுப்புவதுதான், ஏர் ஃபில்டர்களின் தலையாய பணி.

இன்ஜினுக்கு உள்ளே தூசிகளுடன் அசுத்தமான காற்று சென்று விட்டால், ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். இன்ஜினுக்கு உள்ளே எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமான காற்று செல்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் பைக்கின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அதேபோல் நல்ல மைலேஜூம் கிடைக்கும். மாறாக ஏர் ஃபில்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, அசுத்தமான காற்று இன்ஜினுக்கு உள்ளே சென்று விட்டால், செயல்திறன் குறைவதுடன், மைலேஜூம் வெகுவாக குறைந்து விடும்.
பைக் புகையை கக்குவதற்கு இதுவும் ஒரு காரணமா!
இன்ஜினுக்கு உள்ளே செல்லும் காற்றின் தரம் சிறப்பாக இல்லாவிட்டால், அதிக அளவிலான எரிபொருள் எரிக்கப்பட்டு விடும். சைலென்சர் வழியாக உங்கள் பைக் புகையை கக்குவதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். அத்துடன் தேவையில்லாமல் அதிக எரிபொருள் எரிக்கப்பட்டால், மைலேஜ் குறைந்து விடும். எனவேதான் பைக்குகளில் ஏர் ஃபில்டர்கள் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன.
ஏர் ஃபில்டர்களில் பிரச்னை இருந்தால், இன்ஜினுக்கு செல்லும் ஏர் ஃப்ளோ பாதிக்கப்படும். எனவே எரிபொருளை எரிக்கும் நிகழ்வு சரியாக நடைபெறாது. ஏர் ஃபில்டர் சரியாக செயல்படாவிட்டால், நமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே பிரச்னையான ஏர் ஃபில்டர்களை வைத்து கொண்டு, ஒருபோதும் பைக்கை ஓட்டாதீர்கள். அது உங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னமும் ஏர் ஃபில்டர்கள் முக்கியம் இல்லாதவை என நீங்கள் நினைத்தால், ஒரு விஷயத்தை சொல்லி கொள்கிறோம்.
இந்த பிரச்னை கூட வருமா!
தவறான ஏர் ஃபில்டர் காரணமாக, இன்ஜின் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன. எனவே ஏர் ஃபில்டர்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றி விடுங்கள். குறிப்பாக புழுதி பறக்கும் சாலைகளில் நீங்கள் அடிக்கடி பயணம் செய்ய கூடியவர் என்றால், ஏர் ஃபில்டர்களின் மீது அவ்வப்போது ஒரு கண் வைத்து கொள்ளுங்கள். ஏர் ஃபில்டர்கள் சுத்தமாக இருந்தால், உங்கள் பைக் இன்ஜினின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
இவ்ளோதானா!
பைக்குகளுக்கான ஏர் ஃபில்டர்கள், வெறும் 200 ரூபாய், 300 ரூபாய் என்ற அளவிலேயே கிடைக்கின்றன. தரம் மற்றும் மாடலை பொறுத்து விலையில் மாறுதல்கள் இருக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எப்படி பார்த்தாலும், பைக் ஏர் ஃபில்டர்களின் விலை குறைவுதான். எனவே அவற்றை சீரான இடைவெளிகளில் மாற்றி விடுங்கள். இந்த சிறிய செலவை செய்ய தயங்கினால், பைக் இன்ஜின் பெரிய செலவை வைத்து விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








