கிளாஸ் & மாஸ்... பெனெல்லியின் புதிய 752எஸ் பைக்: 2023 ஆட்டோ எக்ஸ்போ
கிரேட்டர் நொய்டாவில் நடைப்பெறும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பெனெல்லி 752எஸ் மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பெனெல்லி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்றான பெனெல்லி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இரு புதிய மோட்டார்சைக்கிள்களை பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தி உள்ளது. இதில் ஒன்று லியோன்சினோ 800. லியோன்சினோ 800 பைக்கை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பதிவிட்டுள்ளோம். மற்றொரு புதிய பெனெல்லி பைக் தான் 752எஸ் ஆகும்.

வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள பெனெல்லி 752எஸ் மோட்டார்சைக்கிளில் 754சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் லியோன்சினோ 800 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், கவர்ச்சிக்கரமான மாடர்ன் தோற்றத்தை பெனெல்லி 752எஸ் பைக் கொண்டுள்ளது.
அதற்கேற்ப உயர்த்தரத்திலான சஸ்பென்ஷன் மற்றும் டயர் பாகங்கள் இந்த பைக்கில் வழங்கப்படுவதால், 752எஸ் பைக்கில் மகிழ்ச்சிக்கரமான & சவுகரியமான பயணத்திற்கு எந்தவொரு குறையும் இருக்காது என பெனெல்லி நிறுவனம் கூறுகிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெனெல்லியின் மேற்கூறப்பட்ட 2 புதிய பைக்குகளில் 754சிசி, வாட்டர்-கூல்டு, இணையான-இரட்டை DOHC என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 75 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பெனெல்லி 752எஸ் பைக்கின் நீளம் 2,130மிமீ, அகலம் 810மிமீ, உயரம் 1,100மிமீ ஆகும். பைக்கின் வீல்பேஸ், அதாவது முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,460மிமீ ஆக உள்ளது.
தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி 180மிமீ உயரத்தில் உள்ளதால் நம்மூர் சாலைகளுக்கு ஏற்ற பைக் பெனெல்லி 752எஸ் ஆகும். பைக்கின் மொத்த எடை 226 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 14.5 லிட்டர்கள் ஆகும். தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது 810மிமீ உயரத்தில் உள்ளது. ட்ரெஸ்டிள் ஸ்டீல் ட்யூப் ஃப்ரேமில் உருவாக்கப்படும் இந்த பெனெல்லி பைக்கின் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 50மிமீ தலைக்கீழான மார்ஸோச்சி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

அதுவே பின்பக்கத்தில் சஸ்பென்ஷனுக்கு அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய ப்ரீலோடு வசதி கொண்ட கயாபா மோனோஷாக் உள்ளது. 752எஸ் பைக்கில் பிரேக்கிங் பணியினை முன் சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் 320மிமீ இரட்டை டிஸ்க் பிரேக்குகளும், பின் சக்கரத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 260மிமீ சிங்கிள் டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன. இவற்றுடன் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூவல்-சேனல் ஏபிஎஸ் உள்ளது.
பேனல்கள் அவ்வளவாக இல்லாத நாக்டு மோட்டார்சைக்கிளான இந்த பெனெல்லி பைக்கில் முகப்பு பகுதியில் ஹெட்லேம்ப் ஆனது இரு பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் தோற்றத்தில் மற்றொரு சிறப்பம்சமாக மேல்நோக்கி வளைக்கப்பட்ட மெகாபோன் எக்ஸாஸ்ட் குழாயினை சொல்லலாம். இவற்றுடன் முழு வண்ண டிஎஃப்டி திரையும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியில் உள்ளது.


Click it and Unblock the Notifications








