பின்னால பெருசா செலவு வைக்காம இருக்க பைக் வார்ம்-அப் ரொம்ப அவசியம்! இத செய்யறதால எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரிமா!
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கு முன் லேசாக உடலை வார்ம்-அப் செய்வதுபோல், டூ-வீலரை ஸ்டார்ட் செய்த உடன் அதை சில நிமிடங்கள் சூடேற விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நீங்க ஒரு இருசக்கர வாகன உரிமையாளராக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கானதுதான். இருசக்கர வாகன உரிமையாளர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு முன்னாதாக யாரேனும் ஒருவராவது உங்களிடம் இதை சொல்லி இருக்கலாம். அதாவது, பைக்கை இயக்க ஆரம்பிப்பதற்கு முன்னர், எஞ்ஜினை சற்று சூடாக்க வேண்டும் என சொல்ல கேட்டிருப்பீர்கள்.

இதை ஏன் செய்ய சொல்கிறார்கள் என உங்களுக்கு சந்தேகம் எழும்பி இருக்கலாம். மேலும், பைக்கை ஓட்டும்போதே அது தானாகவே சூடாகி விடுமே. எதற்காக தனியாக எஞ்ஜினை சூடேற்ற வேண்டும் என்பதும் ஒரு சிலரின் கேள்வியாக இருக்கின்றது. இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இத்துடன், பைக்கின் எஞ்ஜினை சூடாக்குவதற்கான நடைமுறைகள் என்ன என்பதையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஓர் வாகனத்தின் இதயம் எது என்றால் அது எஞ்ஜின்தான். இதை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு டூ-வீலர் உரிமையாளர்களின் மிக முக்கியமான கடமை ஆகும். பல்வேறு நகரும் பாகங்களால் ஆனதே இந்த எஞ்ஜின் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் உள்ள பாகங்கள் தொடர்ச்சியாக சீராக இயங்கினாலே டூ-வீலரால் எந்த சிக்கலுமின்றி பயணிக்க முடியும். எனவே இதில் உள்ள பாகங்களுக்கு லூப்ரிகேஷன் அத்தியாவசியமானதாக உள்ளது. லூப்ரிகேசன் பெரிய அளவில் உராய்வு இன்றி இயங்க உதவும்.
ரைடுக்கு பின்னர் இருசக்கர வாகனங்கள் ஓய்விற்கு செல்லும்போது அதில் உள்ள லூப்ரிகேஷன் சிஸ்டமும் ஓய்வு நிலைக்கு சென்று விடும். மீண்டும் வாகனம் இயங்கத் தொடங்கிய பின்னரே ஆயில் எஞ்ஜினின் அனைத்து பகுதிகளுக்கும் பரவ தொடங்கும். இந்த பணி தொடங்கிய உடனே வாகனத்தை இயக்குவதனால் பெரிய அளவிலான உராய்வு எஞ்ஜினில் ஏற்படும். காரணம் எஞ்ஜினின் அனைத்து பாகங்களுக்கு ஆயிர் சென்றிருக்காது. இதன் விளைவாக எஞ்ஜினில் உள்ள பாகங்கள் விரைவில் தேய்மானம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவேதான், எஞ்ஜினை ஸ்டார்ட் செய்த பின்னர் சிறிது நேரம் அது சூடாகும் வரை காத்திருக்க வேண்டும் என்கின்றனர். இதற்கு நாம் கொடுக்கும் இடைவெளியில் எஞ்ஜின் முழுவதும் ஆயிலால் லூப்ரிகேட் ஆகிவிடும். இதற்கு பின்னர் நாம் பைக்கை இயக்கினால் அது எந்த வித பாதிப்பையும் சந்திக்காது. குறிப்பாக, சிறந்த இயக்க திறனை அந்த வாகனம் வெளிப்படுத்தும். நமக்கே எஞ்ஜினின் சத்தத்தில் இருந்தும், அது வெளியேற்றும் திறனிலும் வித்தியாசம் தெரியும்.
"இல்லை நான் எஞ்ஜின் சூடேறும் வரை எல்லாம் காத்திருக்க மாட்டான். ஸ்டார்ட் பண்ண உடனே சர்ருனு போய்டுவேன்" இவ்வாறு செய்ய கூடிய நபராக நீங்க இருந்தால், விரைவில் உங்கள் பைக்கின் எஞ்ஜினின் காலாவதிக்கு நீங்களே காரணம். ஆமாங்க, ஏற்கனவே நாங்கள் கூறியதைப் போல், எஞ்ஜின் சரியாக லூப்ரிகேட் ஆகவில்லை என்றால் அது அதிக வேகத்தில் தேய்ந்து, ஆயுட்காலத்தை இழக்க நேரிடும். இதனால்தான் சில நிமிடங்கள் பைக்கை எடுக்கும் முன் எஞ்ஜினை சில நிமிடங்கள் சூடாக்குவது ரொம்ப ரொம்ப நல்லது.
பைக் எஞ்ஜினை விரைவில் சூடாக்க என்ன செய்யலாம்:
உடற்பயிற்சி செய்யும் முன் லேசாக உடலை எப்படி வார்ம்-அப் செய்வோமோ அதேபோல், எஞ்ஜினுக்கும் வார்ம்-அப் தேவை. பைக்கை ஸ்டார்ட் செய்து, லேசாக ஆக்சலரேஷனைக் கொடுக்க வேண்டும். 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆக்சலரேட் செய்யலாம். வாகனம் நகர்ந்துவிடாதபடி ஸ்டாண்ட் போட்டு இதை செய்ய வேண்டும். ஆக்சலரேஷன் கொடுக்காமலும் அப்படியே விட்டும்கூட எஞ்ஜினை சூடாக்கலாம். ஆரம்பத்தில் மிக மெல்லியதாக வரும் எஞ்ஜினின் சத்தம் சில நொடிகளில், சற்று அதிக சத்தத்துடன் இயங்கத் தொடங்கும்.
இது சற்று கூடுதலாகும் பட்சத்தில் வாகனம் செல்ல தயார் என அர்த்தம். இவ்வாறு அதன் ஒலி மாறும்போது டூ-வீலர் மிக சிறப்பான திறன் வெளிப்பாட்டை வழங்கும். இடையில் அடைத்து அடைத்து பயணிக்கவோ, அல்லது, சட்டென ஆஃப் ஆகுவதோ ஆகாது. மேலும் எஞ்ஜினின் ஆயுட்காலத்தையும் இதன் வாயிலாக அதிகரிக்க முடியும். இதுமட்டுமில்லைங்க, இவ்வாறு செய்வதன் வாயிலாக குறைந்த பராமரிப்பே அந்த டூவீலருக்கு போதுமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








